அமாவாசை, பாலுத்தேவர், சின்னப்பதாஸ்: அட்டகாச நாயகன் சத்யராஜ்!

நடிகர் சத்யராஜ் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு
’சட்டம் என் கையில்’ சத்யராஜ்
’சட்டம் என் கையில்’ சத்யராஜ்

படிப்படியாக வளர்வது என்றொரு வார்த்தை நடிகர் சத்யராஜுக்கு ரொம்பவே பொருந்தும். எடுத்ததும் நாயகனாகிவிடவில்லை. வில்லனாகத்தான் நடித்தார். அதேபோல், எடுத்ததுமே மெயின் வில்லனாக வந்துவிடவில்லை. ஏழெட்டு பேர் நிற்கும் அடியாட்களில் ஒருவராகத்தான் அறிமுகமானார். அடியாள், துணை வில்லன், வில்லன், கதாநாயகன் என்றெல்லாம் உயர்ந்து ‘புரட்சித்தமிழன்’ என்ற பட்டமும் கிடைக்கப் பெற்று, இன்றைக்கு அட்டகாசமான குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்துகொண்டிருக்கிறார்.

சத்யராஜ். கொங்கு தேசத்துக்காரர். படிப்புக்கும் குறைவில்லை. பரம்பரைச் சொத்துக்கும் பஞ்சமில்லை. ஆனால் சிறுவயதிலிருந்தே எம்ஜிஆரின் ரசிகன். படங்களைப் பார்க்கப் பார்க்க, எல்லாப் படங்களையும் பார்க்கத் தொடங்கினார். எம்ஜிஆரையும் பிடித்தது; சிவாஜியையும் பிடித்தது. மொத்தத்தில் சினிமாவையே பிடித்துப் போனது. இதுதான் சினிமாவுக்குள் செல்ல வேண்டும் எனும் உந்துதலைக் கொடுத்தது. ரங்கராஜ், சினிமாவுக்காக சத்யராஜ் என்று மாற்றிக்கொண்டிருந்தார்.

வாய்ப்பு தேடி அலைந்தார். கமல் இரட்டை வேடங்களில் நடித்து இயக்குநர் டி.என்.பாலு இயக்கிய ‘சட்டம் என் கையில்’ படத்தில் துணை வில்லனாக, நான்கைந்து காட்சிகளில் வந்து அறிமுகமானார். திரையுலகில் அவருக்குக் கிடைத்த முதல் சம்பளம் 500 ரூபாய்.

இதையடுத்தும் இப்படித்தான் பல படங்கள் கிடைத்தன. எல்லாப் படத்திலும் அடியாளாய், துணை வில்லனாக நடித்துவந்தார். எழுபதுகளின் இறுதியில் நடிக்க வந்தவர், தொடர்ந்து கிடைக்கிற வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்தி நடித்துக்கொண்டே இருந்தார்.

நடிகர் சத்யராஜ்
நடிகர் சத்யராஜ்

இந்தக் காலகட்டத்தில் இயக்குநர் பாரதிராஜாவிடம் இருந்து மணிவண்ணன் வெளியே வந்து ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ கொடுத்து, வெற்றிப்பட இயக்குநர் எனும் அந்தஸ்தைப் பெற்றார்.

அடுத்தடுத்த படங்களை இயக்கிய மணிவண்ணன், சத்யராஜை அழைத்துக்கொண்டார். கோவையில் இருவரும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். ‘வாடா போடா’ நண்பர்கள். அடுத்தடுத்து மூன்று படங்கள். மூன்றிலும் வாய்ப்புக் கொடுத்தார். ‘ஜனவரி 1’ படத்தில் சுமாராகத் தெரிந்தார் சத்யராஜ். ‘நூறாவது நாள்’ படத்திலும் துணை வில்லன். ஆனால் சிகப்புக் கோட்டும் மொட்டைத்தலையும் உருண்டை கூலிங்கிளாஸுமாக மிரட்டினார். ‘யாருய்யா இது?’ என்று எல்லோரும் கேட்டுக்கொண்டார்கள். ‘24 மணி நேரம்’ படத்தில் மெயின் வில்லனாக்கினார் மணிவண்ணன். ‘என் கேரக்டரையே புரிஞ்சிக்கமாட்டேங்கறீங்களே...’ என்று சத்யராஜ் பேசிய ‘பஞ்ச்’ வசனம் இன்று வரைக்கும் பாப்புலர்!

இதன் பின்னரும் வரிசையாகப் படங்கள். ‘சாவி’ படத்தில் நாயகனானார். சரிதாவுடன் நடித்தார். கமலின் ஒரு கோடி ரூபாய்க் கனவு என்று பெரிய அளவில் பேசப்பட்ட ‘விக்ரம்’ படத்தில் சுகிரத்ராஜ் எனும் வில்லனாக அசத்தினார். ரஜினியுடன் ஏவி.எம்மின் ‘மிஸ்டர் பாரத்’ படத்தில், ரஜினிக்குத் தந்தையாக, வில்லனாக, அட்டகாசம் பண்ணியிருந்தார். ‘என்னம்மா கண்ணு’ என்று சத்யராஜ் பேசிய வசனம் அவ்வளவு பிரபலம். இன்றைக்கும் மேடையில் சத்யராஜ் இந்த வசனத்தைச் சொன்னால், மொத்தக் கூட்டமும் கைதட்டும்!

பாரதிராஜா ‘16 வயதினிலே’, ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘டிக் டிக் டிக்’, ‘ஒரு கைதியின் டைரி’ என்று கமலை அதிகம் பயன்படுத்திக் கொண்டது போல, ‘முதல் மரியாதை’யில் ஒரு கெஸ்ட் ரோல், ‘கடலோரக்கவிதைகள்’ படத்தில் சின்னப்பதாஸ், ‘வேதம் புதிது’ படத்தில் பாலுத்தேவர் என்றெல்லாம் உருமாறவைத்தார். ‘உங்கள் சத்யராஜ் எங்கள் கைவண்ணத்தில்’ என்று பாரதிராஜா தனது ‘கடலோரக் கவிதைகள்’ படத்தில் டைட்டில் போடும் அளவுக்கு சத்யராஜ் வளர்ந்திருந்தார்.

கமலுடன் ஏற்கெனவே ‘மங்கம்மா சபதம்’ போன்ற படங்களில் கமலுடன் நடித்திருந்தாலும், ‘காக்கிசட்டை’ படத்தில் அவர் நடித்த வில்லன் வேடம் அவருக்குப் பெரும் வரவேற்பைப் பெற்றுத்தந்தது. “அந்தப் படத்தில் ‘தகடுதகடு’ என்று ஸ்டைலாகப் பேசச்சொன்னதே கமல் சார்தான். அவர் சொன்னபடியே பேசி நடித்தேன். மிகப்பெரிய ஹிட்டானது” என்று சத்யராஜ் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

கமலின் தயாரிப்பு நிறுவனத்தில், மாதவன், விக்ரம் என்றெல்லாம் நடித்திருக்கிறார்கள். ஆனால், முதன்முதலில், கமலின் நிறுவனத்தில், கமல் நடிக்காமல், சத்யராஜ்தான் நாயகனாக நடித்தார். ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ என்று பாடல்களே இல்லாமல் வந்த படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது.

இதேபோல், மணிவண்ணன் படங்களில் தொடர்ந்து சிறப்பான கேரக்டர்கள் சத்யராஜுக்கு வாய்த்தன. ‘’இன்னிக்கி நான் பெரிய நடிகனா இருக்கேன்னா, நான் பேசுன டயலாக்கை, ‘ஒன்ஸ்மோர்’ கேட்டு ரசிக்கிறீங்கன்னா, அதுக்கெல்லாம் காரணம் நண்பர் மணிவண்ணன்தான். அவர்தான் என் டயலாக் மாடுலேஷனை மாத்தினார். என்னைப் புதுசுபுதுசா ரசிகர்கள்கிட்ட கொண்டுபோய்ச் சேர்த்தார்’’ என்று மறக்காமல் குறிப்பிடுகிறார் சத்யராஜ். ‘முதல் வசந்தம்’, ‘விடிஞ்சா கல்யாணம்’, ‘அமைதிப்படை’ என்று மிகப்பெரிய பட்டியலே போடலாம்.

’நூறாவது நாள்’ படத்தில் சத்யராஜ்
’நூறாவது நாள்’ படத்தில் சத்யராஜ்

இன்னொரு பக்கம் பி.வாசு ‘வால்டர் வெற்றிவேல்’ மாதிரி படங்களைக் கொடுத்தார். மற்றொரு பக்கத்தில், ‘திருமதி பழனிச்சாமி’ மாதிரி படங்களை ஆர்.சுந்தர்ராஜன் கொடுத்தார். இயக்குநர் மணிரத்னத்தின் தமிழின் முதல் படமான ‘பகல்நிலவு’ படத்தில், மிகச்சிறந்த கதாபாத்திரம் கிடைக்க, அதில் அலட்டிக்கொள்ளாமல் நடித்து பிரமிக்க வைத்தார் சத்யராஜ்.

இயக்குநர் பாசில் எனும் மிகச்சிறந்த இயக்குநர் ‘பூவிழி வாசலிலே’ எனும் படத்திலும் ‘என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ படத்திலும் ஆகச்சிறந்த கேரக்டர்களை வழங்கினார். இரண்டிலும் தன் மாறுபட்ட நடிப்பால், நம்மைக் கலங்கடித்திருப்பார் சத்யராஜ். பிரபுவுடன் ஜாலியும் கேலியுமாக ‘சின்னதம்பி பெரியதம்பி’யில் ரவுசு பண்ணினார். அதே பிரபுவுடன் கலைஞரின் கதை வசனத்தில் ‘பாலைவன ரோஜாக்கள்’ படத்தில் கம்பீரம் காட்டினார். பிரதாப் போத்தனின் ‘ஜீவா’ படத்தில் துள்ளத்துடிக்கிற பரபர நாயகனாக, புகைப்படக் கலைஞராக வந்து தீயவர்களின் கூடாரத்தை அழித்தொழிப்பார். ‘உங்கள் சத்யராஜ்’ என்று டைட்டிலில் போட, ‘எங்கள் சத்யராஜ்’ என்று ரசிகர்கள் கொண்டாடினார்கள். பின்னர் ‘புரட்சித்தமிழன்’ சத்யராஜ் என்றானார்.

கமல், ரஜினிக்கு அடுத்து, விஜயகாந்த், கார்த்திக், பிரபு, சத்யராஜ், முரளி, மோகன் என்கிற மார்க்கெட் வேல்யூ பட்டியலில் இணைந்தார். ‘அண்ணாநகர் முதல் தெரு’ படத்தில் கூர்க்காவாக நடித்து அசத்தினார். ‘ஜல்லிக்கட்டு’வில் சிவாஜிகணேசனுடன் இணைந்து நடித்து கலகலக்க வைத்தார். ‘முத்துக்கள் மூன்று’, வேலை கிடைச்சிடுச்சு’, ’சின்னப்பதாஸ்’, ’வாழ்க்கைச்சக்கரம்’, ‘பிரம்மா’, ’ஏர்போர்ட்’, ’தாய்மாமன்’ என படங்கள் வரிசையாக வந்தன. வரிசையாக ஹிட்டடிக்கவும் செய்தன. பி.வாசுவின் ‘ரிக்‌ஷா மாமா’ இன்னும் இன்னுமான கமர்ஷியல் ஹீரோவாக, கலெக்‌ஷன் கூட்டுவதற்கு உதவின.

ஒரு படத்தில் கலகலப்பாக இருப்பார். இன்னொரு படத்தில் பொறுப்பான கணவனாகவும் நல்ல தகப்பனாகவும் இருப்பார். வீரமான போலீஸ் அதிகாரியாக இருப்பார். விவேகமான இளைஞனாகவும் நடிப்பார். ஜொள்ளுவிட்டு லொள்ளு செய்வார். கிராமத்துக்காக தனக்கான லட்சியத்தை வகுத்துக்கொள்வார். சிரிக்கவைப்பார். அழவைப்பார். எந்தவொரு இமேஜ் வட்ட, சதுர, நீளங்கள் எதுவுமில்லாமல் நடித்தவர்களில் சத்யராஜ் ரொம்பவே ஸ்பெஷல்!

’அமைதிப்படை’ சத்யராஜ்
’அமைதிப்படை’ சத்யராஜ்

அவரின் திரையுலக வாழ்க்கையிலும் மணிவண்ணனின் திரையுலக வாழ்க்கையிலும் ‘அமைதிப்படை’ தனி பெஞ்ச்மார்க். அந்த ‘அமாவாசை’யையும் ‘சோழர் பரம்பரையில் ஒரு எம்எல்ஏ’வையும் இன்றைக்கு நினைத்தாலும் வெடித்துச் சிரிப்போம். மணிவண்ணனாலும் சத்யராஜாலும்தான் ‘அல்வா’வுக்கு வேறு அர்த்தம் ஒட்டிக்கொண்டது என்றே சொல்ல வேண்டும்.

’கட்டப்பா’ சத்யராஜ்
’கட்டப்பா’ சத்யராஜ்

ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொருவிதமான ‘விக்’குகள் வைத்துக்கொண்டு நடித்தாலும் பொதுவெளியில் எந்த தலைமுடியும் அணியாமல், முகமூடியும் போட்டுக்கொள்ளாமல், வார்த்தைகளுக்கு தேனெல்லாம் தடவாமல், யதார்த்தம் பேசினார். நிஜம் பேசினார். ‘நான் இப்படித்தான்’ என பகுத்தறிவுக் கொள்கையை மறைக்காமல் சொன்னார். சொல்லிவருகிறார்.

மணிவண்ணன், சத்யராஜ், கவுண்டமணி மூவரின் கூட்டணியில் வந்த படங்கள் எல்லாமே நம் துக்கத்தை விரட்டுகிற வலி நிவாரணிகள். இயக்குநர் ஞான ராஜசேகரன் இயக்கத்தில் ‘பெரியார்’ படத்தில், பெரியாராகவே வாழ்ந்திருப்பார் சத்யராஜ். பெரியார் எப்படி நடப்பார், எப்படிப் பார்ப்பார், எப்படிப் பேசுவார், எப்படி கோபப்படுவார் என்பதையெல்லாம் நமக்கு அச்சுஅசலாகக் காட்டி அசத்தினார்.

இயக்குநர் தங்கர்பச்சானின் ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ படத்தில் கலங்கடித்திருப்பார். ‘நண்பன்’ படத்தில் வித்தியாசமான சத்யராஜையும் அவரின் பேசுகிற த்வனியையும் பார்த்துப் பார்த்து வியந்துகொண்டே இருக்கலாம். நயன்தாரா, ஐஸ்வர்யா ராஜேஷ், விஜய், சிவகார்த்திகேயன், கார்த்தி, விஷால், விக்ரம் பிரபு என எல்லோருடனும் இணைந்து நடித்து ஒவ்வொரு கேரக்டருக்கும் உயிர் கொடுத்தார். ‘ஒருநாள் இரவில்’ எனும் படத்தில் ஒரேயொரு அறையில் இருந்துகொண்டு, குற்ற உணர்ச்சியின் அத்தனை வெளிப்பாடுகளையும் நுணுக்கி நுணுக்கி வெளிப்படுத்தி நம்மைப் பதறச் செய்திருப்பார்.

இந்தியாவிலும் பிற நாடுகளிலும் ‘பாகுபலி’ எந்த அளவுக்கு பிரபலமானாரோ அதே அளவுக்கு ‘கட்டப்பா’வும் பிரபலமானார். மற்ற மொழிகளில் உள்ள இயக்குநர்களும் விரும்பி அழைக்கும் அளவுக்கு நடிப்பில் எப்போதுமே தனித்துவத்துடன் திகழும் சத்யராஜ்... ‘வில்லாதி வில்லன்’ படத்தை தயாரித்து இயக்கினார். எந்தப் படமாக இருந்தாலும் அதில் தனக்கென ஒரு ‘டயலாக் டெலிவரி’யையும் மேனரிஸத்தையும் வைத்து நம்மை ஈர்த்துவிடுவதில் சூரர்.

1954 அக்டோபர் 3-ம் தேதி பிறந்த சத்யராஜ், 1978-ல் திரையுலகிற்குள் நுழைந்து கடந்த 44 ஆண்டுகளாக தொடர்ந்து நடித்துக்கொண்டிருக்கிறார். 68-வது பிறந்தநாளைக் கொண்டாடும் சத்யராஜை வாழ்த்துவோம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in