விஜய் சேதுபதியுடன் நடிகர் ஷாருக் கான்: வைரலாகும் புகைப்படங்கள்

விஜய் சேதுபதியுடன் நடிகர் ஷாருக் கான்: வைரலாகும் புகைப்படங்கள்

நயன்தாரா - விக்னேஷ் திருமணத்தின்போது நடிகர் ஷாருக் கான், விஜய் சேதுபதி, அனிருத், அட்லீ அகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஜூன் மாதம் 9-ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இந்தத் திருமணத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்தி நடிகர் ஷாருக் கான், இயக்குநர்கள் மணிரத்னம், அட்லீ, தயாரிப்பாளர் போனி கபூர், நடிகர்கள் சூர்யா, கார்த்தி உள்ளிட்ட திரையுலகினர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

திருமணத்துக்குப் பின்னர் நயன் - சிவன் தம்பதி ஹனிமூனுக்காக தாய்லாந்து சென்றது. அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் வெளியிட்டிருந்தார். பின்னர் சென்னை திரும்பிய நயன்தாரா, ‘ஜவான்’ படப்பிடிப்பில் பங்கேற்றார்.

திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆன நிலையில், ’சில சிறந்த தருணங்களைப் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி’ என்று குறிப்பிட்டு திருமணத்தின்போது ஷாருக் கான், ரஜினிகாந்த் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் ஷாருக்கான் நயன்தாராவைக் கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்த புகைப்படங்களையும் ரஜினிகாந்த், நயன்தாராவின் கையைப் பிடித்து வாழ்த்துக் கூறிய புகைப்படங்களையும் வெளியிட்டிருந்த விக்னேஷ் சிவன், இப்போது ஷாருக்கான், அட்லீ, அனிருத், விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா ஆகியோருடன் திருமணத்தின்போது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான் நடிக்கும் ‘ஜவான்’ படத்தில், விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படும் நிலையில் இந்தப் புகைப்படங்கள் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in