லதா மங்கேஷ்கருக்கு மனம் நெகிழ துவா செய்த ஷாருக்கான்: கொண்டாடும் ரசிகர்கள்

லதா மங்கேஷ்கருக்கு மனம் நெகிழ துவா செய்த ஷாருக்கான்: கொண்டாடும் ரசிகர்கள்

மறைந்த பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் உடலுக்கு நடிகர் ஷாருக்கான் அஞ்சலி செலுத்திய நிகழ்ச்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் இசைக்குயில் என்று போற்றப்பட்டவர் பாடகி லதா மங்கேஷ்கர் (92). கரோனா மற்றும் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட அவர், மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சையில் இருந்த அவர், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை (பிப். 6) மரணம் அடைந்தார். அவர் மறைவுக்கு நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், இசைக் கலைஞர்கள் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

ஷாருக் கான், பூஜா தத்லானி
ஷாருக் கான், பூஜா தத்லானி

பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் அவர் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் முழு அரசு மரியாதையுடன் அவர் உடல், மும்பை சிவாஜி பார்க் மைதானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரது மறைவையொட்டி இரண்டு நாட்கள் துக்கம் அனுஷ்டிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தி நடிகர் ஷாருக்கானும் அவர் மானேஜர் பூஜா தத்லானியும் லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி செலுத்தினர். அப்போது நடிகர் ஷாருக்கான், துவா வாசிப்பது போலவும் பூஜா வணங்குவது போலவும் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு `இதுதான் இந்தியா' என்றும் மத நல்லிணக்கத்திற்கான எடுத்துக்காட்டு இது என்றக் கருத்துக்களோடும் இணையவாசிகள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்தப் படத்தை ட்விட்டரில் பகிர்ந்த நடிகை குஷ்பு, ‘இதுதான் என் இந்தியா’எனக் கூறியுள்ளார்.

இதற்கிடையே, அஞ்சலி செலுத்திய நடிகர் ஷாருக் கான் முகக்கவசத்தை விலக்கி காற்றில் ஊதுவது போல பாவனை செய்ததை, அவர் சிதையில் எச்சில் துப்பியதாகக் கூறி சிலர் சர்ச்சையை கிளப்பினர். அதற்கு நடிகர் ஷாருக்கான் ஆதரவாளர்கள் மறுப்புத் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in