பாரதிதாசன்… கண்ணதாசன்… சரோஜா தேவி!

ஜனவரி 7: சரோஜா தேவியின் பிறந்தநாள்
பாரதிதாசன்… கண்ணதாசன்… சரோஜா தேவி!

சென்னைப் பெருநகரம் பன்மைச் சமூகமாக விளங்கினாலும் இன்னும் தனது கிராமத்து வேர்களை இழந்துவிடவில்லை. ஆடி மாதம் தொடங்கிவிட்டால் தெருவுக்குத் தெரு அம்மன் கோயில் திருவிழாக்கள், கூழ் ஊற்றுதல், இரவில் ரெக்கார்ட் டான்ஸ் நடனங்கள் எல்லாம் இன்னமும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. சென்னையில் நடக்கும் இசைவட்டு நடனங்களில் ‘புதிய பூமி’ குழுவுக்கு முதலிடமும் ‘கிளியோபாட்ரா’ குழுவுக்கு இரண்டாம் இடமும் கொடுக்கலாம். இது 15 ஆண்டுகளுக்கு முந்தைய மதிப்பீடு. தற்போது மாறவும் செய்யலாம்.

நடிகை சரோஜா தேவி
நடிகை சரோஜா தேவி

‘புதிய பூமி’ குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சிகள் பாரதிதாசனின் ‘சங்கே முழங்கு’ பாடலுடன் தொடங்குவது வழக்கம். அக்குழுவின் அனைத்து நடனக் கலைஞர்களும் மேடையேறி முதல் பாட்டிலேயே பிரமிப்பை உருவாக்கிவிடுவார்கள். பாடல் வரிகள் பார்ப்பவர்களின் மனதில் ஒரு பெருமிதத்தை எழச்செய்யும். யார் யாரோ அந்தப் பாடலுக்கு வாயசைத்தாலும் எனக்கு சரோஜா தேவியின் முகம்தான் அப்போதும் இப்போதும் எப்போதும் நினைவில் வந்துபோகும். இலக்கிய விழாக்களோ அரசியல் மேடைகளோ ‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்...’ என்று ஆரம்பித்துவிட்டாலே சரோ நினைவுக்கு வந்துவிடுகிறார்.

பாரதிதாசனுக்கும் எம்ஜிஆருக்கும் இடையிலான பிணைப்புகள் தனித்து எழுதப்பட வேண்டிய கட்டுரை. ‘நான் ஏன் பிறந்தேன்?’ என்ற படத்தில் பாரதிதாசன் எழுதிய ‘சித்திரச் சோலைகளே’ என்ற பாடலிலும் அவர் நடித்திருக்கிறார். ‘சங்கே முழங்கு’ என்ற தலைப்பிலேயே அவரது ஒரு திரைப்படம் வெளிவந்திருக்கிறது. அவருடைய ஆட்சிக்காலத்தில்தான் திருச்சிராப்பள்ளியில் பாரதிதாசனின் பெயரில் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. பல்கலைக்கழகத் தொடக்க விழாவில் பாரதியார், பாரதிதாசன் படங்களைத் திறந்துவைத்து, ‘அவர்கள் இருவரும் தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் மட்டுமல்ல, உலகுக்கே சொந்தம்’ என்று பேசியவர் எம்ஜிஆர்.

சரோஜா தேவி, எம்ஜிஆர்...
சரோஜா தேவி, எம்ஜிஆர்...

சரோஜா தேவியும் எம்ஜிஆரும் இணைந்து நடித்த ‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்’ பாடலின் மேடை அலங்கரிப்பில் ‘புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கவிதைகள்’ புத்தகத்தின் பிரம்மாண்ட வடிவம் பின்னணியில் சுழன்றுகொண்டிருக்கும். புத்தகம் திறக்க, அதிலிருந்து சங்கை முழங்கியபடி சரோஜா தேவி தோன்றுவார். பாரதிதாசன் இயக்க விரும்பிய ஒரு படத்தில் சரோஜா தேவி நடிப்பதற்கும் ஒப்பந்தமாகியிருந்தார். அந்த முயற்சி நிறைவேறாமல் போய்விட்டது.

திரைப்படத் துறையை விரும்பிய பாரதிதாசன் அறுபதுகளின் தொடக்கத்தில் புதுவையிலிருந்த தனது வீட்டை அடகு வைத்து அதில் கிடைத்த பணத்தைக்கொண்டு சென்னைக்குக் கிளம்பிவந்தார். ‘பாரதிதாசன் பிக்சர்ஸ்’ திரைப்பட நிறுவனத்தைத் தொடங்கினார். தான் எழுதிய ‘பாண்டியன் பரிசு’ காப்பியத்தைத் திரைப்படமாக்குவதே பாரதிதாசனின் நோக்கம். அக்காப்பியத்தின் முதன்மைப் பாத்திரங்களுக்கு நடிகர்களையும் தேர்வுசெய்துவிட்டார். வேலன் வேடத்தில் சிவாஜி கணேசனும், அன்னம் வேடத்தில் சரோஜா தேவியும் நடிக்க ஒப்பந்தமானார்கள். பாரதிதாசனின் காப்பியத் தலைவியாக நடிக்கும் வாய்ப்பு சரோஜா தேவிக்குக் கிடைத்தாலும், வரலாற்றுத் திரைப்படத்துக்கான பெருஞ்செலவைக் கருதி அத்திட்டம் கைவிடப்பட்டுவிட்டது.

பாரதிதாசனின் புகழ்பெற்ற கவிதைக்கு இதழசைத்த சரோஜா தேவி, கண்ணதாசனின் பாடல்களில் தோன்றி நடிக்கும் வாய்ப்புகளை நிறையப் பெற்றார். அவர் காலத்தில் நடித்த மற்ற நடிகைகளும்கூட அந்த வாய்ப்புகளைப் பெறத்தானே செய்தார்கள் என்று தோன்றலாம். ஆனால், பாடலின் வார்த்தைகளுக்கு அவரால்தான் உயிர்கொடுக்க முடிந்தது அல்லது பார்வையாளனின் கவனம் பாடல் வரிகளின் மீது ஈர்க்கப்படுவது அவரால் எளிதாக நிகழ்ந்தது.

சிவாஜி கணேசன், சரோஜா தேவி
சிவாஜி கணேசன், சரோஜா தேவி

‘ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்’ என்றொரு பாடல். பாடல் வடிவிலான கவிதை. ‘இருவிழியாலே மாலையிட்டான்’ என்றொரு வரியை எழுதியிருப்பார் கண்ணதாசன். அந்தப் பாடலைக் கேட்கும்தோறும் அந்த ஒரு வரி சில நிமிடங்களுக்கு நம் நினைவை நிறைத்துநிற்கும். பாடலைப் பார்ப்போர் மனதில் இன்னும் ஆழப் பதிந்துவிடும். அதே வார்த்தைகளை வாலி வேறொரு பாடலிலும் எழுதியிருக்கிறார். கிணற்றடியில் நீராடியபடியே கே.ஆர்.விஜயா தோன்றும், ‘அந்த மாப்பிள்ளை காதலிச்சான் கையப் பிடிச்சான்’ என்ற பாடல். எம்ஜிஆர் இணைந்து நடித்தது. ‘கையருகில் பாவை வந்தாள், கண்ணிரண்டில் மாலையிட்டாள்’ என்று எம்ஜிஆர் இதழசைத்தும் கவனத்தை ஈர்க்காத ஒரு உருவகம், சரோஜா தேவியின் இமைகளின் சிறகடிப்பில் பார்வையாளனைக் கவர்ந்துவிடுகிறது.

‘அடைக்கலமானேன் முடிவினிலே’ என்று தலையணையில் முகம் புதைக்கும் அந்தக் கறுப்பு-வெள்ளைக் காட்சி நெஞ்சைவிட்டு நீங்காது என்றென்றும். இறைவி நீயே நீயே. வாழ்க நலமுடன்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in