‘சேத்துமான்’ - உணவு அரசியல் பேசும் உணர்விழைப் பின்னல்

‘சேத்துமான்’ - உணவு அரசியல் பேசும் உணர்விழைப் பின்னல்

உணவு அரசியலில் துண்டாடப்படும் ஒரு தாத்தா - பேரனின் வாழ்க்கைதான் மே 27-ல் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் ’சேத்துமான்’ திரைப்படத்தின் கதை.

தமிழகத்தின் மேற்குப் பகுதியில் ஒரு கிராமத்தில் ஊருக்கு வெளியே வாழும் பூச்சியப்பன் (மாணிக்கம்) கூடை, முரம் போன்ற பொருட்களைத் தயாரித்து விற்கும் தொழிலில் ஈடுபடுகிறார். அதோடு ஊர் பண்ணையாரான வெள்ளையனுக்கு (பிரசன்னா பாலச்சந்திரன்) ஏவல் பணி செய்கிறார். பூச்சியப்பனின் பேரன் குமரேசன் அந்த ஊரில் உள்ள ஒன்றிய ஊராட்சிப் பள்ளியில் படிக்கிறான். பூச்சியப்பனின் மகன் மாட்டிறைச்சிக்காக மாட்டைக் கொன்றுவிட்டார்கள் என்னும் குற்றச்சாட்டின் பெயரில் நடந்த மோதலில் கொல்லப்படுகிறார். மருமகளும் இறந்துவிடுகிறார். மனைவியையும் மகனையும் இழந்துவிட்ட பூச்சியப்பனும் பெற்றோரை இழந்துவிட்ட குமரேசனும் ஒருவருகொருவர் துணையாக வாழ்கிறார்கள். தன் பேரன் நன்கு படித்து மிகப் பெரிய அரசு பதவியைப் பெற்று சாதிய ஏற்றதாழ்வுலிருந்தும் ஒடுக்குமுறையிலிருந்தும் விடுபட வேண்டும் என்பதே பூச்சியப்பனின் ஒரே குறிக்கோள். பேரனுக்காக தன்னால் இயன்ற அனைத்தையும் செய்கிறார்.

குமரேசனைத் தரமான பள்ளியில் சேர்த்து படிக்கவைப்பதாகச் சொல்லியே தனக்குத் தேவையான அனைத்து வேலைகளையும் பூச்சியப்பனைச் செய்ய வைக்கிறார் வெள்ளையன். பன்றிக் கறி உண்ண விரும்பும் வெள்ளையன் அதற்காக ஒரு பன்றியை வாங்கி அதைக் கூறு போட்டு பன்றிக்கான செலவைப் பகிர்ந்துகொள்வதற்காக ஆட்களைத் தேடுகிறார். பன்றி இறைச்சி உண்பது மிகவும் இழிவானது என்று அந்த ஊர்ப் பெண்கள் கருதுகிறார்கள், ஆண்கள் பலரும் பன்றி இறைச்சி குறைத்த அசூயையை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் வெள்ளையன் பன்றி இறைச்சி உண்பதால் உடலுக்குக் கிடைக்கக்கூடிய நன்மைகளைப் பற்றிப் பேசி கூட்டாளிகளைத் தேற்றிவிடுகிறார்.

வெள்ளையனுடன் வரப்புத் தகராறில் இருக்கும் பங்காளி சுப்பிரமணி (சுருளி) வெள்ளையனுக்குத் தெரியாமல் பன்றிக் கறியைக் கூறுபோட்டுப் பிரித்துக்கொள்வதற்கான குழுவில் ஒருவராகச் சேர்ந்துவிடுகிறார். வெள்ளையன் மற்றும் அவருடைய குழுவினரின் பன்றிக் கறி உண்ணும் ஆசை நிறைவேறியதா, பூச்சியப்பனுக்கும் குமரேசனுக்கும் என்ன ஆனது ஆகிய கேள்விகளுக்கு விடை சொல்கிறது ‘சேத்துமான்’ படத்தின் மீதிக் கதை.

எழுத்தாளர் பெருமாள்முருகன் எழுதிய ‘வறுகறி’ என்னும் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் தமிழ். படத்துக்கான கதை வசனத்தை பெருமாள்முருகன் எழுத திரைக்கதையை இயக்குநர் தமிழ் எழுதியிருக்கிறார். பல சர்வதேச விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ள இந்தப் படத்தை இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருக்கிறது.

சிறுகதையை அடிப்படையாக வைத்துக்கொண்டு கிளைக் கதைகளையும் விரிவான கதாபாத்திர பின்னணிகளையும் சமகால சூழலைப் பிரதிபலிக்கும் உரையாடல்களையும் சேர்த்து விரிவுபடுத்தி கிட்டத்தட்ட இரண்டு மணி நேர திரைப்படமாக விரித்தெடுத்திருக்கிறார் இயக்குநர் தமிழ். படத்தில் பன்றியே சேத்துமான் என்று குறிக்கப்படுகிறது,

பன்றி இறைச்சி குறித்த இழிவான பார்வைகளைக் கடந்து அதை உண்ண விரும்புவோர் அனைத்துப் பிரிவுகளிலும் உள்ளனர். ஆனால் பன்றிகளை வளர்ப்பதும் அவற்றைப் பிடித்து கொன்று சமைத்துத் தருவதும் ஒடுக்கப்பட்டவர்கள் மட்டுமே செய்ய வேண்டிய தொழிலாக மாற்றப்பட்டுள்ளன. இழிவாகப் பார்க்கப்படும் தொழிலைச் செய்யவைத்து அதே காரணத்துக்காக ஒடுக்கப்பட்டவர்களை ஒதுக்கிவைப்பதற்கும் அவர்கள் மீது மேலும் இழிவுகளைச் சுமத்துவதற்கும் நமது சமூகம் தயங்குவதில்லை. இந்த உணவு அரசியலைத் தன்னுடைய சிறுகதையில் நுட்பமாகப் பதிவு செய்திருப்பார் பெருமாள்முருகன். திரைப்படத்தில் துணைக் கதைகள் சேர்த்து, கதாபாத்திரங்களைப் பெரிதாக்கி உரையாடல்களை அதிகரித்து அனைத்தையும் சமகாலச் சூழலுக்கு மாற்றி சமகாலப் பிரச்சினைகளையும் பிரதிபலித்து உணவு அரசியலையும் அதன் வழியாக சமூகத்தில் நிலவும் ஏற்றதாழ்வுகளையும் ஆழமாகவும் அழுத்தமாகவும் உணர்த்தும் படத்தைத் தந்திருக்கிறார்கள் தமிழும் பெருமாள்முருகனும்.

மாட்டிறைச்சியால் விளையும் மோதலில் பூச்சியப்பனின் மகன் இறந்துவிட்டார் என்பன போன்ற சேர்க்கைகள் சமகால அரசியல் சூழலைப் பிரதிபலிக்கின்றன. கதையில் மிகவும் நுட்பமாக உணர்த்தப்படும் தாத்தா-பேரன் பாசமும், வெள்ளையனுக்கும் பூச்சியப்பனுக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வுகளும் அதைக் கடந்த அந்த உறவின் பரிமாணங்களும் படத்தில் விரிவாகவும் துலக்கமாகவும் விளக்கும் வகையிலான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

தமிழகத்தில் குழந்தைகளைக் கல்வி கற்க வைப்பதற்காக அரசுப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட 1950-களில் கதை நடப்பதுபோல் எழுதியிருப்பார் பெருமாள்முருகன். திரைப்படத்திலோ கதை நடக்கும் காலம் 2016-ம் ஆண்டாக மாற்றப்பட்டிருக்கிற்து. 50 ஆண்டுகள் கடந்த பிறகும் சாதி ஏற்றத்தாழ்வும் பட்டியலின மக்கள் மீதான ஒடுக்குமுறையும் தொடர்கின்றன. அதே நேரம் அம்பேத்கர் போன்ற தலைவர்கள் மற்றும் அரசியல் இயக்கங்களின் தலையீட்டால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சாதிக் கொடுமையையும் அதிகாரத்தையும் இழிவு சுமத்தலையும் எதிர்க்கும் துணிச்சல் கிடைத்திருக்கிறது. ரங்கன் கதாபாத்திரம் இப்படி விழிப்புணர்வூட்டப்பட்ட தலைமுறையின் பிரதிநிதி. கதையில் வெறுமனே பன்றி வளர்த்து விற்பவராக ஒரு உதிரி கதாபாத்திரமாக வரும் ரங்கனை ஆதிக்கத்துக்கு அடிபணிய மறுக்கும் சுயமரியாதை தொழிலாளியாக வளர்த்தெடுத்திருக்கிறார் இயக்குநர் தமிழ். “கைல தொழில் இருக்கறவன் யாருக்கும் அடிபணியத் தேவையில்ல” என்று அவர் கூறும் வசனமானது பிறப்பினால் ஒடுக்குமுறையை எதிர்கொள்ளும் மக்களுக்கு பொருளாதாரச் சுதந்திரம் எவ்வளவு முக்கியமானது என்பதை வலியுறுத்துகிறது.

மாணவர் சேர்க்கை மிகவும் குறைந்துவிட்டதால் ஊராட்சிப் பள்ளியை மூடும் நிலை, அரசால் நடத்தப்படும் டாஸ்மாக் மது விற்பனை தொடர்பான வசனங்கள், பரம்பரைச் சொத்துகள் மீதான உரிமை கோரல்களால் விளையும் பங்காளிப் பகையில் அகப்பட்டு அப்பாவிகள் பாதிக்கப்படுவது என சாதி தவிர்த்த பிற சமகால பிரச்சினைகளையும் இந்தப் படம் பதிவுசெய்திருக்கிறது.

கதையை இரண்டு மணி நேரத்துக்கு நீட்டிக்க வேண்டும் என்பதற்காகவே பல விஷயங்கள் வலிந்து சேர்க்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. சிறுகதையைவிட படத்தில் அரசியல் வலிமையும் முக்கியத்துவமும் அதிகரித்திருக்கின்றன. ஆனால் அதன் விளைவாக சிறுகதையில் பெருமாள்முருகனின் எழுத்தில் இழையோடிய அங்கதத்துக்கும் பன்றி இறைச்சி உணர்வு மற்றும் அதைச் சமைப்பது குறித்த வர்ணணைகளுக்கும் படத்தில் இடம் இல்லாமல் போய்விட்டது. திரைக்கதை மிக நிதானமாக நகர்வது கதையின் தேவை என்று புரிந்துகொண்டாலும் இரண்டு மணி நேரப் படமாக விரித்தெடுப்பதற்கான அடர்த்தி இல்லாமல் இருப்பதும் திரைக்கதையின் தொய்வுக்கான காரணமாக அமைந்திருக்கிறது. படத்தின் உருவாக்கத்திலும் சில பிரச்சினைகள் இருக்கின்றன. பாடல்களும் தேவையற்ற திணிப்புகளாகவே தெரிகின்றன.

பூச்சியப்பனாக மாணிக்கமும் அவருடைய பேரனாக சிறுவன் அஸ்வினும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். மனைவியிடம் திட்டு வாங்கிக்கொண்டு பிறரிடம் எகிறுவது, பன்றிக் கறிக்கு ஆள் சேர்ப்பதற்குப் பாடுபடுவது என பல வகையான உணர்வுகளை வெளிப்படுத்தும் வாய்ப்பை நன்றாகவே பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் வெள்ளையனாக நடித்திருக்கும் பிரசன்னா பாலச்சந்திரன். அவருடைய பங்காளி சுப்பிரமணியாக நடித்திருக்கும் சுருளியும் கதாபாத்திரத்தை சரியாக உள்வாங்கி நடித்திருக்கிறார். பிற நடிகர்கள் கொடுத்த வேலையை சரியாகச் செய்திருக்கிறார்கள் என்றாலும் ஒரு சில இடங்களில் புதுமுகங்களுக்கு ஏற்படக்கூடிய கேமரா குறித்த பதற்றமும் தன்னுணர்வும் வெளிப்பட்டுவிடுகிறது. பிந்து மாலினியின் பின்னணி இசையும் பிரதீப் காளிராஜாவின் ஒளிப்பதிவும் படத்தின் யதார்த்தத்துக்கு நெருக்கமான தன்மைக்குப் பலம் சேர்க்கின்றன.

படத்தின் நீளம், உருவாக்கம் சார்ந்த குறைகள் ஆகியவை இருந்தாலும் சமகால அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த உணர்வுபூர்வமான திரைப்படமாகவும் இலக்கியத்தைத் திரைக்குக் கடத்தும் முயற்சியில் வரவேற்கத்தக்க வருகையாகவும் ‘சேத்துமான்’ படத்தை அடையாளப்படுத்தலாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in