ஷாருக் கானுக்குக் கரோனா: பார்ட்டியில் பங்கேற்ற 55 நடிகர், நடிகைகளுக்கு பாதிப்பு?

ஷாருக் கானுக்குக் கரோனா: பார்ட்டியில் பங்கேற்ற 55 நடிகர், நடிகைகளுக்கு பாதிப்பு?

பிரபல இந்தி நடிகர் ஷாருக் கான், நடிகை கத்ரினா கைஃப் ஆகியோருக்குக் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரண் ஜோஹரின் பிறந்த நாள் பார்ட்டியில் ஷாருக் கான் கலந்துகொண்ட நிலையில், அதில் பங்கேற்ற 55 நடிகர், நடிகைகளுக்கும் தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. குறிப்பாக மும்பையில் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பிரபல இந்தி நடிகர்கள் ஷாருக் கான், கார்த்திக் ஆர்யன், ஆதித்யா ராய் கபூர், நடிகை கத்ரினா கைஃப் ஆகியோருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நடிகை கத்ரினா கைஃபுக்குச் சில நாட்களுக்கு முன்பே கரோனா பாதிப்பு ஏற்பட்டது என்றும் இப்போது அவர் தனிமைப்படுத்தலை முடித்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது. ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் ஜோடியாக நடிக்கும் ’மெர்ரி கிறிஸ்துமஸ்’ படத்தின் ஷூட்டிங்கில் கத்ரினா கடந்த வாரம் இணைந்திருக்க வேண்டும். தொற்று உறுதி செய்யப்பட்டதால் அந்தப் படப்பிடிப்பைத் தள்ளி வைத்துள்ளனர்.

கேத்ரினா கைஃப்
கேத்ரினா கைஃப்

இந்நிலையில், பிரபல இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர், தனது 50-வது பிறந்த நாளை முன்னிட்டு, ஸ்டூடியோ ஒன்றில் பிரம்மாண்ட பார்ட்டி ஒன்றை நடத்தியுள்ளார். கடந்த மே 25-ம் தேதி நடந்த இந்த பார்ட்டியில், ஷாருக் கான், சல்மான் கான், ஆமிர் கான், சைஃப் அலிகான், கரீனா கபூர் உட்பட சினிமா மற்றும் சின்னத்திரையைச் சேர்ந்த சுமார் 120 பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இவர்களில் 55 நடிகர், நடிகைகளுக்குக் கரோனா பாதிப்பு ஏற்பட்டதாகவும் அவர்கள் யாரும் வெளியே சொல்லவில்லை என்றும் கூறப்படுகிறது. நடிகர் கார்த்திக் ஆர்யன் இந்த விழாவுக்குச் செல்லவில்லை என்றாலும் இதில் கலந்துகொண்ட நடிகை ஒருவர் மூலம் அவருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரண் ஜோஹர் பார்ட்டியில் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய்
கரண் ஜோஹர் பார்ட்டியில் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய்

கரோனா தொற்று அதிகரித்துவருவதை அடுத்து மும்பை மாநகராட்சி, சினிமா ஸ்டூடியோக்களுக்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அங்கு ஆடம்பரமான விருந்து நிகழ்ச்சிகளையோ, விழாக்களையோ நடத்தக் கூடாது என்றும் அப்படி நடத்தினால் அதுபற்றி முன்பே தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் மும்பை மாநகராட்சி கோரிக்கை வைத்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in