காவல் நிலைய ஜாமீனில் ஏன் செல்லவில்லை?- மஞ்சு வாரியர் புகாரில் காரணம் சொன்ன இயக்குநருக்கு ஜாமீன்

காவல் நிலைய ஜாமீனில் ஏன் செல்லவில்லை?- மஞ்சு வாரியர் புகாரில் காரணம் சொன்ன இயக்குநருக்கு ஜாமீன்

நடிகை மஞ்சு வாரியர் கொடுத்த புகாரை அடுத்து கைது செய்யப்பட்ட இயக்குநர் சணல்குமார் சசிதரனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

மலையாளத்தில் வெளியான ’செக்ஸி துர்கா’ படம் மூலம் பிரபலமானவர் சணல்குமார் சசிதரன். மஞ்சு வாரியர் நடிப்பில் ’காயாட்டம்’ என்கிற படத்தையும் இயக்கியுள்ளார். இவர் சில நாட்களுக்கு முன், ’’நடிகை மஞ்சு வாரியர் தற்போது ஆபத்தான சூழ்நிலையில் இருக்கிறார். அவர் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. கந்து வட்டிக்காரர்கள் சிலரின் காவலில் இருக்கிறார். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு நான்கு நாட்களாகிறது. அவர் மானேஜர்கள் பினீஸ் சந்திரன் மற்றும் பினு நாயர் ஆகியோரின் பெயர்களையும் அவர் வீட்டுக்காவலில் இருப்பதாக நம்புவதற்கான காரணங்களையும் பதிவிட்டு இருந்தேன். இதுவரை யாரும் பதிலளிக்கவில்லை’’ என்று கூறியிருந்தார்.

மஞ்சு வாரியர்
மஞ்சு வாரியர்

சணல்குமாரின் இந்தப் புகார் சமூக வலைதளங்களில் பரபரப்பானது. இதையடுத்து நடிகை மஞ்சு வாரியர், சணல்குமார் மீது கொச்சியில் உள்ள எலமக்காரா போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். அதில், சமூக வலைதளங்கள் மூலம் அவதூறு செய்வதாகவும் தன்னை பிளாக் மெயில் செய்ய முயற்சிப்பதாகவும் கூறியிருந்தார். இதையடுத்து சணல்குமார் சசிதரண் கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரித்து வந்தனர்.

சணல் குமார் சசிதரன்
சணல் குமார் சசிதரன்

பின்னர், காவல் நிலைய ஜாமீனில் வெளிவரும் வகையில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், காவல் நிலைய ஜாமீனில் வெளிவர அவர் மறுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கேட்டுக்கொண்டார். இதையடுத்து ஆலுவா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். காவல் நிலைய ஜாமீனில் ஏன் செல்லவில்லை என்று கேட்ட நீதிமன்றத்திடம், தான் சில விஷயங்களைச் சொல்ல வேண்டும் என்றார், சணல்குமார். என்னவென்று அதை விசாரித்த நீதிமன்றம் பின்னர் அவருக்கு ஜாமீன் வழங்கியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in