`மலிவான விளம்பரத்துக்காக தன் மீது வழக்கு': முத்த விவகாரத்தில் நடிகை ஷில்பா மனு

`மலிவான விளம்பரத்துக்காக தன் மீது வழக்கு': முத்த விவகாரத்தில் நடிகை ஷில்பா மனு

ஹாலிவுட் நடிகர் முத்தம் கொடுத்தது தொடர்பான விவகாரத்தில், மலிவான விளம்பரத்துக்காக தன் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என்று நடிகை ஷில்பா ஷெட்டி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2007-ம் ஆண்டு ராஜஸ்தானில் நடைபெற்ற எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகை ஷில்பா ஷெட்டி பங்கேற்றார். அப்போது அவருடன் கலந்துகொண்ட ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெரே மேடையில் அவரைக் கட்டியணைத்து முத்தம் கொடுத்தார். இந்தக் காட்சிகள் அப்போது பரபரப்பானது.

பொதுவெளியில் ஆபாசமாக நடந்துகொண்டதாக, நடிகை ஷில்பா ஷெட்டி மீது ஆல்வார் போலீஸார் வழக்குத் தொடர்ந்தனர். நடிகை ஷில்பாவின் கோரிக்கையை ஏற்று இந்த வழக்கு மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. நடிகை ஷில்பா, தனது மனுவில் ஹாலிவுட் நடிகர் முத்தமிட்டபோது, தடுக்கவில்லை என்றுதான் தன் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது என்றும் வழக்குத்தொடர பயன்படுத்திய சட்டப்பிரிவுகளின்கீழ் தான் எந்த குற்றமும் செய்யவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், புகார் அளிக்கப்பட்ட சட்டப் பிரிவுகளின்கீழ் அவர் குற்றம் ஏதும் செய்யவில்லை என்று கூறி வழக்கை ரத்து செய்து, ஷில்பா ஷெட்டியை விடுவித்து கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஆல்வார் போலீஸார் கடந்த ஏப்ரல் மாதம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

பொதுவெளியில் முத்தமிடுவதும் முத்தமிட அனுமதிப்பதும் தவறு என்றும் இந்த வழக்கில் நடிகை ஷில்பாவை விடுவித்தது தவறு என்றும் அவர்கள் மனுவில் கூறியிருந்தனர்.

இதற்கு நடிகை ஷில்பா ஷெட்டி பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் சார்பாக வழக்கறிஞர் பிரஷாந்த் பாட்டீல் தாக்கல் செய்துள்ள மனுவில், நடிகை என்பதால், பொதுவெளியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது தனக்குத் தெரியும் என்றும் ஹாலிவுட் நடிகர் முத்தமிடும்போது, தான் தடுக்கவில்லை என்பதுதான் தன் மீதான ஒரே குற்றச்சாட்டு என்றும் இதை, எந்த குற்றத்துக்கும் சதி செய்தவராகவோ, குற்றவாளியாகவோ கருத முடியாது என்றும் கூறியுள்ளார். புகார்தாரர்கள் மலிவான விளம்பரத்துக்காக நீதிமன்றத்தை அணுகுவதாகவும் அதனால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in