
விஜய் நடிக்கும் ‘லியோ’ திரைப்படத்தின் எதிர்நாயகனாக தோன்றும் சஞ்சய் தத், தற்போது படப்பிடிப்பில் இணைந்திருக்கிறார். அவரை வரவேற்று விஜய் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கொண்டாடி வருகின்றனர்.
பாலிவுட்டின் வெண்ணெய் ஹீரோக்களின் மத்தியில் ரக்கட் பாய் தோரணையில் ரசிகர்களை வெகுவாய் ஈர்த்தவர் சஞ்சய் தத். நாயகன் - எதிர் நாயகன் என இரண்டும் கலந்த சுவாரசியமான கதாபாத்திரங்கள் இவருக்கு தனி அடையாளம் தந்திருக்கின்றன. திரையில் மட்டுமன்றி நிஜ வாழ்க்கையிலும் நிறைய போராட்டங்களை சந்தித்தவர் சஞ்சய் தத். அண்மையில், முற்றிய புற்றுநோயின் பிடியிலிருந்து மீண்ட இவரது அனுபவமும் இதில் அடங்கும்.
2020ல் சஞ்சய் தத்துக்கு நுரையீரல் புற்றுநோய் உறுதி செய்யப்பட்டது. நான்காவது நிலை எனப்படும் முற்றிய நிலையில் புற்று காணப்பட்டதால், கீமோ சிகிச்சையை மறுத்த சஞ்சத் தத் தனது இறுதிக்காலத்தை எதிர்கொள்ள தயாரானார். பின்னர் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் அறிவுறுத்தலின்படி சிகிச்சைக்கு உடன்பட்டார். இதன் விளைவாக புற்றுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றியும் பெற்றார். அதனை இந்த ஆண்டின் தொடக்கத்தில் சஞ்சய் தத் உறுதி செய்தார்.
இந்த சஞ்சய் தத், லியோ படப்பிடிப்பில் தற்போது இணைந்திருக்கிறார். படத்தில் எதிர்நாயகனாக சஞ்சய் தோன்றுவதாக சொல்லப்பட்ட நிலையில், லியோ அப்டேட்டுக்காக தேவுடு காத்திருந்த விஜய் ரசிகர்கள், சஞ்சய் தத்தையும் வரவேற்று கொண்டாடி வருகின்றனர். அவர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில், லியோ தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட குறுவீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைக்கும் லியோ திரைப்படத்தில் விஜய் உடன், த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் இணைந்து நடிக்கின்றனர்.