‘செம்பி’- திரை விமர்சனம்!

‘செம்பி’- திரை விமர்சனம்!

இத்தனை காலமாக தனது கலகலப்பான நடிப்பின் மூலம் நம்மை சிரிக்க வைத்த நடிகை கோவை சரளா, கனமான கதாபாத்திரம் ஏற்றிருக்கும் ‘செம்பி’ திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாமா?

கொடைக்கானலின் புலியூர் கிராமத்தில் பேத்தி மற்றும் அம்மாச்சியாக, செம்பி மற்றும் வீரத்தாய் வாழ்ந்து வருகிறார்கள். பேத்தியை கரைசேர்க்க வேண்டும் என்ற பாசப் பரிதவிப்புடன், அந்த மலைவாழ் கிராமத்தில் தேன், முட்டை வியாபாரம் செய்து அழகான நாட்களைக் கடத்துகிறார் கோவை சரளா. ஒருநாள் எதிர்பாரா விதமாக செம்பி சிலரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறாள். போலீஸ் விசாரணைக்கு செல்கையில் அங்கு அதிகாரமும் பணமும் கைமாற, தன் பேத்திக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை கோவை சரளாவுக்கு நீர்த்துப் போகிறது.

புகாரை வாபஸ் வாங்க மிரட்டிய போலீஸை தாக்கி விட்டு தன் பேத்தியோடு ஊரில் இருந்து கிளம்புகிறார் அம்மாச்சி. வழியில் வரும் ’அன்பு’ பஸ்ஸில் ஏறிப்போக, அதில் வரும் ஒவ்வொரு பயணியும் எப்படி செம்பிக்கும் அம்மாச்சிக்கும் ஆதரவாக நிற்கிறார்கள், தன் பேத்திக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற அம்மாச்சியின் பரிதவிப்பும் பதைபதைப்பும் என்னவானது.. என்பதை உணர்ச்சிக் குவியலாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் பிரபுசாலமன்.

மலைவாழ் மக்கள், தரைவாழ் மக்கள் என அவரவர் வாழ்வியலோடு, சமூகத்தை பாதிக்கக்கூடிய ஒரு சம்பவம் அதிகாரத்தின் பிடியில் சிக்குண்டு எப்படியெல்லாம் வளைக்கப்படுகிறது என்பதை ’செம்பி’ அழுத்தமாக சித்தரிக்கிறது. பல்வேறு அதிகார அழுத்தங்களின் ஊடாக சாமானியருக்கான உண்மை எப்படி ஜெயிக்கிறது என்ற ஒரு நேர்க்கோட்டு கதையை எந்தவித சமரசமும் இல்லாமல் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் பிரபு சாலமன்.

பிரபுசாலமன் படங்களில் இடங்கள், பேருந்து போன்றவையும் கதாபாத்திரங்களில் ஒன்றாக உயிர்பெற்று கதையோடு பயணிக்கும். அந்த வகையில், ’அன்பு’ பேருந்தும் அதில் வரும் கதாபாத்திரங்களும், பிரபு சாலனின் ‘மைனா’ திரைப்படத்தை நினைவூட்டுகின்றன. புலியூர் கிராமத்தின் அருவி, மலை ஆகியவற்றை ஜீவனின் ஒளிப்பதிவில் திரையில் பார்க்கும் போது அத்தனை புத்துணர்ச்சியாக இருக்கிறது. படக்காட்சிகளின் கனத்தை நிவாஸின் இசை மேலும் அடர்த்தியாக்குகிறது.

இத்தனை ஆண்டுகள் திரையில் நம்மை சிரிக்க வைத்த கோவை சரளா, செம்பி திரைப்படத்தில் வீரத்தாயாக கலங்கடித்திருக்கிறார். பேத்தி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருக்கிறார் என்ற செய்தி கேட்டதும் திகைத்து அழுதுவதும், புகாரை வாபஸ் வாங்க சொல்லி மிரட்டும் போலீஸை அடிப்பதும், காவல்துறை தேடுதலுக்கு பயந்து பேருந்தில் எழாமல் ஒடுங்குவதுமாக.. காட்சிக்கு காட்சி தனது தேர்ந்த நடிப்பால் வீரத்தாய் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்.

படத்தில் ‘செம்பி’யாக நிலா. பத்து வயது சிறுமியாக துறுதுறுவென திரையை நிறைப்பதும், அம்மாச்சியை அறிந்து பொறுப்பாக நடந்து கொள்வதும், சம்பவத்தின் பாதிப்புக்கு பிறகு ஒடுங்கி அழுவதுமாக முதல் படம் என்ற அறிமுக தடயம் ஏதும் இல்லாமல் கதாபாத்திரமாகவே திரையில் உலாவுகிறார்.

‘அன்பு’ பேருந்தும், அதன் உரிமையாளராக வரும் தம்பி ராமையாவும், அந்த பேருந்து ஓட்டுநரும் கதையின் ‘ரிலாக்ஸ் பாயிண்ட்’. சிறுமி மீதான பாலியல் வன்கொடுமையில் தவறிழைத்த அதிகார வர்க்கத்தை விட்டுவிட்டு அம்மாச்சியை போலீஸ் துரத்துவதும், அந்த செய்தி எப்படி எல்லாம் மக்கள் மத்தியில் திரிக்கப்பட்டு பரப்பப்படுகிறது ஆகியவற்றை ‘அன்பு’ பேருந்தின் ஆரம்பத்தில் உள்ளடக்கும் உரையாடல் ஒரு பானைச் சோற்றுப் பதம். பேருந்தின் சகபயணிகளில் ஒருவராக வரும் அஷ்வின் குமார், பாதிக்கப்பட்ட அம்மாச்சிக்கும், பேத்திக்கும் கடைசி வரை துணை நிற்கிறார்.

இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கும் போது, ஊரில் ஒருவர் கூட கோவை சரளாவுக்கும், நிலாவுக்கும் ஆதரவு கொடுக்காதது, பேருந்தில் பயணிக்கும்போது ஊரே ஆதரவாக இருக்கிறது என்பதை அறிந்தும் உண்மையச் சொல்ல கோவை சரளா முன்வராதது, ‘அன்பு’ பஸ்ஸின் பிற்பாதியில் எட்டிப்பார்க்கும் சில சினிமாத்தனங்கள், பாதிக்கப்பட்ட குழந்தையில் பெயர், முகம் முதற்கொண்டு அனைத்தையும் ஊடகங்கள் முன்வைப்பது.. என படத்தில் குறைகளும் இருக்கின்றன.

இவற்றை எல்லாம் கடந்து, நேர்க்கோட்டில் பயணிக்கும் நல்ல கதையாக வசீகரிக்கிறது ‘செம்பி’.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in