சினிமாவை விட்டு விலகியது ஏன்?- சிம்பு ஹீரோயின் திடீர் விளக்கம்

சினிமாவை விட்டு விலகியது ஏன்?- சிம்பு ஹீரோயின் திடீர் விளக்கம்

``சினிமாவை விட்டு விலகியது ஏன்?'' என்று சிம்பு பட ஹீரோயின் இப்போது தெரிவித்துள்ளார்.

சிம்பு நடித்த 'சிலம்பாட்டம்' படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் சனா கான். பிறகு 'தம்பிக்கு எந்த ஊரு', 'பயணம்', 'ஆயிரம் விளக்கு' உள்பட சில படங்களில் நடித்தார். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இவர் மெர்வின் லூயிஸ் என்ற நடனக் கலைஞரைக் காதலித்து வந்தார். பின்னர் அவரை பிரிந்தார். அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார்.

இந்நிலையில் இஸ்லாம் மதத்தை முழுமையாகப் பின்பற்றுவதற்காக, சினிமாவை விட்டு விலகினார். அவருக்கும் குஜராத் மாநிலத்தை சேர்ந்த இஸ்லாமிய அறிஞர் முஃப்தி அனஸ் என்பவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதுதொடர்பான வீடியோவையும் புகைப்படங்களையும் சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டு அறிவித்தார்.

சமூக வலைதளப்பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் சனா கான், இப்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் ’சினிமாவில் பணம், புகழ், பெயர் எல்லாம் கிடைத்தும் மகிழ்ச்சியும் அமைதியும் கிடைக்கவில்லை. மன அழுத்தம் அதிகமாக இருந்தது. அதனால்தான் அதிலிருந்து விலகினேன்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ``இப்போதும் நினைவிருக்கிறது. 2019-ம் ஆண்டு ரம்ஜான் மாதத்தில் என் கனவில் அடிக்கடி ஒரு கல்லறை வந்துபோனது. அது வெறும் கல்லறை அல்ல, எரியும் கல்லறை. அதற்குள் என்னையும் பார்த்தேன். அப்போதுதான் இது எனக்கான அறிகுறி என்பதை உணர்ந்தேன். அதாவது, நீ மாறவில்லை என்றால் இதுதான் உனக்கான முடிவு என இறைவன் கொடுக்கும் எச்சரிக்கை என்றும் நினைத்தேன்.

கணவர்  முஃப்தி அனஸுடன் நடிகை சனா கான்
கணவர் முஃப்தி அனஸுடன் நடிகை சனா கான்

இது எனக்கு கவலையை தந்தது. அப்போது நடந்த மாற்றங்கள் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. ஊக்கமளிக்கும் இஸ்லாமிய உரைகளை கேட்கத் தொடங்கினேன். ஒரு நாள் இரவு மிகவும் அழகான ஒன்றைப் படித்தேன். ஹிஜாப் அணியும் உன் முதல் நாளே, கடைசி நாளாக இருக்க வேண்டாம் என்ற வாசகம் அது. மறுநாள் எனக்குப் பிறந்த நாள். அதிகமான ஹிஜாப்களை வாங்கி வைத்திருந்தேன். பின்னர் அதை ஒருபோதும் அகற்றக் கூடாது என எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். அதில் மகிழ்ச்சி அடைகிறேன்'' என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in