'நடிகர் சல்மான் கானின் பாதுகாப்பைப் பலப்படுத்தி உள்ளோம்': கொலை மிரட்டலுக்குப் பின்னிருக்கும் ரவுடியின் பகீர் பின்னணி


'நடிகர் சல்மான் கானின் பாதுகாப்பைப் பலப்படுத்தி உள்ளோம்': கொலை மிரட்டலுக்குப் பின்னிருக்கும் ரவுடியின் பகீர் பின்னணி

நடிகர் சல்மான்கானுக்கும், அவர் தந்தைக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல இந்தி நடிகர் சல்மான்கான். இவரது தந்தை சலீம்கான். இவர் தனது குடும்பத்துடன் மும்பை பாந்த்ராவில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் வசித்து வருகிறார். சல்மான் கானின் தந்தை சலீம்கான் காலையில் நடைபயிற்சிக்கு செல்வது வழக்கம். நேற்றும் வழக்கம் போல சென்றார். நடைபயிற்சியை முடித்துவிட்டு ஒரு பெஞ்சில் அவர் அமர்வது வழக்கம்.

அவர் அமர்ந்திருந்த பெஞ்சில் ஒரு துண்டு சீட்டு வைக்கப்பட்டு இருந்தது. இதைக் கண்ட சலீம் கானின் பாதுகாவலர்கள் அதை எடுத்து பார்த்தனர். அதில் சல்மான் கானுக்கும் சலீம் கானுக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து பாந்த்ரா போலீஸ் நிலையத்தில் இதுபற்றி புகார் கொடுக்கப்பட்டது. கொலை மிரட்டல் கடிதத்தையும் போலீஸாரிடம் கொடுத்தனர். வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் பஞ்சாப் பாடகர் சித்து மூஸேவாலா சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் திகார் சிறையில் இருக்கும் பிரபல ரவுடி லாரன்ஸ் பிஸ்னாய் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்துக்குப் பிறகு சல்மான்கானுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அவருக்கு கொலை மிரட்டல் வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த சில வருடங்களுக்கு முன், லாரன்ஸ் பிஸ்னாய் கூட்டாளி ராகுல் என்பவர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டார். அரியவகை கருப்பு மான்களை வேட்டையாடியதாக சல்மான் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த கருப்பு மான்களை பிஷ்னாய் சமூகம் புனிதமாக கருதுகிறது. அதற்கு பழிவாங்க ராகுல் என்பவர், சல்மானைக் கொல்வதற்கான ஒத்திகையைப் பார்த்ததாக அப்போது கூறப்பட்டது.

‘சல்மானின் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளோம். அவருடைய குடியிருப்பைச் சுற்றி போலீஸார் பாதுகாப்புக்கு இருப்பார்கள்’ என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in