
பா.ரஞ்சித் இயக்கத்திலான ’சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா உள்ளிட்டோர் நடிப்பில் 2021ல் வெளியான திரைப்படம் ’சார்பட்டா பரம்பரை’. 60களின் மத்தியில் வட சென்னையை மையமாக் கொண்ட குத்துச்சண்டை பரம்பரையினர் மத்தியிலான மோதலை, அரசியல் மற்றும் சமூகப் பின்னணியில் இந்த திரைப்படம் பேசியிருந்தது. கார்த்தியை மனதில் வைத்து பா.ரஞ்சித் எழுதிய கதையில், கடைசியில் ஆர்யா நடித்தார்.
உடன் பசுபதி, கலையரசன், ஜான் கோக்கன், ஜான் விஜய், ஷபீர், துஷாரா விஜயன், அனுபமா குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கரோனா பொதுமுடக்கம் காரணமாக ஓடிடியில் வெளியானபோதும், சார்பட்டா பரம்பரை பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. அப்போதே அதன் அடுத்த பாகத்துக்கான எதிர்பார்ப்புகள் வலம்வந்த நிலையில், தற்போது ’சார்பட்டா -2’ படத்துக்கான அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியாகி உள்ளது.
’சார்பட்டா ஆட்டத்தின் இரண்டாம் சுற்று’ என்ற முன்மொழிதலோடு, அடுத்த பாகத்துக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பா.ரஞ்சித்தின் தயாரிப்பு மற்றும் இயக்கம், ஆகியவற்றோடு, நடிகர்களில் ஆர்யா மட்டும் அதிகாரபூர்வமாக அறிவிப்பாகி உள்ளது. இதர கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் குறித்தான தகவல் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.
முதல் பாகம் ஓடிடியில் வெளியானபோதே பிரம்மாண்ட திரைப்படம் அகன்ற திரையில் வெளியாகி இருக்கலாம் என்ற ரசிகர்களின் ஆதங்கம் அதிகம் வெளிப்பட்டது. அதனை எதிரொலிக்கும் வகையில், ’சார்பட்டா 2’ திரையரங்கில் வெளியாகும் என்ற தகவலும் கூடுதலாக வெளியாகி உள்ளது.