'சதுரங்க வேட்டை 2’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

'சதுரங்க வேட்டை 2’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகியுள்ள ’சதுரங்க வேட்டை 2’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹெச்.வினோத் இயக்குநராக அறிமுகமான படம், ’சதுரங்க வேட்டை’. கடந்த 2014-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் நட்டி என்கிற நட்ராஜ், இஷாரா நாயர், பொன்வண்ணன், இளவரசு உட்பட பலர் நடித்திருந்தனர். மக்களை ஏமாற்றி மோசடி வேலைகளைச் செய்யும் கும்பல் பற்றியும் மக்கள், ஏமாறுவதற்கு எளிதாக தயாராக இருப்பதையும் சுவாரஸ்யமாகச் சொன்ன படம் இது. இந்தப் படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இயக்குநர் வினோத் கவனிக்கப்பட்டார்.

இந்நிலையில் வினோத் கதை, திரைக்கதை, வசனத்தில் உருவான படம் ’சதுரங்க வேட்டை 2’. இந்தப் படத்தை சலீம் இயக்குநர் நிர்மல் குமார் இயக்கினார். இதில் அரவிந்த்சாமி, த்ரிஷா, பிரகாஷ்ராஜ், ராதாரவி உட்பட பலர் நடித்திருந்தனர். நடிகர் மனோபாலா தயாரித்த இந்தப் படம், எப்போதோ முடிந்துவிட்டாலும் பைனான்ஸ் சிக்கலால் ரிலீஸ் தள்ளிப் போனது. சில முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் வெளியாகவில்லை.

இதற்கிடையே இந்தப் படத்தின் கதையை திருடி தெலுங்கில் ’கில்லாடி’ என்ற பெயரில் படம் தயாரித்துவிட்டதாக வழக்குத் தொடரப்பட்டது. இந்நிலையில் 'சதுரங்க வேட்டை' 2 படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி இருக்கிறது. இந்தப் படம் அக்டோபர் 7ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in