`பதான்' திரைப்படம் ஓடும் திரையரங்குகளை தீ வைத்துக் கொளுத்துங்கள்'- மதகுரு சர்ச்சை பேச்சு

`பதான்' திரைப்படம் ஓடும் திரையரங்குகளை தீ வைத்துக் கொளுத்துங்கள்'- மதகுரு சர்ச்சை பேச்சு

" `பதான்' திரைப்படம் ஓடும் திரையரங்குகளை தீ வைத்துக் கொளுத்துங்கள்" என்று அயோத்தியின் ஹனுமன் காரி மடத்தைச் சேர்ந்த மதகுரு பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ஷாருக்கான், தீபிகா படுகோனே நடித்த ‘பதான்’ திரைப்படத்தின் ‘பேஷரம் ரங்’ பாடலின் வீடியோ அண்மையில் வெளியானது. அதில் தீபிகா படுகோனே காவி நிற பிகினி ஆடையும், ஷாருக்கான் பச்சை நிற ஆடையும் அணிந்தவாறு டூயட் பாடுகின்றனர். இதனைச் சுட்டிக்காட்டிய மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, நடிகை தீபிகா, நடிகர் ஷாருக்கான் அணிந்திருந்த ஆடை நிறத்தை சுட்டிக்காட்டி "காவி உடை வேண்டுமென்றே அவமதிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு தடை விதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இது தொடர்பாக காரசார வாதங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், இந்தூரில் வீர சிவாஜி குரூப்பைச் சேர்ந்தவர்கள் ஷாருக்கான், படத்தின் நாயகி தீபிகா படுகோனே ஆகியோரின் கொடும்பாவியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஷாருக்கான் படத்துக்குத் தடைவிதிக்க வேண்டும் என்று முழக்கமிட்டனர்.

இதனிடையே, "பதான் திரைப்படத்தை புறக்கணித்து, அந்தப் படம் ஓடும் திரையரங்குகளை தீ வைத்துக் கொளுத்துங்கள்" என்று அயோத்தியின் ஹனுமன் காரி மடத்தைச் சேர்ந்த மத குரு ராஜு தாஸ் பேசியிருப்பது சர்ச்சை ஏற்படுத்தியிருக்கிறது. இந்து மஹாசபாவின் தேசியத் தலைவர் சக்ரபாணி மகாராஜ், "ஷாருக்கானின் பதான் படத்தில் காவியும், இந்து மதமும் அவமதிக்கப்பட்டுள்ளது. தணிக்கை வாரியம் தூங்கிக் கொண்டிருந்ததா என்ற கேள்வி தான் எழுகிறது. நாங்கள் படத்தை தடை செய்யக் கோருகிறோம். இந்தப் படத்தை நாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in