எம்எஸ்வி - எஸ்பிபி மேதைகளுக்கு இசை அஞ்சலி; மாபெரும் குரல் தேர்வு

எம்எஸ்வி - எஸ்பிபி இசை அஞ்சலியான குரல் தேர்வுக்கான அறிவிப்பு
எம்எஸ்வி - எஸ்பிபி இசை அஞ்சலியான குரல் தேர்வுக்கான அறிவிப்பு

இசை மேதைகள் எம்எஸ்வி மற்றும் எஸ்பிபி ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஆன்மிக இசை ஆல்பத்துக்கான உலகளவிலான குரல் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சாய்பாபா பற்றி இந்தியாவின் 11 மொழிகளில் உருவாகும் இசை ஆல்பத்துக்கான குரல் தேர்வில் விருப்பமுள்ளோர் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இசை தேடலும், வெளியீடும் இசை மேதைகளான மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் எஸ்.பி.பாலசுப்ரமண்யம் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்படுவதாகவும் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவை தொடர்பாக நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் மேலும் தெரிவித்திருப்பது: ’'நெஞ்சில் நீயே ஸாயி' என்கிற ஏழு பாடல்கள் அடங்கிய இசை ஆல்பம் இந்தியாவின் 11 மொழிகளில் வெளியாகவுள்ளது. எஸ்.பி.பாலசுப்ரமண்யம் குரலிலான இந்த இசைத் தொகுப்பு மீண்டும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. புதிய தொகுப்பில் எஸ்பிபி குரலுடன் தேர்வு செய்யப்பட்ட சிலரது குரல்களும் இணைந்து ஒலிக்க உள்ளன. இதற்கான குரல் தேர்வு நேரிடையாகவும், ஆன்லைன் வாயிலாகவும் நடைபெற இருக்கிறது.

பக்தி இசைப் பாடல்கள் எழுதி வெளியிட்டுள்ள மும்பையை சேர்ந்த சேதுமணி ஆனந்தா, இசை அமைப்பாளர் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் நிகழ்வை ஒருங்கிணைக்கின்றனர்” என்றனர். இது பற்றி சேதுமணி ஆனந்தா கூறும்போது, “தமிழுக்கான குரல் தேர்வு தமிழகம் மற்றும் புதுச்சேரியின் 40 இடங்களில் நடைபெற உள்ளன. தொடர்ந்து கால் மற்றும் அரையிறுதிப் போட்டிகள் 6 முக்கிய நகரங்களில் நடைபெறும். இறுதிச்சுற்று சென்னையில் நடைபெறும்.

இதர மொழிகளைப் பொறுத்தவரை மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி, சிந்தி, பெங்காலி, போஜ்பூரி உள்ளிட்டவற்றிலிருந்து பாடகர்களைத் தேர்வு செய்து, அந்தந்த மொழியின் புகழ் பெற்ற பாடகர்களுடன் இணைந்து சாயிபுகழ் பாடும் இசைத் தொகுப்பை வெளியிடும் திட்டம் உள்ளது. இந்தத் திட்டம் பற்றி மேலும் அறிய ’பர்ஸ்ட் சான்ஸ் இந்தியா’(www.firstchanceindia.com) இணையதளத்தை நாடலாம்" என்று தெரிவித்தார். இயக்குநர் பேரரசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in