திரைக்கதை மன்னன்: சுவரில்லாமல் பாக்யராஜ் வரைந்த சித்திரம்!

திரைக்கதை மன்னன்: சுவரில்லாமல் பாக்யராஜ் வரைந்த சித்திரம்!

அகன்ற திரையில் ஆழமாய் காதலை பேசிய படங்கள் எத்தனையோ வந்திருக்கின்றன. குதூகலமான காதலைச் சொன்னவை, பிரித்து வைத்த காதல் கதைகள், போராடிச் சேர்ந்த காதல்கள், போராடியும் சேரமுடியாது போன காதல்கள், எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஜெயித்த காதல்கள், கொண்ட காதலை குடும்பத்துக்காக தூக்கியெறிந்தவை, காதலையே பரஸ்பரம் சொல்லிக் கொள்ளாமல் போனவை.. இப்படி எத்தனையெத்தனையோ காதல் படங்கள் வந்திருக்கின்றன.

இந்தப் பட்டியலுக்கு அப்பால் புதுவிதமான காதலையும், அங்கே நிகழ்கிற சிக்கல்பிக்கல்களையும் சித்திரமாக்க முடியுமா? அதுவும் சுவரில்லாமலே சித்திரமாக்கிவிட முடியுமா? இயக்குநர் கே.பாக்யராஜ் அப்படி தீட்டியதுதான் ‘சுவரில்லாத சித்திரங்கள்.’

நாயகி சரோஜா, வறுமைக்கு வாக்கப்பட்ட குடும்பத்தின் மூத்த பெண். அம்மாவோ விதவை. உடன் பிறந்த தம்பிகள், தங்கையும் உண்டு. பள்ளிக்குச் செல்லும் மாணவி அவள். அதே ஊரின் அதே தெருவில், நான்கு வீடு தள்ளி வசிப்பவன் அழகப்பன். மில்லில் வேலை பார்க்கும் அழகப்பனுக்கு இரண்டு விஷயங்களின் மீது அடங்காத ஈர்ப்பு. ஒன்று நாடகம்; மற்றொன்று சரோஜா மீதான காதல்!

அதே ஊரின் பணக்கார குடும்பம் ஒன்றைச் சேர்ந்தவன் சாந்தமூர்த்தி. விளையாட்டு, உடற்பயிற்சி, காரில் ஊர் சுற்றல், நண்பர்களுடன் கதைத்தல் என்று பொழுதைப் போக்குபவன். வீட்டிலேயே அவனுக்கான முறைப்பெண் வளர்ந்து வருகிறாள். ஆனால் அவளை எப்போதும் முறைத்தபடி கடக்கும் சாந்தமூர்த்தி, தற்செயலாக சரோஜாவை பார்த்ததும் மனதைப் பறிகொடுக்கிறான். அடுத்தடுத்த சந்திப்புகளில் அவனில் பூத்த காதல் அவளையும் பற்றுகிறது.

அந்த ஊரில் ஜவுளிக்கடை வைத்திருக்கும் பெரும்புள்ளி, சரோஜாவின் வீட்டுக்கு படியளக்கவும் செய்கிறார். குடும்பத்தின் தேவைகளையும் பூர்த்தி செய்கிறார். தையலுக்கு துணிமணிகள் கொடுத்து உதவுகிறார். கைம்மாறாக சரோஜா தாயுடன் அந்தரங்க உறவை தொடர்கிறார். குழந்தைகளை காபந்து செய்கிறார். சரோஜாவின் தாய் பாலியல் தொழில் செய்பவள் அல்ல. அதேசமயம், அந்த ஜவுளிக்கடை மனிதருடன் உறவு வைத்துக் கொண்டிருப்பவள்!

இப்போது சரோஜாவுக்கும் சாந்தமூர்த்திக்கும் காதல் வளருகிறது. இது தெரியாது தன் காதலையும் கனவையும் வளர்த்தபடி திரிகிறான் அழகப்பன். சரோஜாவுக்கு ஏதேனும் தேவையென்றால், அம்மாவின் பெட்டியில் இருந்து பணம் திருடிக் கொடுத்தெல்லாம் தன் காதலை வெளிப்படுத்தி பார்க்கிறான். கடைசியில் சரோஜா தன்னைக் காதலிக்கவில்லை; நண்பனைத்தான் காதலிக்கிறாள் என்பது தெரிந்ததும் மனம் தேற்றிக் கொள்கிறான். அவர்களின் காதலுக்கு ஒத்தாசைகளும் செய்கிறான்.

இதற்கிடையே, சரோஜாவுடன் மகன் ஊர் சுற்றுவது சாந்தமூர்த்தியின் அப்பாவுக்குத் தெரிய வருகிறது. அவனை அழைத்து கண்டிக்கிறார். வீட்டிலேயே மணப்பெண் இருக்கிறாளே என்று தட்டிக் கேட்கிறார். ‘இவளை மணக்க மாட்டேன். சரோஜாவைத்தான் திருமணம் செய்வேன்’ என்பதில் சாந்தமூர்த்தி உறுதியாக இருக்கிறான். மனமுடைந்து முறைப்பெண் தற்கொலை செய்துகொள்கிறாள். ஆத்திரமுற்ற அப்பா, மகனை வீட்டைவிட்டே துரத்தியடிக்கிறார். சொத்தும் கிடையாது என்று சொல்லி அனுப்புகிறார்.

இந்த பக்கம், தாய்க்கும் ஜவுளிக்கடை முதலாளிக்குமான தொடர்பு மகள் சரோஜாவுக்குத் தெரிய வருகிறது. துக்கித்துப் போகிறாள்;ய் விக்கித்துத் தவிக்கிறாள். தன் படிப்பை நிறுத்துவதோடு, ‘நீயும் நிறுத்திக்கொள்’ என்று அம்மாவுக்கு அட்வைஸ் செய்கிறாள். வேலைக்குச் செல்லத் தொடங்குகிறாள். ஜவுளிக்கடை முதலாளியைப் புறக்கணிக்கிறார்கள்.

இப்படிப்பட்ட சூழலில், போக்கிடம் இல்லாத சாந்தமூர்த்தியை, வறுமை கோரதாண்டவமாடும் தன் வீட்டில் சேர்த்துக்கொள்கிறாள் சரோஜாவின் தாய். சாந்தமூர்த்திக்கும் புதிய வேலை ஏற்பாடாகிறது. அதை அறிந்த மூர்த்தியின் அப்பா, அந்த வேலையிலிருந்து அவனை துரத்தச் செய்கிறார். சரோஜாவின் தம்பி விஷ ஜூரத்து ஆளாக, உதவ முன்வரும் ஜவுளிக்கடை முதலாளியை அவள் குடும்பம் புறக்கணிக்கிறது. இதன் விளைவாக அந்தப் பையன் பரிதாபமாக செத்துப் போகிறான்.

இன்னொரு இடத்தில் வேலை கிடைக்கும் சூழல். ஆனால் இரண்டாயிரம் ரூபாய் முன்தொகை கட்ட வேண்டும். இதை அறிந்த அழகப்பன் காதலியின் குடும்பத்துக்காக தனது வாழ்வை பணயம் வைக்கிறான். இரண்டாயிரம் ரூபாய் கிட்டும் என்பதற்காக, கல்யாணமாகி ஒரே வருடத்தில் கணவனை இழந்து, ஒரு குழந்தையின் தாயாக இருக்கும் பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறான். கிடைக்கும் பணத்தை சரோஜாவிடம் அப்படியே கொடுக்கிறான் அழகப்பன்.

ஆனால், அந்தப் பணம் தொலைந்து போகிறது. கதறி கோபத்தில் துடிக்கும் சரோஜாவின் அம்மா ஒரு முடிவோடு, அந்த முதலாளியை தேடி அழைக்கிறாள். பழையபடி உதவுங்கள் என்கிறாள். ஆனால் அந்த ஜவுளிக்கடை முதலாளி, ‘இனிமேல் நீ வேண்டாம், உன் மகள் வேண்டும்’ என்று ஜாடைமாடையாகச் சொல்லிச் செல்கிறான். அதைக் கேட்டதும் அந்த வீடு துக்கித்துப் போகிறது. அவர் வைத்துவிட்டுப் போன பணத்தை சரோஜா எடுக்கிறாள். குடும்பத்துக்காக செலவிடுகிறாள். ‘மகளின் நிலையும் நம்மைப் போல் ஆகிவிட்டதே’ என்று வாய்டைத்து மெளனியாகிறார் அம்மா. போதாக்குறைக்கு, அப்போதுதான் வயசுக்கு வந்து மூலையில் உட்கார்ந்திருக்கும் சரோஜாவின் தங்கை, விஷயம் என்ன ஏது என்றே தெரியாமல், ‘நான் வேணா இனி தையல் மிஷின்ல உக்கார்றேன்..’ என்று சொல்ல, குடும்பமே வெடித்துக் கதறுகிறது.

‘காதலியைக் காக்கும் வக்கில்லையே’ என்று சாந்தமூர்த்தி கலங்குகிறான். சரோஜா கைநிறைய இனிப்பு வாங்குகிறாள். அன்றிரவு எல்லோரும் அந்த இனிப்பை ருசிக்கிறார்கள். மறுநாள் பொழுது கோரமாய் விடிகிறது. சரோஜா வீட்டில் குவியும் ஊரார், குடும்பமே தற்கொலை செய்துகொண்டதை பார்த்து உச்சு கொட்டுகிறார்கள். கசப்பு மிக்க இந்த வாழ்க்கையை துறப்பது என்ற முடிவுடன், இனிப்பில் விஷம் கலந்து சாப்பிட்ட சரோஜா குடும்பத்தினர் பரிதாபமாய் செத்துக் கிடக்கிறார்கள். சுவரில்லாத ஒரு சித்திரம் சிதைந்து முடிந்துவிட்டிருந்திருக்கிறது என்பதாக படம் நிறைவுறுகிறது.

இயக்குநர் இமயம் என்று போற்றப்படும் பாரதிராஜாவின் முதல் சிஷ்யர் எனும் பெருமைக்குரிய கே.பாக்யராஜ் இயக்கிய முதல் திரைப்படம் ‘சுவரில்லாத சித்திரங்கள்’. நாயகன் சாந்தமூர்த்தியாக சுதாகர் நடிக்க, இரண்டாம் நாயகன் அழகப்பனாக நடித்த பாக்யராஜ், அடுத்தடுத்த படங்களில் பெரும் ஹீரோவாக பரிணமித்தது கோலிவுட் கண்ட வரலாறு. சரோஜாவாக நடித்த சுமதி, குழந்தை நட்சத்திரமாக கலக்கியவர். மாஸ்டர் பிரபாகர் எனும் துறுதுறு நடிகரை நினைவிருக்கிறதா? அவருடைய சகோதரிதான் இந்த படத்தின் நாயகி சுமதி.

பல படங்களில் நடித்து பின்னாளில் அரசியலிலும் பிரவேசித்த சி.ஆர்.சரஸ்வதிக்கு இதுதான் முதல் படம். ’வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தில் ஜாக்ஸன் துரையாக நடித்த சி.ஆர்.பார்த்திபனும், எஸ்.வரலட்சுமியும் சுதாகரின் பெற்றோராக நடித்தார்கள்.

எழுபதுகளில், சின்னச் சின்ன ரோல்களில் நடித்த கல்லாபெட்டி சிங்காரம் எனும் அற்புதமான நடிகருக்கு, முதல் படத்தில் அருமையான கதாபாத்திரம் தந்த பாக்யராஜ் தொடர்ந்து பல படங்களிலும் அவருக்கான வாய்ப்புகளை அளித்தார்.

அதேபோல், பண்ணைபுரத்தில் இருந்து சென்னைக்கு வந்த இளையராஜா மற்றும் சகோதரர்களை வரவேற்று, தங்க இடமும் அன்பும் கொடுத்து அரவணைத்த நடிகர் சங்கிலி முருகனை தன் முதல் படத்திலும் பயன்படுத்திக் கொண்டார். தனது ‘ஒரு கை ஓசை’ படத்தின் மூலமாக சாதா முருகனை ‘சங்கிலி’ முருகன் ஆக்கியவர் பாக்யராஜ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாக்யராஜின் அப்பாவாக கல்லாபெட்டி சிங்காரம். அம்மாவாக காந்திமதி ஆகியோர் இந்த படத்தில் இணைந்து நடித்திருந்தனர். பாக்யராஜ் - கல்லாபெட்டி சிங்காரம், காந்திமதி - கல்லாபெட்டி சிங்காரம், கவுண்டமணி - கல்லாபெட்டி சிங்காரம் என எதிர்படும் காட்சிகள் எல்லாம் காமெடி அணுகுண்டுகள். ‘16 வயதினிலே’ மற்றும் ‘கிழக்கே போகும் ரயில்’ படங்களில் கவுண்டமணிக்கு வாய்ப்பு வாங்கித் தந்த பாக்யராஜ், ‘கவுண்ட்டர்’ மணி என்கிற பெயரை கவுண்டமணி என தவறுதலாக டைட்டிலில் போடவைத்து, பிற்பாடு அதையே சரியென ஆக்கியவர். தனது ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்தில் கவுண்டமணிக்கு டெய்லர் கேரக்டர் கொடுத்து இன்னும் பளிச்சிட செய்தவர்.

மாஸ்டர் காஜாஷெரீப் என்றாலே பாக்யராஜ் சார்தான் ஞாபகத்துக்கு வருவார். ‘அந்த 7 நாட்கள்’ ஜோடியை மறக்கமுடியுமா? அந்த காஜாஷெரீப்பையும் தனது முதல் படத்திலேயே பயன்படுத்தியிருப்பார் பாக்யராஜ். போதாக்குறைக்கு, ஜனகராஜ், சந்திரசேகர் போன்றோரும் ஓரிரு காட்சிகளில் வந்து செல்வார்கள்.

‘’கோவைல நாங்க இருந்த பாரதிபுரம் ஏரியால, காளியண்ணன் டெய்லர் கடை இருந்துச்சு. அங்கேதான் நாங்களாம் உக்கார்ந்து கதை பேசுவோம். காளியண்ணன் குசும்பு குறும்பு மட்டுமில்லாம டபுள் மீனிங்காவும் பேசுவார். அதை பெண்களும் ரசிப்பாங்க. அதனாலதான் அந்த சமாச்சாரமெல்லாம் எனக்கு ஒட்டிக்கிச்சு. தவிர, சரோஜா குடும்பம் போலவே, எங்க ஏரியால ஒரு குடும்பம் இருந்துச்சு. இதெல்லாம் மனசுல வைச்சுத்தான், முதல் படத்தை உருவாக்கினேன். அந்த சரோஜா, காளியண்ணன் டெய்லர் கடை எல்லாமே நிஜம்தான்’’ என்றெல்லாம் ‘Rewind With Ramji' என்று யூடியூப் பேட்டிக்கான தருணத்தில் பாக்யராஜ் சார் நிறையவே பகிர்ந்துகொண்டார்.

கிட்டத்தட்ட, பாக்யராஜ் சாரை நான்கரை மணி நேரம் எடுத்த பேட்டி அது. மனம் திறந்து அவர் சொன்ன ஒவ்வொரு விஷயமும் பொக்கிஷம். ‘’கவுண்டமணி அண்ணன், சங்கிலி முருகன் அண்ணன், கல்லாபெட்டி சிங்காரம் அண்ணன்னு நாங்க எல்லாரும் தேனாம்பேட்டைல ஒரே மேன்ஷன்ல தங்கியிருந்தோம். அப்ப, இவங்களையெல்லாம் பாக்கும்போது, ‘நாளைக்கு நாம படம் எடுத்தா இவர்களை நல்லவிதமா பயன்படுத்திக்கணும்னு வைராக்கியம் எடுத்துக்கிட்டேன். சின்னமுருகன்னு ஒரு நடிகரும் அப்படித்தான். அவர்தான் எங்களுக்கு பல நாள் சாப்பாடு போட்டாரு. டீ, சிகரெட்லாம் வாங்கிக் கொடுத்தாரு. அப்புறமா, நான் படம் பண்ணும்போது, இவங்களையெல்லாம் பயன்படுத்திக்கிட்டதுல எனக்கொரு ஆத்மதிருப்தி’’ என்று பண்புடனும் பாசத்துடனும் பாக்யராஜ் சார் பகிர்ந்து கொண்டது, இந்தத் தருணத்தில் நினைவுக்கு வருகிறது.

’பகவதி கிரியேஷன்ஸ்’ பேனரில் கே.கோபிநாத் இந்தப் படத்தைத் தயாரித்தார். டைட்டில் போடும்போதே, ‘வெல்கம் வெல்கம்’ என்றொரு பாடலைப் போட்டு முத்திரை பதித்திருப்பார் பாக்யராஜ். அதேபோல், அதிகாலையில் போடப்பட்ட அழகிய கோலத்தில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் கே.பாக்யராஜ் என டைட்டில் போட்டிருப்பார்.

சுதாகரின் இயல்பான நடிப்பும் சுமதியான துடிப்பான நடிப்பும் நம்மை அப்படியே கவர்ந்துவிடும். கவுண்டமணியின் லொள்ளு அப்போதே அப்படியென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

கல்லாபெட்டி சிங்காரம் அரை டிரவுசருடன் படம் முழுக்க வருவார். மகனிடமே பீடி கேட்பதும், சின்னப்பசங்களுடன் மனைவிக்குத் தெரியாமல் நைட் ஷோ போவதும் என தமிழ் சினிமாவுக்கு புது அப்பாவாக ஜொலித்துக் கலக்கினார். காந்திமதி பார்க்கும் பார்வையெல்லாம் உக்கிரம்தான். ’சரோசா... குப்பை கொட்றியா... கொட்டுகொட்டு’ என்கிற கவுண்டமணியின் மாடுலேஷன் வசனம், இன்றைக்கும் பிரபலம். ‘கண்ணடிச்சா வராத பொம்பளை கையைப்புடிச்சு இழுத்தா மட்டும் வந்துடவா போறா’ என்று கல்லாப்பெட்டியார் சொல்லியதை காந்திமதி கேட்டுவிட்டுக் கொடுக்கிற ரியாக்‌ஷன் என்றைக்கும் மறக்க முடியாதது.

படத்தின் முதல் பாதி முழுக்க காமெடியாகவும், இரண்டாம் பாதி முழுக்க சோகமாகவும் என வெவ்வேறு பாதைகளில் பயணிக்கும். அப்படி பயணிக்கிற கதையுடன் நம்மை ஒன்றச் செய்யவும் பாக்யராஜால் மட்டுமே முடியும்.

பசியுடன் தவிக்கும் சுதாகர். தூங்கவும் முடியாது வந்து வந்து தண்ணீரைக் குடித்துக் கொண்டே இருப்பார். இதை சுமதி பார்த்துவிடுவார். பசியைப் புரிந்துகொள்வார். சுதாகருக்கு அருகே சென்று, ‘இப்போ உன் பசியை மறக்கறதுக்கு எங்கிட்ட இருக்கறது இது ஒன்னுதான்’ என்று தன்னையே ஒப்படைக்க முனைவாள். அவளை அமைதிப்படுத்தி அனுப்பிவைப்பார் சுதாகர்.

அதேபோல் முன்பொரு முறை, ‘’என்னை மறந்துருவீங்களா, என்னை ஏமாத்திருவீங்களா.. என்னைக் கைவிட்ருவீங்களா..’ என்று அழுதுகொண்டே கேட்பார் சுமதி. ஆனால் கடைசி வரையிலும், மரணம் என்பது வரையிலும் காதலன் கூடவே இருக்கிற அந்த காதலின் மனிதம் சொன்னதும் தமிழ் சினிமாவுக்குப் புதுசுதான்!

கங்கை அமரன் இசையில் எல்லாப் பாடல்களும் ஹிட்டாகின. குறிப்பாக, ‘காதல் வைபோகமே காணும் நன்னாளிதே..’ பாடல் பலரின் செல்போன்களில் பத்திரமாக இருந்து, அடிக்கடி கேட்கவும் பாடவும் செய்கிற பாடலாகவும் இருக்கிறது. இந்தப் பாடலை ரீமிக்ஸ் செய்தும் ஹிட்டடித்தார்கள். பாடல்கள் மட்டுமன்றி பின்னணி இசையிலும், ஹம்மிங்கிலும்கூட கங்கை அமரன் கலக்கியிருப்பார்.

திருச்சியில் வெலிங்டன், ராக்ஸி என்று தியேட்டர்கள் உண்டு. 1979ம் ஆண்டு, நவம்பர் 30-ஆம் தேதி வெளியானது இந்தப் படம். அப்போது நான் ஆறாவது படித்துக் கொண்டிருந்தேன். முதல் நாள் மாலைக் காட்சி பார்த்துவிட்டு, ஹோட்டலில் சாப்பிட அப்பாவும் அம்மாவும் அழைத்துச் சென்றார்கள். ’எனக்குப் பசிக்கலை’ என்று சொல்லிவிட்டேன். வீட்டுக்கு வந்தும் இரவெல்லாம் தூக்கமில்லை. சரோஜாவின் மீதும் சாந்தமூர்த்தியின் மீதும் அழகப்பனின் மீதும் அந்தக் குடும்பத்தின் துயரமான முடிவின் மீதும் சிக்கிக்கொண்டு, கனத்துக் கிடந்தது மனசு!

இதோ, படம் வெளியாகி 43 ஆண்டுகளாகிவிட்டன. அதாவது பாக்யராஜ் எனும் திரைக்கதை மன்னன் நமக்குக் கிடைத்து 43 வருடங்களாகிவிட்டன. 40வது ஆண்டின் போது நம் ’இந்து தமிழ் திசை’ மூலம் அவருக்கான பொக்கிஷமாக ஒரு நினைவுப்பரிசை கொடுத்துவிட்டுத்தான், நான்கரை மணி நேரப் பேட்டியை எடுத்தேன். ’’பரவாயில்லியே... நான் எடுத்த முதல் படத்தை ஞாபகம் வைச்சிகிட்டு எங்கிட்ட மொத்தமா பேட்டி எடுத்தது ’இந்து தமிழ் திசை’யாத்தான் இருக்கும். உங்க நிறுவனத்துக்கு நன்றி ராம்ஜி’’ என்று எளிமையாகவும் இனிமையாகவும் இருகரம் கூப்பியவர், தனது ‘ஆர்’ மோதிரம் பளபளக்கச் சிரித்த முகத்துடன் பேட்டியை தொடர்ந்தார் பாக்யராஜ் சார். சுவர் இல்லாமலேயே சித்திரம் வரைவதிலும், மெளனமாக கீதம் இசைப்பதிலும், ஒரு கையால் ஓசை எழுப்புவதிலும் திரைக்கதை ஜித்தன். நம் திரையுலகின் சொத்து.

43 ஆண்டுகள் என்றில்லை; இன்னும் நூறு ஆண்டுகளானாலும் இந்த சுவரில்லாத சித்திரம், மக்கள் மனதில் அழியாத சித்திரமாய் கவர்ந்தபடியே இருக்கும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in