நடிகர் சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச்சூடு... ஐந்தாவது நபரை கைது செய்தது காவல்துறை!

சல்மான் கான் - அன்மோல் பிஷ்னோய்
சல்மான் கான் - அன்மோல் பிஷ்னோய்
Updated on
2 min read

பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டின் மீது கடந்த மாதம் மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் சம்பந்தப்பட்ட ஐந்தாவது நபரை மும்பை காவல்துறை கைது செய்திருக்கிறது.

நடிகர் சல்மான் கானின் வீடு மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் அமைந்துள்ளது. இவர் வீட்டின் மீது மர்ம நபர்கள் கடந்த மாதம் துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விஷயத்தில் வழக்குப் பதிவு செய்த மும்பை காவல்துறை, துப்பாக்கிச்சூடு நடத்திய விக்கி குப்தா மற்றும் சாகர் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டது.

மும்பையில் உள்ள சல்மான் கான் வீடு
மும்பையில் உள்ள சல்மான் கான் வீடு

இதனிடையே, பிரபல நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரன் அன்மோல் பிஷ்னோய், இந்த துப்பாக்கி சூட்டுக்கு பொறுப்பேற்றுக்கொள்வதாக தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். இதைத் தொடர்ந்து இந்தச் சம்பவத்திற்கு துப்பாக்கி சப்ளை செய்த அனுஜ் தாபன் மற்றும் சோனு சுபாஷ் ஆகியோர் பஞ்சாப்பில் கைது செய்யப்பட்டனர்.

இதில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அனுஜ் தாபன் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தற்கொலை செய்து கொண்டது இந்த வழக்கில் மேலும் சிக்கலை ஏற்படுத்தியது. அனுஜ் தற்கொலை தொடர்பாக சிறையில் உள்ள போலீஸாரிடம் சிஐடி போலீஸார் விசாரணை நடத்துவார்கள் என்று இணை கமிஷனர் லட்சுமி கெளதம் தெரிவித்தார்.

சல்மான் கான்
சல்மான் கான்

இப்படியான சூழ்நிலையில்தான், இந்த துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஐந்தாவது நபரை மும்பை காவல்துறை ராஜஸ்தானில் இன்று கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட நபர் முகமது சவுத்ரி என அடையாளம் காணப்பட்டதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச்சூடு நடத்திய இருவருக்கு முகமது சவுத்ரி பணம் கொடுத்து உதவியிருக்கிறார். இன்று மும்பை அழைத்து வரப்படும் முகது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்படுவார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in