
சிலம்பரசனுடன் சிலம்பாட்டம் படத்தில் நடித்த சனாகான் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெகுவாய் பரிச்சயமானவர். திருமணமாகி ஆன்மிக வாழ்க்கையில் லயித்திருந்தவர், அண்மையில் தனது ரசிகர்களுடன் தனிப்பட்ட குதூகல சேதியினை பகிர்ந்திருக்கிறார்.
கேரள கன்னூரை சேர்ந்த சனாகான் மும்பையில் வளர்ந்த வகையில் மாடலிங் துறையில் பிரபலமானார். அவரது அழகும், நடன அசைவுகளும் பாலிவுட்டுக்கு கொண்டு சென்றது. 2005ல் தொடங்கி 3 ஆண்டுகளில் அவர் நடித்த பாலிவுட் படங்கள் பெரிதாய் பேசப்படவில்லை.
ஆனால் 2008ல் சிம்புவுடன் ஜோடி சேர்ந்து சிலம்பாட்டம் படத்தில் நடித்தது சனாகானுக்கு பெரிய பிரேக் தந்தது. கவர்ச்சியில் துணிந்ததும், பாடல்களில் சிம்புவுக்கு போட்டியாக இறங்கியதும் ரசிகர்களை அதிகம் வசீகரித்தன. அதில் கிடைத்த பெயரே இதர தென்னக மொழிகளிலும் சனாகான் ஒரு சுற்று வலம் வரச் செய்தது.
திடீரென 3 ஆண்டுகளுக்கு முன்னர் குஜராத்தை சேர்ந்த முஃப்தி அனாஸ் என்ற மதகுருவை மணந்ததும், ஆன்மிகத் தேடலில் ஐக்கியமானார். அதையொட்டிய இன்ஸ்டா படங்கள் மற்றும் பதிவுகளில் உதிர்க்கும் ஆன்மிக முத்துக்கள், வழிபாட்டு பயணங்கள் என இன்னொரு முதிர்ச்சியான சனாகான் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அழகுசாதன பொருட்களை சர்வதேச அளவில் சந்தைப்படுத்தும் ஸ்டார்ட் அப் சாதனையாளராகவும் வலம் வந்தார்.
இதனிடையே திருமணமாகி 3 ஆண்டுகள் ஓடிய நிலையில், தற்போது தங்கள் வாரிசினை எதிர்பார்த்திருப்பதாக டிவி பேட்டி ஒன்றில் சனாகான் தெரிவித்திருக்கிறார். ஜூன் மாதம் குடும்பத்தின் புதிய உறுப்பினரை வரவேற்கக் காத்திருக்கும் சனாகானுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.