‘நிழல் நிஜமாகிறது’ : கம்பன் ஏமாந்து 45 ஆண்டுகள்!

‘டைரக்‌ஷன் டச்’சில் அசத்திய கே.பாலசந்தர்!
‘நிழல் நிஜமாகிறது’ : கம்பன் ஏமாந்து 45 ஆண்டுகள்!

தானே கதை எழுதும் திறனைக் கொண்டிருந்தாலும், வேறொருவரின் கதையைத் தேர்வு செய்து படமாக்குகிற குணமும் கொண்ட இயக்குநர்கள் நம் தமிழ் சினிமாவில் ஏராளம். இயக்குநர் மகேந்திரன், இப்போது வெற்றிமாறன் என பலரும் அப்படி பிறரின் கதைகளை எடுத்தும் தாமாகவே கதை உருவாக்கியும் வெற்றிகண்டவர்கள்.

கே.பாலசந்தரும் அப்படித்தான்! வேற்றுமொழியில் வந்த படங்களை ரீமேக் செய்து, அதில் தனக்கென இருக்கிற ‘கே.பி.டச்’ என்கிற விஷயங்களையெல்லாம் சேர்த்து, நகாசு பண்ணி, ரீமேக் படங்களாக இல்லாமல், புதியதொரு உணர்வைத்தூண்டுகிற படங்களாகவே வழங்கிவிடுவார். தெலுங்கில் கே.விஸ்வநாத் செய்த படத்தை ‘மூன்று முடிச்சு’ என இயக்கினார். இந்தியில் வந்த படத்தை ‘தில்லுமுல்லு’வாக்கினார். அதேபோல், மலையாளத்தில் வந்த படத்தை, ‘நிழல் நிஜமாகிறது’ என்றாக்கினார்.

சினிமாவில், கதை சொல்லும் விதத்தை, ‘ட்ரீட்மென்ட்’ என்றும் ‘பிரசன்ட் செய்யும் விதம்’ என்றும் சொல்லுவார்கள்.’அடிமைகள்’ என்று 1969-ம் ஆண்டு வெளியான மலையாளப் படத்தின் கதையால் ஈர்க்கப்பட்ட பாலசந்தர், ஒன்பது வருடங்கள் கழித்து, அந்தக் கதையின் உரிமையை வாங்கி, தமிழ் சினிமாவுக்கும் தனக்கும் ஏற்றது போல் அப்படியே அந்தக் கதையை உள்வாங்கி, புத்துருவம் கொடுத்தார். அதுதான், ‘நிழல் நிஜமாகிறது’.

தன் ஆசைகளையும் விருப்பங்களையும் எதிர்பார்ப்புகளையும் கனவுகளாக்கி அதில் சுகம் காண்பவள் திலகம். ஆனால், பரம ஏழை. கிழிந்த புடவையும் ஜாக்கெட்டும்தான் அவள் உடலுக்குப் பாதுகாப்பு. திலகத்தின் மாமா, அவளை வேறொரு ஊருக்கு அழைத்து வந்து, ஒரு வீட்டில் வேலை செய்யச் சேர்த்துவிடுகிறார். அங்கே, சலம் என்பவனும் அவனின் தங்கை இந்துமதியும் வசிக்கிறார்கள். அங்கே இன்னொருவனும் வேலை செய்கிறான். அவனுக்குக் காது கேட்காது. அவனுடைய அம்மா உட்பட, எல்லோருமே அவனை ‘செவிடன்’ என்றுதான் கூப்பிடுகிறார்கள்.

சலத்தின் நண்பன் சஞ்ஜீவி அந்த ஊருக்கு, வேலை விஷயமாக வருகிறான். தன் வீட்டுக்குப் பக்கத்திலேயே வீடு பார்த்து அவனைக் குடிவைக்கிறான் சலம். சதாசர்வ காலமும் ஜொள்ளுவிட்டுக் கொண்டும், ஆபாசமான புகைப்படத்தைப் பார்த்தாலே சொக்கி மயங்கிக் கிறங்கியுமாக இங்கும் அங்கும் அலைகிற மன்மத நாயுடு எனும் வயதானவரும் அந்த ஊரில் இருக்கிறார்.

இந்துமதிக்குத் திருமணம் செய்துகொள்வதில் விருப்பமே இல்லை. ஒட்டுமொத்தமாக, பொத்தாம்பொதுவாக ஆண்களையே வெறுக்கிறாள். தங்கைக்குத் திருமணம் செய்துவிட்டுத்தான், தனக்குத் திருமணம் என்று காத்திருக்கிறான் சலம். இந்தநிலையில், வந்ததும் வராததுமாக, சஞ்ஜீவியும் இந்துமதியும் முட்டிக்கொள்கிறார்கள். கம்யூனிஸ சித்தாந்தங்கள் கொண்ட அவனையும் அவனுடைய பேச்சுகளும் இந்துமதிக்கு கொஞ்சம்கூட பிடிக்கவில்லை. இருவருக்கும் மத்தியில் சலம் அல்லாடுகிறான். ஆனாலும் இந்துமதிக்கு சஞ்ஜீவி மீது ஒரு ஈர்ப்பு, காதல். அதேபோல், சஞ்ஜீவிக்கும் இந்துமதி மீது காதல், விருப்பம். வெளியே சொல்லிக்கொள்ள இருவருக்கும் ஈகோ தடுக்கிறது.

இது ஒருபக்கமிருக்க, திலகத்தின் மீது ஆசை செவிடனுக்கு. அதேபோல் சலமும் அவள் மீது ஆசைப்படுகிறான். முன்னது... காதல். பின்னது... காமம்! காதலைப் புரிந்துகொள்வதற்கு, சலத்தின் ஆசைவார்த்தைகளை காதல் என்று நம்பி, தன்னையே இழக்கிறாள் திலகம். கர்ப்பமுமாகிறாள். இதைச் சொன்னதும் அவனுடைய குணம் வெட்டவெளிச்சமாகிறது. இதையெல்லாம் சஞ்ஜீவியிடம் சொல்லி அழுகிறாள் திலகம்.

திலகம் கர்ப்பமானதற்கு சலம்தான் காரணம் என்பதை செவிடன் கண்ணால் பார்த்துவிடுகிறான். அதேபோல், திலகமே சஞ்ஜீவியிடம் சொல்லி நியாயம் கேட்கிறாள். திலகத்தின் கர்ப்பத்துக்கு சஞ்ஜீவிதான் காரணம் என தப்பர்த்தம் பண்ணிக்கொண்ட இந்துமதி, திலகத்தை வீட்டைவிட்டே துரத்துகிறாள். சஞ்ஜீவி அவளுக்கு வீடு பார்த்து குடிவைக்கிறான். கூடவே, துணைக்கு செவிடனையும் அமர்த்துகிறான்.

அவளுக்கு வரும் தொந்தரவுகளையெல்லாம் ஒற்றை ஆளாக இருந்து சமாளித்து காபந்து செய்கிறான் செவிடன். குழந்தையும் பிறக்கிறது. ஒருகட்டத்தில், திலகத்தின் குழந்தைக்கு சஞ்ஜீவி அப்பா இல்லை என்பதும், தன் அண்ணனே காரணம் என்பதும் இந்துமதிக்குத் தெரியவருகிறது. திலகத்தை ஏற்றுக்கொண்டு, வீட்டுக்கு அழைத்துச் செல்ல, மேளதாளத்துடன் எல்லோரும் வருகிறார்கள். அப்போது திலகம் எடுக்கும் முடிவுதான் ‘நிழல் நிஜமாகிறது’.

சஞ்ஜீவியாக கமல். சலம் கதாபாத்திரத்தில் சரத்பாபு. இந்துமதியாக சுமித்ரா. செவிடனாக அனுமந்து. அவன் அம்மாவாக சுந்தரிபாய். திலகம் மாமாவாக ஒருவிரல் கிருஷ்ணாராவ். மன்மத நாயுடுவாக மெளலி. திலகமாக, ஷோபா!

ஷோபா
ஷோபா

குழந்தை நட்சத்திரமாக மலையாளப் படத்தில் அறிமுகமாகி நடித்து வந்த ஷோபாவுக்கு, இதுதான் முதல் படம். படத்தின் மைய நாயகியே ஷோபாதான். குறும்பு விழிகள் படபடக்க, அவரின் சோகத்தையெல்லாம் அவரின் குரலே முக்கால்வாசி நடித்துவிடும். நீளமான மூக்குக் கண்ணாடியுடன் வலம் வரும் சுமித்ரா, கடுகடு குணமும், காரமான வெடுக்வெடுக் பேச்சும் என கேரக்டராக கலக்கியிருப்பார். சரத்பாபுவும் தன் பங்குக்கு சிறப்பாக நடித்திருப்பார். கமலும் அவரின் கம்யூனிஸ கொள்கைகளும் பரதமும் என கச்சிதமாகச் செய்திருப்பார்.

‘’எல்லாரும் உன்னை செவிடன் செவிடன்னு கூப்புடுறாங்களே. உங்க அம்மா உனக்குன்னு பேர் வைச்சிருப்பாங்க. அதை கேட்டுட்டு வந்து சொல்லு’’ என்று கமல் சொல்லுவதும் அனுமந்து திரும்பவும் வந்து, ‘’அம்மாகிட்ட கேட்டேன். என் பேரு காசி’’ என்று சொல்ல, ‘’இனிமே உன்னை காசின்னுதான் கூப்பிடுவேன்’’ என்று கமல் சொல்ல, அனுமந்து மட்டுமின்றி, படம் பார்க்கிற அனைவரும் நெகிழ்ந்துதான் போனோம்.

பனியனில், ஷோபாவின் கை அச்சு கொண்டதை துவைக்காமல் பொக்கிஷமாக வைத்திருப்பதும் மார்பில், ‘திலகம்’ என்று பச்சை குத்திக்கொண்டிருப்பதும் கவிதையான காட்சிகள். கமலின் சிகரெட் லைட்டரை சுமித்ரா, அவரின் நினைவாக எடுத்து ஒளித்துவைத்திருப்பதும் அதை ஷோபா போட்டுக்கொடுப்பதும் கமல் சுமித்ராவிடம் அத்துமீறி உண்மையை அறிந்துகொள்வதும், பாலசந்தர் ‘டச்’கள்.

ஷோபா, தன்னை ஒரு மகாராணி போல் நினைத்துக்கொண்டு, தவறு செய்பவர்களுக்கு ஒவ்வொரு விதமான தண்டனைகளை வழங்குகிற சிந்தனைகளும் மலையாளப் படத்தில் இல்லாத கே.பி. டைரக்‌ஷன் டச்!

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசை. கவியரசு கண்ணதாசன் பாடல்கள். இரண்டே இரண்டு பாடல்கள்தான். எஸ்பி.பி-யும் வாணிஜெயராமும் ‘இலக்கணம் மாறுதோ’ பாடலைப் பாடியிருப்பார்கள். ‘கம்பன் ஏமாந்தான்’ பாடலை எஸ்பி.பி. பாடியிருப்பார். இரண்டு பாடல்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. அன்றைய காலகட்டத்தில், கோயில் திருவிழாவில் நடைபெறும் பாட்டுக்கச்சேரிகளில், இந்தப் பாடல்களை எப்போது பாடுவார்கள் என காத்திருந்து ரசித்தார்கள் மக்கள். அதேபோல், எஸ்பி.பி-யின் கச்சேரிகளில், ‘கம்பன் ஏமாந்தான்’ என்று ஆரம்பிக்கும்போதே, கரவொலி விண்ணைத் தொடும்.

‘மன்மத நாயுடு’ கேரக்டரில் மெளலிக்கு திரையில் இதுவே முதல் படம். மனிதர் வெளுத்து வாங்கியிருப்பார். அவர் வருகிற காட்சிகளிலெல்லாம், அவருடைய காமம் குறித்து ஜொள்ளும் ஏக்கமும் வெளிப்படும். ‘’திலகத்தோட கர்ப்பத்துக்கு சஞ்ஜீவியும் காரணம் இல்ல, சலமும் காரணம் இல்ல, செவிடனும் காரணம் இல்ல. பேசாம, என்னைச் சொல்லிடுங்களேண்டா’’ என்று பெருமையுடனும் அலட்டலுடனும் சொல்லும் காட்சி, மெளலியை தனித்து அடையாளம் காட்டியது.

சுந்தரிபாயும் அவர் வெற்றிலையைக் குதப்பிக் கொண்டு குடுகுடுவென பரபரவென வந்துவந்து பேசிச் செல்வதும் அழகான பாத்திரப் படைப்பு. கமல், சுமித்ரா, சரத்பாபு என்றெல்லாம் நடித்தாலும் ஷோபாவும் அனுமந்துவும் நம் மனதை மொத்தமாக அள்ளிக்கொண்டுவிடுவார்கள். திலகத்துக்காக, எதையும் செய்யத்தயாராக இருக்கிற காசி என்கிற செவிடன் கதாபாத்திரத்தை, அனுமந்துவைத் தவிர வேறு எவரையும் நினைத்துக் கூட பார்க்கமுடியாது!

கறுப்பு வெள்ளைப் படங்கள் மீது மாறாக் காதல் கொண்டிருந்த கே.பாலசந்தரின் ஓவிய காவியங்களில் ‘நிழல் நிஜமாகிறது’ திரைப்படமும் முக்கியமான படைப்பு.

கலாகேந்திரா மூவிஸ் தயாரித்த ‘நிழல் நிஜமாகிறது’ படத்தின் திலகத்தையும் செவிடன் காசியையும் மறக்கவே முடியாது நம்மால்! 1978-ம் ஆண்டு, மார்ச் 24-ம் தேதி வெளியானது ‘நிழல் நிஜமாகிறது’. படம் வெளியாகி, 45 ஆண்டுகளாகின்றன. இன்னமும் ‘கம்பன் ஏமாந்தான்’ பாடலை அலுக்காமல் கேட்டுக்கொண்டே இருக்கிறோம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in