
அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான் நடிக்கும் படத்துக்கு ஜவான் என்று டைட்டில் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார், அட்லீ. இதில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். மற்றும் சான்யா மல்கோத்ரா, சுனில் குரோவர் உட்பட பலர் நடிக்கின்றனர். இதில் ஷாருக்கான் அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. நயன்தாரா விசாரணை அதிகாரியாக நடிக்கிறார். இதன் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன் புணேவில் தொடங்கியது. அதில் நயன்தாராவும் கலந்துகொண்டார்.
சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில், ஷாருக்கான் மகன் ஆர்யன் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதால், ஷூட்டிங் தடைப்பட்டது. பின்னர் ஷாருக், ’பதான்’ என்ற இந்திப் படத்தின் ஷூட்டிங்கிற்காக சென்றார். அது முடிந்த பின் மும்பையில் ஷூட்டிங் மீண்டும் தொடங்கியது.
இந்தப் படத்துக்கு லயன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாயின. ஆனால், இதன் டைட்டிலை ஜூன் முதல் வாரம் படக்குழு அறிவிக்க இருக்கிறது என்று கூறப்பட்டது. இந்நிலையில் படத்துக்கு ’ஜவான்’ என தலைப்பு வைத்திருப்பதாகவும் விரைவில் இதுபற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூடவே டீசரும் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.