இளையராஜாவின் இசையில் இன்றும் வாழும் ‘என் உயிர் கண்ணம்மா!’

- சிவசந்திரன் இயக்கிய காதல் கவிதை!
என் உயிர் கண்ணம்மா
என் உயிர் கண்ணம்மா

காதலே வாழ்க்கை, காதலியே உயிர் என்று வாழ்ந்துகொண்டிருப்பதுதான் உண்மையான நேசத்தின் அடையாளம். ஆழமான பிரியத்துக்கான எடுத்துக்காட்டு. ஆனால், தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ இருக்கிற பொழுதுகளில் நம்மையும் மீறி சில தவறுகள் நடந்துவிடுவது உண்டு. அப்படியொரு தவறு, அந்தக் காதலை எங்கே கொண்டு போய் நிறுத்தியது... அதனால் அந்தக் காதலின் நிலை என்னானது என்பதை கவிதையாகச் சொன்ன கதைதான் ‘என் உயிர் கண்ணம்மா.’

தமிழும் கேரளமும் கலந்துகட்டி கொஞ்சிவிளையாடுகிற அந்தக் கிராமம், பூம்பாறை. அந்த அழகிய கிராமத்தில், அம்மு டீக்கடையும் ஹோட்டல் கடையும் வைத்திருக்கிறாள். அவளுக்கு உதவியாக வேலாயுதம் இருக்கிறார். அதே ஊரில், கண்ணம்மா தன் அப்பாவுடன் வாழ்ந்து வருகிறாள். கண்ணம்மாவை எப்படியாவது கல்யாணம் செய்துகொள்ளவேண்டும் என்று நினைக்கும் நல்லமுத்து, ஒருவிஷயத்தில் ஜெயிலுக்குப் போயிருக்கிறான். அவனுடைய அப்பா, பெரியசாமி ஊருக்குப் பெரியவராகவும் அடுத்தவர்கள் நன்றாக இருக்கவேண்டும் என்றும் விரும்புகிற அற்புத மனிதர்.

அம்முவுக்கு ஏற்கெனவே கல்யாணம் நடந்திருக்கிறது. ஆனால் திருமணமான முதல் நாளே, அவளுடைய கணவன் யாரையோ அடித்துப் போட்டுவிட்டு, எங்கோ ஓடிப்போகிறான். ‘போனவன் போனாண்டி’ என பல வருடங்களாகியும் வரவே இல்லை. இந்த நிலையில், லாரி டிரைவர் மாதவன், அம்முவை விரும்புகிறான். அவளைத் திருமணம் செய்ய ஆசைப்படுகிறான். ஆனால், எதற்கும் பிடி கொடுக்காமல் மறுத்துக் கொண்டே வருகிறாள் அம்மு.

அந்த ஊரில் இருக்கும் பணம் படைத்த மைனருக்கு அம்முவின் மீது ஒரு கண். எப்படியாவது அவளை அடையவேண்டும் என பார்க்கும்போதெல்லாம் தூபம் போடுகிறான். இந்த நிலையில், லாரி டிரைவர் மாதவன், தன் நண்பன் சண்முகசுந்தரத்தை அந்த ஊருக்கு அழைத்துக்கொண்டு வருகிறான். எவருமற்ற அனாதையான அவனுக்கு அங்கே வேலை வாங்கிக் கொடுக்கிறான். தங்குவதற்கு கண்ணம்மாவின் வீடு ஒன்றை ஏற்பாடு செய்து தருகிறான். சாப்பிடுவதற்கு அம்முவிடமும் சொல்லிவைக்கிறான்.

அந்த ஊருடன் கொஞ்சம்கொஞ்சமாக ஐக்கியமாகிறான் சண்முகசுந்தரம். அப்படியே கண்ணம்மாவின் மனதிலும் இடம்பிடிக்கிறான். கண்ணம்மாவும் சண்முகசுந்தரமும் ஒருவரையொருவர் மனதார விரும்புகிறார்கள்.

அந்த ஊர் மைனர், அம்மு ஆற்றில் குளிக்கும்போது, உள்நீச்சலடித்து, அம்முவின் ஆடையை கபளீகரம் செய்து சேட்டைகள் செய்துவிட்டு ஓடுகிறான். அப்போது அங்கே வரும் சண்முகசுந்தரம் தன் ஆடையைக் கொடுத்து அம்முவின் மானம் காக்கிறான். அவன் மீதான அன்பும் கரிசனமும் மரியாதையும் கூடுகிறது அம்முவுக்கு.

இந்தநிலையில், மது அருந்தும் வழக்கமில்லாத சண்முகசுந்தரம், ஒருநாள் மது அருந்த நேரிடுகிறது. முழு போதையில் யாரும் தெரியவில்லை. எதுவும் புரியவில்லை அவனுக்கு. அம்முதான் அவனைப் பார்த்துவிட்டு, அவனுடைய வீட்டில் சேர்க்கிறாள்.

ஆனால், தன்னருகில் இருப்பது கண்ணம்மா என நினைத்துக்கொண்டு, அவளை நெருங்குகிறான். அம்முவும், இவன் தன்னை விரும்புகிறான் என நினைத்து அவனுடன் உறவாடுகிறாள். இருவரும் தங்களை மறந்திருக்கும் அந்தத் தருணத்தில், கடைசியாக அவன்... ‘கண்ணம்மா கண்ணம்மா’ என பிதற்ற, அப்படியே நொறுங்கிப் போகிறாள் அம்மு.

சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் தவித்துக் கலங்கிக் கொண்டிருக்கிறாள் அம்மு. இது எதுவுமே தெரியாமல், தன் வீட்டில் ஓரமாகக் கிடந்த அம்முவின் தாலியை எடுத்துவந்து அவளிடம் கொடுக்கிறான் சண்முகசுந்தரம். அப்போதும் முந்தைய நாளின் இரவில், என்ன நடந்தது என்பது தெரியவில்லை அவனுக்கு. அதேசமயம், கனவில் கண்ணம்மா வந்தாள் என நினைத்துக்கொண்டிருக்கிறான்.

ஆனால், அந்த ஊர்ப்பெரியவர் பெரியசாமிக்கு இந்த விவரங்களெல்லாம் தெரியவருகிறது. இந்த நிலையில், அம்மு கர்ப்பமாகிறாள். ‘கர்ப்பத்துக்குக் காரணம் யார்?’ என்று ஊரும் பஞ்சாயத்தும் கேட்கிறது. அவள் சொல்ல மறுக்கிறாள். பிரசவ வலியும் வருகிறது. அப்போது சண்முகசுந்தரம்தான் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறான். வழியிலேயே குழந்தை பிறக்கிறது. அம்மு இறக்கிறாள். அந்தக் குழந்தையை அம்முவுக்குக் கொடுத்த வாக்குறுதிப்படி தான் வளர்ப்பது என முடிவு செய்கிறான்.

மீண்டும் ஊர் கூடுகிறது. பஞ்சாயத்து வைக்கிறது. பஞ்சாயத்தில், அம்முவுக்கும் சண்முகசுந்தரத்துக்கும் கள்ளத்தனமான உறவு இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், இதை மறுக்கிறான் சண்முகசுந்தரம். ஊர் வழக்கப்படி, காட்டில் உள்ள நடுக்கோயிலில் குழந்தையை வைக்கலாம் என்றும் புலிகள் நடமாட்டமுள்ள அந்தப் பகுதியில் குழந்தைக்கு ஏதுமாகவில்லை என்றால், நீ எந்தத் தவறும் செய்யவில்லை என்றும் பஞ்சாயத்து சொல்கிறது.

அதன்படி, சண்முகசுந்தரம், காட்டில் உள்ள நடுக்கோயிலில் குழந்தையை வைத்துவிட்டு, நடந்து வந்துகொண்டிருக்க, ஊர்ப்பெரியவர் பெரியசாமி, வெளியூருக்குச் சென்றுவிட்டு வருகிறார். இருவரும் பார்த்துக்கொள்ள, அங்கே குழந்தையை கோயிலில் வைக்கச் சொன்ன பஞ்சாயத்தை சண்முகசுந்தரம் சொல்ல, பெரியசாமி, நடந்தது என்ன என்பதையெல்லாம் சொல்லி, ‘’அந்தக் குழந்தைக்கு நீதான் தகப்பன்’’ என்று சொல்லி, குழந்தையை எடுத்து வரச் சொல்லுகிறார்.

குழந்தையை எடுக்கச் சென்றால், பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறது புலி. அந்தப் புலியைக் கடந்து, குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஊருக்குள் வருகிறான். உண்மையைச் சொல்கிறான். அவனை கண்ணம்மா ஏற்றுக் கொண்டாளா இல்லையா என்பதை, பதைபதைப்புடனும் அதேசமயம் கவிதை போலவும் சொன்னதுதான் ‘என் உயிர் கண்ணம்மா’.

சண்முகசுந்தரமாக பிரபு. அம்முவாக லட்சுமி. கண்ணம்மாவாக ராதா. அவரின் அப்பாவாக டெல்லிகணேஷ். பெரியசாமியாக விகே.ராமசாமி. அவரின் மகனாக ராதாரவி. ஊர் மைனராக ஜெய்கணேஷ். அவரின் கைத்தடியாக பாண்டு. லட்சுமி வைத்திருக்கும் ஹோட்டலின் உதவியாளராக சந்தானபாரதி. லாரி டிரைவர் மாதவனாக சிவசந்திரன்.

படத்தின் கதையும் கதைக்களமான லொகேஷனும் நம் மனதை அள்ளிக்கொண்டு போகும். திரையில் பார்க்கும்போதே அந்த லொகேஷன் ஏரியா முழுவதும் நமக்குள் ஒரு ஜில்லிப்பையும் சிலிர்ப்பையும் தந்துவிடும். போதாக்குறைக்கு தினேஷ்பாபுவின் ஒளிப்பதிவு, இன்னும் ரம்மியமாகக் காட்டியிருக்கும். எஸ்.எஸ்.சந்திரன் காமெடியும் படத்தில் உண்டு.

பிரபுவின் யதார்த்தமான நடிப்பும் ராதாவின் குறும்பான நடிப்பும் படத்துக்கு அழகூட்டியது. விகே.ராமசாமியின் பண்பட்ட நடிப்பும் ஜெய்கணேஷின் வில்லத்தனமும் அசத்தியது. டெல்லி கணேஷும் தன் நடிப்பால் மனதில் நின்றுவிடுவார்.

கேரளப் பெண்களைப் போல் உடுத்திக் கொண்டு, மலையாளமும் தமிழும் கலந்து பேசுகிற லட்சுமியின் பேச்சும், பார்வையும் அந்த நடையும் அப்படியே அச்சு அசல் கேரள அம்முவாகவே வாழ்ந்திருப்பார்.

ஏற்கெனவே திருமணமாகிவிட்டது என்கிற தயக்கம், லேசாக எட்டிப்பார்க்கும் ஆசை, அந்த ஆசையையும் தாண்டி ஏற்படும் சலனம், அந்தச் சலனத்தின் முடிவில், சண்முகசுந்தரத்தின் மனதில் இருப்பவள் கண்ணம்மாதான் என்பதை அறிந்ததும் வருகிற அதிர்ச்சி... ஒரே காட்சிக்குள் ஓராயிரம் எக்ஸ்பிரஷன்களைக் கொடுக்க லட்சுமியால்தான் முடியும்!

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரால் 1977-ம் ஆண்டு நடிகராக ’பட்டினப்பிரவேசம்’ படத்தில் அறிமுகமான சிவசந்திரன், பல படங்களில் நாயகனாகவும் கேரக்டர் நடிகராகவும் வில்லனாகவும் நடித்துவிட்டு, 1988-ம் ஆண்டு, அடுத்தகட்டமாக படத்தை இயக்கினார். அவர் இயக்கிய முதல் படம்தான் ‘என் உயிர் கண்ணம்மா’. ஆரூர்தாஸ் வசனம் எழுத, கதை, திரைக்கதை அமைத்து இயக்கினார் சிவசந்திரன்.

இசைஞானி இளையராஜாவின் இசை, படத்துக்கு இன்னொரு பெரிய பலம். படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள். அந்த ஐந்து பாடல்களுக்கான சூழலை இயக்குநர் சிவசந்திரன் சொல்ல, அடுத்த பதினைந்து நிமிடங்களில் ஐந்து பாடல்களுக்கும் டியூன் போட்டுக் கொடுத்தார் இளையராஜா. அத்தனைப் பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டானது. கவிஞர் வாலி பாடல்களை எழுதினார். 'பூம்பாறையில் போட்டு வச்ச பூங்குருவி/ வீம்பாகத்தான் சேர்ந்ததொரு ஆண் குருவி/ தன்னந்தனி ஆளா இவ நின்னிருந்தா சாமி/ இப்போ ரெண்டும் கெட்டு போனா இதுக்கென்ன வழி காமி’ என்ற பாடல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் பாடலை இளையராஜா பாடினார்.

'யாரைக் கேட்டு நீர்தான் மேகம் சேர்ந்தது/ யாரைக் கேட்டு தென்றல் பூவைச் சேர்ந்தது/ சேரும் வாழ்வின் நன்மை தீமை யார்தான் சொல்வதோ’ என்றொரு பாடல் படத்தின் கதையை ரெண்டே வரிகளில் சொன்னது.

‘மலையாளப் பட பாணியில் கதைக்கு அழுத்தம் கொடுத்து, காட்சிகளில் எந்தப் பதற்றமோ வேகமோ கொடுக்காமல் இயல்பாகப் பயணிக்கிறது’ என்று ‘என் உயிர் கண்ணம்மா’வுக்கு நல்ல விமர்சனங்களை பத்திரிகைகள் எழுதின. ரசிகர்களும் தெளிந்த திரைக்கதையில் அழுத்தமான நடிப்பில் வந்த இந்தப் படத்தைக் கொண்டாடினார்கள். பல தியேட்டர்களில் நூறு நாள் படமாக ஓடி மக்கள் மனதில் இடம்பிடித்தாள் ‘என் உயிர் கண்ணம்மா’.

படம் வெளியாகி, 35 ஆண்டுகளாகின்றன. பிரபு, லட்சுமி, ராதாவின் நடிப்பிலும் இளையராஜாவின் இசையிலும் ‘பூம்பாறையில் பொட்டு வச்ச பூங்குருவி’ பாடலிலும் இன்றைக்கும் வாழ்ந்துகொண்டிருக்கிறாள் ‘என் உயிர் கண்ணம்மா!’

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in