ஹிஜாப் விவகாரம்: கங்கனா கருத்துக்கு ஷபானா ஆஸ்மி பதிலடி

ஹிஜாப் விவகாரம்: கங்கனா கருத்துக்கு ஷபானா ஆஸ்மி பதிலடி

ஹிஜாப் விவகாரத்தில் நடிகை கங்கனா ரனாவத் கருத்துக்கு, நடிகையான ஷபானா ஆஸ்மி பதிலடி கொடுத்துள்ளார்.

கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பி, குந்தாப்புரா அரசு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர அக்கல்லூரி முதல்வர் தடை விதித்து உத்தரவிட்டார். அதைமீறி மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தனர். அவர்களை கல்லூரியின் நுழைவு வாயிலிலேயே முதல்வர் தடுத்து நிறுத்தினார். இதை கண்டித்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த மாணவிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்து மாணவ-மாணவிகள் காவி துண்டுடன் கல்லூரிக்கு வந்தனர். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது நாடு முழுவதும் பரபரப்பானது.

இதற்கிடையே இஸ்லாமிய மாணவிகள் 18 பேர், நீதிமன்றத்துக்குச் செல்ல, இந்த வழக்கில் இடைக்கால உத்தரவை பிறப்பித்த உயர் நீதிமன்றம் வழக்கு நிலுவையில் இருக்கும்வரை மாணவர்கள் மதம் சார்ந்த எந்த ஆடையையும் அணிய அனுமதிக்க முடியாது என்றது.

இந்நிலையில், எழுத்தாளர் ஆனந்த் ரங்கநாதன் தன் ட்விட்டர் பக்கத்தில், இரண்டு விதமான புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். அதில், ‘‘ஈரான், 1973 மற்றும் இப்போது. 50 ஆண்டுகளில் பிகினி முதல் புர்கா வரை. வரலாற்றில் இருந்து பாடம் கற்காதவர்கள் அதைத் திரும்பத் திரும்பச் செய்ய நேரிடும்’’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்த ட்வீட்டை ஸ்கிரீன்ஷாட்டுடன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள, நடிகை கங்கனா ரனாவத், ’‘நீங்கள் தைரியத்தை காட்ட விரும்பினால், ஆப்கானிஸ் தானில் புர்கா அணியாமல் இருங்கள். உங்களை ஒரு கூண்டுக்குள் அடைத்துக்கொள்ளாமல், விடுவித்துக் கொள்ள கற்றுக்கொள்ளுங்கள்’’ என்று கூறியுள்ளார்.

கங்கனா, ஷபானா
கங்கனா, ஷபானா

கங்கனாவுக்கு பதிலளித்துள்ள பாலிவுட் நடிகை ஷபானா ஆஸ்மி, ’‘தவறாக இருந்தால் என்னைத் திருத்தவும். ஆப்கானிஸ்தான் ஒரு மதச்சார்புள்ள நாடு. கடைசியாக நான் சரிபார்த்தபோது, இந்தியா மதச்சார்பற்ற ஜனநாயக நாடாக இருந்தது?!!!" என்று கங்கனாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

Related Stories

No stories found.