சர்ச்சைக்குரிய வசனம்: மன்னிப்பு கேட்டார் பிரபல ஹீரோ!

சர்ச்சைக்குரிய வசனம்: மன்னிப்பு கேட்டார் பிரபல ஹீரோ!

'கடுவா' படத்தில் சர்ச்சைக்குரிய வசனம் இடம்பெற்றுள்ளதாக எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், படத்தின் இயக்குநர் ஷாஜி கைலாஷும் ஹீரோ பிருத்விராஜும் மன்னிப்புக் கேட்டுள்ளனர்.

பிருத்விராஜ், விவேக் ஓபராய், சம்யுக்தா மேனன், அர்ஜுன் அசோகன் உட்பட பலர் நடித்துள்ள படம், ’கடுவா’. தமிழில், ‘வாஞ்சிநாதன்’, ‘ஜனா’, ‘எல்லாம் அவன் செயல்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ஷாஜி கைலாஷ் இதை இயக்கியுள்ளார். படத்தை பிருத்விராஜ் புரொடக்‌ஷனும் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனத்தின் லிஸ்டின் ஸ்டீபனும் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படம் கடந்த 7-ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஷாஜி கைலாஷ், பிருத்விராஜ்
ஷாஜி கைலாஷ், பிருத்விராஜ்

இந்தப் படத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளைக் காயப்படுத்தும் விதமான வசனங்கள் இடம்பெற்றுள்ளதாக சர்ச்சை எழுந்தது. மாற்றுத்திறனாளிகள் சங்கமும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதுதொடர்பாக, மாநில மாற்றுத்திறனாளிகள் ஆணையம், ’கடுவா’ இயக்குநர் ஷாஜி கைலாஷ், தயாரிப்பாளர்கள் லிஸ்டின் ஸ்டீபன், சுப்ரியா மேனன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதையடுத்து படத்தின் இயக்குநர் ஷாஜி கைலாஷும் பிருத்விராஜும் அந்த வசனங்களுக்காக மன்னிப்பு கேட்டுள்ளனர். இது தொடர்பாக இயக்குநர் ஷாஜி கைலாஷ் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’படத்தில் இடம்பெற்றுள்ள அந்த வசனம் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோரைக் காயப்படுத்தும் என்பது உண்மைதான். வில்லனின் கொடுமையை நம்ப வைக்க வேண்டும் என்பதற்காகவே அந்த வசனம் சேர்க்கப்பட்டது. மற்றபடி எந்த உள்நோக்கமும் இல்லை. இந்த வார்த்தைகள் உங்களுக்கு ஏற்பட்ட வலியைத் தீர்க்காது என்பது தெரியும். இந்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். இதைத் தனது சமூக வலைதளப்பக்கத்தில் நடிகர் பிருத்விராஜும் பகிர்ந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in