பிரபல தாதா கொலை மிரட்டல்: குண்டு துளைக்காத காருக்கு மாறிய சல்மான் கான்

பிரபல தாதா கொலை மிரட்டல்: குண்டு துளைக்காத காருக்கு மாறிய சல்மான் கான்

தனக்கு வந்துள்ள கொலை மிரட்டலை அடுத்து, பிரபல நடிகர் சல்மான் கான், தன் காரில், புல்லட் புரூப் கண்ணாடி பொருத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.

பஞ்சாப்பில் பிரபல பாடகர் சித்து மூஸ்வாலா, மே மாதம், சுட்டு கொல்லப்பட்டார். இந்தக் கொலையை, பஞ்சாப் தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான், அவர் தந்தை சலீம்கானுக்கு கொலை மிரட்டல் வந்தது. இந்த மிரட்டலும் பிஷ்னோய் கும்பலிடம் இருந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சல்மான் கான் 1998-ம் ஆண்டு ஜோத்பூர் காட்டில் அரியவகை மான்களை வேட்டையாடியதாக வழக்கு தொடரப்பட்டது. அந்த அரியவகை மான், பிஷ்னோய் சமுதாயத்தின் புனித விலங்கு என்பதால், லாரன்ஸ் பிஷ்னோய் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சல்மான் கானுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு அவர் போலீஸ் உயரதிகாரிகளை சந்தித்தார். அவருக்கு கொடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில் அவர் தனது டொயோட்டா லேண்ட் க்ரூஸர் காரை குண்டுகள் துளைக்காத வகையில், புல்லட் புரூப் கண்ணாடிகளைப் பொருத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் சில பாதுகாப்பு அம்சங்களை, காரில் மேம்படுத்தி இருப்பதாகவும் பாலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in