இப்போதைக்கு எனக்கு தல பொங்கல் இல்லை!

சின்னத்திரை நாயகிகளின் பொங்கல் கொண்டாட்ட அனுபவம்
இப்போதைக்கு எனக்கு தல பொங்கல் இல்லை!

பொங்கல் பண்டிகை என்றாலே அனைவருக்கும் குதூகலம்தான். குடும்பங்களின் சந்திப்பு, நண்பர்களுடன் குதூகலம், சொந்த ஊர் பயணம் என பல நினைவுகளைத் தரக்கூடியது இந்த பொங்கல் பண்டிகை. அந்த வகையில், இந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு என்ன ஸ்பெஷல் என்பது குறித்து சின்னத்திரை நடிகைகளிடம் பேசினோம்.

'கயல்' நாயகி சைத்ரா சீரியல், குடும்பம் என இரண்டு பக்கமும் பொங்கல் கொண்டாட்டத்தில் இருந்தார். "இந்த வருடம் 'கயல்' செட்டில் அனைவருடனும் பொங்கல் கொண்டாட்டத்தில் இருந்தேன். கோலம் போடுவது, கரும்பு சாப்பிடுவது, பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் என இந்த வருடம் மறக்க முடியாத பொங்கலாக அமைந்தது. அதுவும் இந்த வருடம் 'கயல்' குடும்பத்தில் எனக்குத் தல பொங்கல் வேற. எல்லாரும் ஒன்றாக இதைக் கொண்டாடினோம். இன்னொரு பக்கம் எங்கள் குடும்பமும் என் கணவர் குடும்பமும் இணைந்தது இன்னும் மகிழ்ச்சியாக இருந்தது" என்றார் சைத்ரா.

நடிகை நட்சத்திரா, "பொங்கல் மட்டுமல்ல, எந்தப் பண்டிகை என்றாலும் தவறாமல் எங்கள் வீட்டில் கொண்டாட்டம் இருக்கும். முடிந்த அளவு ஷூட், மற்ற வேலைகளை எல்லாம் தள்ளி வைத்து விட்டு, பண்டிகை நாட்களில் வீட்டில் இருக்கவே விரும்புவேன். இந்த வருடம் எங்கள் வீட்டில் பொங்கல் வைத்துவிட்டு பின்பு அம்மா வீட்டிற்குச் சென்றோம். என் கையால் செய்த பொங்கலை அம்மாவிற்கு ஊட்டிவிட்டேன். பின்பு என் கணவர் குடும்பமும் எங்கள் குடும்பமும் ஒன்றாக நேரத்தைச் செலவிட்டு மகிழ்ந்தோம்" என்றார்.

நடிகை கோமதிப்பிரியாவிடம் பேசினோம். " 'வேலைக்காரன்' சீரியலுக்குப் பிறகு ஒரு சின்ன இடைவேளைக்கு பிறகு மீண்டும் விஜய் டிவியின் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் வந்திருக்கிறேன். இந்த வருடம் எனக்கு பொங்கல் செட்டில்தான் போனது. பொங்கல் செலிபிரேஷன் மற்றும் வேறு ஒரு டிவி நிகழ்ச்சி படப்பிடிப்பு என இந்த வருடம் பொங்கல் எனக்கு அங்குதான். அதனால், என் சொந்த ஊரான மதுரைக்கு பொங்கலுக்கு முன்பே வந்துவிட்டு சென்னை கிளம்பிவிட்டேன். மதுரை என்றாலே பண்டிகைக்கும் கொண்டாட்டங்களுக்கும் பெயர் போன ஊர். அதிலும் பொங்கலுக்கு இந்த வருடம் குடும்பத்துடன் இல்லாமல் போனது சிறிய வருத்தம்தான். ஆனாலும், வேலை இடத்தில் கொண்டாட்டத்துக்கு கேரண்டி என்பதால் மகிழ்ச்சியுடன் கிளம்பிவிட்டேன்" என்றார்.

நடிகை சரண்யா பொங்கல் பண்டிகை குறித்து பேசும்போது, ”பொங்கல், தீபாவளிக்கு மட்டும்தான் நான் ஊருக்குப் போவேன் என்பதால் பண்டிகைகள் எப்போதுமே எனக்கு ஸ்பெஷல்தான். தம்பியும் நானும் சென்னையில் இருப்பதால், நாங்கள் இந்த பண்டிகைக்கு மட்டுமே ஊருக்கு வருவோம். அப்படி வரும்போது எங்களைத் தூங்க வைப்பது, சாப்பாடு ஊட்டுவது என அனைத்தையும் அம்மா அப்பா செய்வார்கள். அதில்தான் அவர்களுக்குச் சந்தோஷம்.

அம்மா எனக்கு இந்த வருடமே திருமணம் செய்து வைக்க வேண்டும் என ஆசைப்படுகிறார். ஆனால், சினிமாவில் இன்னும் நிறைய நல்ல படங்கள் நடித்துவிட்டு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறேன். அதனால் எனக்கு இப்போதைக்கு தல பொங்கல் இல்லை” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in