ஓநாய் மனிதனிடம் ‘கெஸ்ட்’ ஆக சிக்கிய சாக்‌ஷி அகர்வால்!

ஓநாய் மனிதனிடம் ‘கெஸ்ட்’ ஆக சிக்கிய சாக்‌ஷி அகர்வால்!

’கெஸ்ட் ; சாப்டர்-2’ என்ற படத்தில் ஓநாய் மனிதன் என்கிற கதைக்களத்தைக் கையாள்கிறோம் என்று இயக்குநர் ரங்கா புவனேஷ்வர் தெரிவித்தார்.

குட் ஹோப் பிக்சர்ஸ் சார்பில் டி.கோகுல கிருஷ்ணன் தயாரிக்கும் படம், ‘கெஸ்ட் ; சாப்டர்-2’. ரங்கா புவனேஷ்வர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் குமார், விது பாலாஜி ஆகியோர் நடிக்க, நாயகியாக சாக்‌ஷிஅகர்வாலும் முக்கிய வேடத்தில் ஜாங்கிரி மதுமிதாவும் நடித்துள்ளனர். அனிமல் திரில்லர் என்ற ஜானரில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

படத்தை இயக்கியுள்ள ரங்கா புவனேஷ்வர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான "ஆறாவது வனம்" என்கிற படத்தை இயக்கியவர். பிறகு மலையாளத்துக்கு சென்ற அவர், இந்தப் படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார். ரமேஷ் ஜி ஒளிப்பதிவு செய்ய, அன்வர் கான் தாரிக் இசையமைக்கிறார்.

படம் பற்றி ரங்கா புவனேஷ்வர் கூறும்போது, “இந்தப் படத்தில் ஓநாய் மனிதன் என்கிற கதைக்களத்தைக் கையாள்கிறோம். இந்திய சினிமாவில் முதல்முறையாக இப்போதுதான் இதுபோன்ற கதைக்களம் கையாளப்படுகிறது. இந்த ஓநாய் மனிதன் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு விஃஎப்எக்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வசதி இங்கு இல்லை என்பதால் ஹாங்காங்கில் இந்தப் படத்தின் விஃஎப்எக்ஸ் காட்சிகளை வடிவமைத்துள்ளோம்.

கொடைக்கானல் மற்றும் திருவனந்தபுரம் பகுதியில் உள்ள அடர்ந்த காட்டில் 45 நாட்கள் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம். நாயகி சாக்‌ஷி அகர்வால், மதுமிதா, ரன்வீர் குமார், விது பாலாஜி ஆகியோரை சுற்றித்தான் கதைப் பின்னப்பட்டுள்ளது.

இந்த நான்கு பேரில் ஒருவர்தான் ஓநாய் மனிதராக மாறுகிறார். அவர்களிடம் மற்றவர்கள் சிக்கிக் கொள்கின்றனர். அது யார் ?, எதற்காக அப்படி மாறுகிறார் என்பதுதான் படத்தின் கதை. வனப் பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கும்போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான திகில் அனுபவம் கிடைத்தது’’ என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in