மீண்டும் இயக்குநர் அவதாரம்: ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்திய சசிகுமார்!

மீண்டும் இயக்குநர் அவதாரம்: ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்திய சசிகுமார்!

‘சுப்ரமணியபுரம்’ படம் வெளியாகி 14 ஆண்டுகள் ஆனதை ஒட்டி இயக்குநரும் நடிகருமான சசிகுமார் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றைப் பகிர்ந்திருக்கிறார். கூடவே, மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கப்போவதையும் அந்தப் பதிவில் தெரிவித்திருக்கிறார்.

கடந்த 2008-ல் ஜெய், ஸ்வாதி, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சுப்ரமணியபுரம்’. சசிகுமார் எழுதி, தயாரித்து இயக்கியதுடன் இப்படத்தில் முக்கியமான பாத்திரத்திலும் நடித்திருந்தார்.

அழகன், பரமன், காசி, சித்து, துளசி என நண்பர்களின் நட்பு, துரோகம், வன்முறை, காதல் என 1980-களின் கதையை, துரோகத்தையும் மதுரை பின்னணியையும் கொண்டு உயிர்ப்புடன் சொன்னஇந்தப் படம் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழ் சினிமாவின் கல்ட் க்ளாஸிக் படமாக ரசிகர்களால் ‘சுப்ரமணியபுரம்’ கொண்டாடப்படுகிறது.

தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்த சசிகுமாருக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்தன. பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் இந்தப் படத்தை சிலாகித்துப் பாராட்டினார்.

படம் வெளியாகி இன்றோடு 14 ஆண்டுகள் ஆகின்றன. இந்நிலையில் இந்தப் படம் தொடர்பான சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சசிகுமார் அது பற்றிய நினைவுகளையும் பகிர்ந்திருக்கிறார்.

‘இன்று ஜூலை 4 எப்போதுமே எனக்கு ஸ்பெஷல். பதினான்கு வருடங்களுக்கு முன்னர் இதே நாளன்று தான் ‘சுப்ரமணியபுரம்’ படம் வெளியாகி இருந்தது. பதினான்கு வருடங்கள் போனதே தெரியவில்லை. எனக்கு ஏதோ நேற்றுதான் படம் வெளியானது போன்ற ஒரு உணர்வு இருக்கிறது. வெளியானதில் இருந்து இன்று வரை மக்கள் இந்தப் படத்தை வரவேற்று கொடுத்த ஆதரவை எப்போதும் மறக்க மாட்டேன். இத்தகைய நிலையை இந்தப் படம் அடைய உழைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். சீக்கிரமே என்னுடைய அடுத்த படைப்பு பற்றிய அறிவிப்பை வெளியிடுகிறேன். நிச்சயம் அது இயக்குநராகத்தான் என் படம் இருக்கும்’ என்ற செய்தியையும் பகிர்ந்துள்ளார்.

‘சுப்ரமணியபுரம்’ படத்துக்குப் பிறகு ’ஈசன்’ எனும் ஒரே ஒரு படத்தை மட்டுமே அவர் இயக்கினார். ’பசங்க’, ‘சுந்தரபாண்டியன்’, ‘தலைமுறைகள்’, ’தாரை தப்பட்டை’, ‘கிடாரி’ எனப் பல படங்களைத் தயாரித்ததுடன், ’நாடோடிகள்’, ‘போராளி, ‘சுந்தரபாண்டியன்’, ‘குட்டிப்புலி’ என வெற்றி பெற்ற நடிகராகவும் ரசிகர்கள் மனதில் பதிந்துவிட்டார். அதிகமான படங்களில் நடிக்க, சினிமாவில் தான் பட்ட கடன்களும் முக்கியக் காரணம் என்பதை ஒரு பேட்டியில் மனம் திறந்து சொல்லி இருந்தார் சசிகுமார்.

இந்நிலையில், விரைவில் இயக்குநராகக் களமிறங்கப்போவதாக சசிகுமார் கூறியிருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in