
மகள் அனோஷ்கா பிறந்தநாளை முன்னிட்டு, ஷாலினி அஜித் பகிர்ந்த லண்டன் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையவெளியில் வைரலாகி வருகின்றன.
நடிகர் அஜித் குமார் தனது குடும்பத்தோடு விடுமுறை பயணமாக லண்டனில் முகாமிட்டுள்ளார். அங்கு புத்தாண்டு மற்றும் குடும்ப விழாக்களை அவர்கள் கொண்டாடி வருகின்றனர். அண்மையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு அஜித் குடும்பத்தினரின் புகைப்படங்களை, ஷாலினி அஜித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதன் தொடர்ச்சியாக மகள் அனோஷ்கா பிறந்தநாள் கொண்டாட்ட தருணத்தின் பதிவுகளையும் தற்போது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
பொங்கலுக்கு வெளியாகவுள்ள அவரது ’துணிவு’ படத்துக்கான புரமோஷன் பணிகளில் படக்குழுவினரும், ரசிகர்களும் தீயாய் செயலாற்றி வருகையில், லண்டனில் மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக், மனைவி ஷாலினி ஆகியோருடன் லண்டனில் அமைதியாக உலவி வருகிறார் அஜித்.
தன்னுடைய திரைப்படம் உட்பட திரைவிழாக்கள் எதிலும் பங்கேற்பதை தவிர்த்து வரும் அஜித், தனக்கு பிடித்த பைக் பயணம் மற்றும் குடும்பத்தினருடன் செலவிடல் ஆகியவற்றை தவிர்க்காது பின்பற்றுகிறார். அதேபோல, சமூக ஊடகங்களில் பங்கேற்பதை விரும்பாத தனித்துவ கொள்கையையும் கொண்டிருக்கிறார். அந்த குறையை நிவர்த்திக்கும் வகையில் 2 மாதங்கள் முன்பாக இன்ஸ்டாகிராமில் அடியெடுத்து வைத்தார் ஷாலினி அஜித்.
அண்மையில் அஜித் குடும்பத்தினரின் புத்தாண்டு கொண்டாட்டத்தின் லண்டன் புகைப்படங்களை பகிர்ந்த ஷாலினி, தற்போது மகள் அனோஷ்காவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை பகிர்ந்து பெருமிதம் கொண்டிருக்கிறார். ஜன.3, அனோஷ்காவின் பிறந்தநாள் என்பதால் அது தொடர்பான படங்களை நேற்றிரவு வலையேற்றினார் ஷாலினி. மகளுடன் முத்தம் பரிமாறல் மற்றும் மகளை அணைத்தவாறு என 2 படங்களை ஷாலினி பகிர்ந்திருந்தார்.
துணிவு திரைப்படத்துக்கான வரவேற்பு உற்சாகத்தில் அஜித் தொடர்பான சகலத்தையும் கொண்டாடி தீர்க்கும் அவரது ரசிகர்கள், அனோஷ்கா பிறந்தநாள் படங்களையும் இணையத்தில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.