கேன்ஸ் சிவப்புக் கம்பள வரவேற்பில் சீனியர் தமிழ் நடிகை

கேன்ஸ் சிவப்புக் கம்பள வரவேற்பில் சீனியர் தமிழ் நடிகை

கேன்ஸ் சர்வதேசத் திரைப்பட விழாவின் சிவப்புக் கம்பள வரவேற்பில் சீனியர் நடிகையும் கலந்துகொண்டார்.

பிரான்ஸின் கேன்ஸ் நகரில் ஒவ்வொரு வருடமும் சர்வதேசத் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. புகழ்பெற்ற இந்த விழாவில் கலந்துகொள்வதும் தங்கள் திரைப்படங்கள் திரையிடப்படுவதும் திரைக்கலைஞர்களுக்கு கனவாக இருக்கிறது. இந்தாண்டு 75-வது திரைப்பட விழா, கடந்த 17-ம் தேதி தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது.

28-ம் தேதி வரை நடக்கும் இந்த விழாவில், இந்திய திரையுலகில் இருந்து பல்வேறு பிரபலங்கள் சிவப்புக் கம்பள வரவேற்பை அலங்கரித்துள்ளனர். கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான், மாதவன், பா.ரஞ்சித், தீபிகா படுகோன், பூஜா ஹெக்டே, அதிதி ராவ் உள்பட பலர் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், பிரபல மூத்த தென்னிந்திய நடிகையும் இந்த விழாவின் சிவப்புக் கம்பள வரவேற்பில் கலந்துகொண்டுள்ளார். பிரபல மலையாள நடிகையான ஜலஜா, 70 மற்றும் 80 களில் முன்னணி நடிகையாக இருந்தவர். தமிழில், பிரேம்குமார் இயக்கிய ’அந்தரங்கம் ஊமையாகிறது’, டி.எஸ்.துரைராஜ் இயக்கிய ’மாறுபட்ட கோணங்கள்’, ராமநாராயணன் இயக்கிய ’திருட்டு ராஜாக்கள்’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

ஜி.அரவிந்தன் இயக்கத்தில் இவர் நடித்த ’தம்பு’ என்ற மலையாள படம், கேன்ஸ் விழாவில், இந்திய கிளாசிக் பிரிவில் திரையிடப்பட்டது. இதில் கலந்துகொள்வதற்காக தனது மகள் தேவியுடன் கேன்ஸ் சென்றுள்ள அவர், சிவப்புக் கம்பள வரவேற்பில் பங்கேற்றுள்ளார்.

’தம்பு’ படம் வெளியாகி 40 வருடத்துக்குப் பிறகு கேன்ஸில் திரையிடப்பட்டதில் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார் ஜலஜா. கேன்ஸில் கலந்துகொண்ட முதல் மலையாள நடிகை இவர்தான் என்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in