`தென்னிந்தியாவில் சேவையை நிறுத்திவிட்டு இந்தி தெரிந்த மாநிலத்துக்கு போங்கள்'

ஆக்ஸிஸ் வங்கிக்கு எதிராக சீறிய நடிகை சொர்ணமால்யா
`தென்னிந்தியாவில் சேவையை நிறுத்திவிட்டு இந்தி தெரிந்த மாநிலத்துக்கு போங்கள்'
நடிகை சொர்ணமால்யா

"தென்னிந்தியாவில் உங்களை சேவையை நிறுத்திவிட்டு இந்தி தெரிந்த மக்கள் இருக்கும் மாநிலங்களுக்கு செல்லுங்கள்'' என ஆக்ஸிஸ் வங்கியின் சேவையை கடுமையாக விமர்சித்துள்ளார் நடிகை சொர்ணமால்யா.

இது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர், “இந்த வங்கி சேவை மிக சுமாராக உள்ளது. இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தி பேசுபவர்கள் என எண்ணிவிடாதீர்கள். அப்படி ஒரு எண்ணம் கொண்டிருந்தால், தென்னிந்தியாவில் உங்களை சேவையை நிறுத்திவிட்டு இந்தி தெரிந்த மக்கள் இருக்கும் மாநிலங்களுக்கு செல்லுங்கள். உங்களது வாடிக்கையாளர் சேவை நபரால் ஒரு வார்த்தைகூட ஆங்கிலத்தில் பேச முடியவில்லை. இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உங்களது வங்கி சேவை மிகவும் மோசமாக உள்ளது. #Hinditeriyadhupoda” என காட்டமாக பதிவிட்டிருக்கிறார். அதோடு, அந்த வங்கியின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தை டேக் செய்திருந்தார்.

இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள வங்கி தரப்பு, ”உங்களது புகார்களை ஏற்றுக்கொண்டு பதில் அளிக்க கடமைப்பட்டுள்ளோம். எந்த புகாராக இருந்தாலும் எங்களது உள்டப்பிக்கு (இன்பாக்ஸ்) தகவல் தெரிவிக்கவும். குறைகள் இருந்தால் உடனே எங்களுக்கு தெரியப்படுத்தவும்” என கூறியிருக்கிறது

அதுக்கு புகார் தெரிவித்த சொர்ணமால்யா, “நான் ஏன்..யா இன்பாக்சுக்கு வரணும்.. எனது வங்கி கணக்கு ஆர்.ஏ.புரம் கிளையில் உள்ளது. வங்கி மேலாளாரிடம் பலமுறை புகார் தெரிவித்தும், எந்த பயனும் இல்லை. இது தொடர்பாக வாடிக்கையாளர் சேவையிடம் புகார் தெரிவிக்கலாம் என முயற்சி செய்தபோது அவர்கள் இந்தியில் மட்டுமே பேசுகிறார்கள். இந்தியாவின் தேசிய மொழி இந்தியா? ஆங்கிலம் தெரியாத வாடிக்கையாளர் சேவையை வைத்து கொண்டு எதற்கு தென்னிந்தியாவில் வங்கி நடத்த வேண்டும்?” என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

உலக தாய்மொழி தினமான இன்று, சொர்ணமால்யா பகிர்ந்திருக்கும் இந்த பதிவு சமூக வலைதளத்தில் விவாதத்தை எழுப்பியுள்ளது. இதில் கருத்து தெரிவித்திருப்பவர்கள், ஆக்ஸிஸ் வங்கியைப் போல பல தனியார் நிறுவனங்களின் சேவை இந்தி மொழியில் மட்டும் வழங்கப்படுகிறது என்றும் தமிழ் மொழி தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை, குறைந்தது ஆங்கிலம் தெரிந்த ஆட்களை பணியமர்ந்த வேண்டும் எனவும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in