சினிமா படப்பிடிப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பிரபல இந்தி ஹீரோ ரன்பீர் கபூர், நடிகை ஷ்ரத்தா கபூர் நடிக்கும் படத்தை லவ் ரஞ்சன் இயக்கி வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் ஷூட்டிங், மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள சித்ரகூட் படப்பிடிப்பு தளத்தில் நடந்து வந்தது. நேற்று மாலை திடீரென இந்த தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
இதனால், கரும்புகை பரவியதால், அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலம் ஆனது. இதுபற்றிய புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வெளியாயின. இதையடுத்து பத்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தன. இரவு 10.30 மணிக்கு தீ முழுவதும் அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் 32 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதுபற்றி கூப்பர் மருத்துவமனை மருத்துவர் சதாபுலே கூறும் போது, ``தீ விபத்தில் சிக்கி, சிகிச்சைக்காக கொண்டு வரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார்'' என தெரிவித்துள்ளார்.
நடிகர் ரன்பீர் கபூரும் ஷ்ரத்தா கபூர் ஸ்பெயினில் நடந்த இந்தப் படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்றுவிட்டு சமீபத்தில்தான் மும்பை திரும்பினர். அவர்கள் படிப்பிடிப்பில் கலந்து கொள்ள இருந்த நிலையில், தீ விபத்து ஏற்பட்டு உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.