‘சகலகலாவல்லி’ பானுமதி!

97-வது பிறந்தநாளில் சிறப்புப் பகிர்வு
நடிகை பானுமதி
நடிகை பானுமதி

கலைகளில் ஏதேனும் ஒரு துறையில் ஜெயிப்பதும் சாதிப்பதுமே வியந்து பார்க்கப்படுகிறது. அந்தத் துறைக்குள் இருக்கிற சகல நிலைகளுக்குள்ளும் புகுந்து புறப்பட்டு, வெற்றிக் கொடி நாட்டுவது என்பது அசாதாரணம். அவர்களைத்தான் ‘சகலகலாவல்லவர்’ என்கிறோம். ‘சகலகலாவல்லி’ என்கிறோம். தமிழ்த் திரையுலகில் அப்படியொரு சகலகலாவல்லியாக, அஷ்டாவதனி என்று சொல்லப்படுகிற எட்டு விஷயங்களையும் அநாயசமாகச் செய்து அசத்தியவர் நடிகை பானுமதி.

பூர்விகம் ஆந்திர மாநிலம். சிறு வயதிலேயே பாடுவதில் கெட்டிக்காரர் என்று பேரெடுத்தார். முறைப்படி கர்நாடக சங்கீதம் கற்றுக்கொண்டார். பாட்டும் ராகமும் இவர் குரலில் இருந்து வெளிப்பட்டபோது, தனி பாணியாக இருந்தது. புதுச்சுவையுடன் திகழ்ந்தது. இவரின் பாடும் திறனைக் கண்டறிந்தபோதுதான், இவரின் முகமும் கண்களும் சட்சட்டென்று மாறி பாவனைகள் செய்வதைக் கண்டு எல்லோருமே ஆச்சரியப்பட்டார்கள். முதல் பட வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தில் நடித்ததுடன் பாடவும் செய்தார். தெலுங்கில் வரிசையாகப் படங்கள் வந்தவண்ணம் இருந்தன.

அப்போதெல்லாம் தென்னிந்திய மொழிப் படங்கள் சென்னையில்தான் படமாக்கப்பட்டு வந்தன. அப்படி1943-ல் ‘கிருஷ்ண ப்ரேமா’ எனும் தெலுங்குப் படப்பிடிப்புக்காக சென்னைக்கு வந்தார் பானுமதி.

உதவி இயக்குநராகப் பணியாற்றிக்கொண்டிருந்த பி.எஸ்.ராமகிருஷ்ண ராவைச் சந்தித்தார். இருவரும் பேசிக்கொண்டார்கள். சினிமா குறித்தும் தங்களின் விருப்பங்கள் குறித்தும் எதிர்காலம் குறித்தும் பேசினார்கள். அந்தப் பேச்சில் அன்பு படர்ந்திர்ந்தது. அந்த அன்பு காதலாக உருவெடுத்தது.

சினிமாவில் உயர்ந்துகொண்டே இருக்கும் சூழலில், காதலும் உயர்ந்தபடி இருக்க, ஒருகட்டத்தில், தன் காதலை வீட்டில் சொன்னார் பானுமதி. கொந்தளித்தது வீடு. கடும் எதிர்ப்பைக் காட்டியது. என்ன செய்வது என்று தெரியாமல், வெளியே சிரித்துக்கொண்டும் உள்ளே அழுதுகொண்டுமாக நிஜவாழ்க்கையில் நடித்தபடி, சினிமாவிலும் நடித்துக்கொண்டிருந்தார். அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ராமையாவுக்கும் அவரின் மனைவி கண்ணாமணிக்கும் விஷயம் தெரிந்தது. இவர்களும் இன்னும் சில நண்பர்களுமாகச் சேர்ந்து இருவருக்கும் திருமணம் செய்துவைத்தனர்.

கல்யாணம் பண்ணிக்கொண்டதும் பானுமதி எடுத்த முதல் முடிவு... ‘இனி சினிமாவில் நடிக்கப்போவதில்லை’ என்பதுதான்! ‘உன் விருப்பம் என்னவோ அதைச் செய்’ என்று கணவர் ராமகிருஷ்ணாவும் சொல்ல, ‘கிருஷ்ண ப்ரேமா’வை நடித்துக் கொடுத்துவிட்டு, அமைதியாக, ஆனந்தமாக இல்லறத்தில் ஈடுபட்டார் பானுமதி.

’என்னப்பா இது... பானுமதி தொடர்ந்து நடிச்சிட்டிருந்தால், அவர் மிகப்பெரிய உயரத்துக்குப் போயிருப்பாரேப்பா’ என்று தெலுங்குத் திரையுலகமே அலுத்துக்கொண்டது.

இந்த நிலையில்தான் ஆந்திரத் திரையுலகில் பல வெற்றிகளைச் சுவைத்த பி.என்.ரெட்டி, ஒருநாள் ராமகிருஷ்ணாவின் வீட்டுக்கு வந்தார். வந்தவர், பானுமதியையும் ராமகிருஷ்ணாவையும் உட்காரச் சொல்லி, தான் எடுக்க இருக்கும் படத்தின் கதை மொத்தத்தையும் சொன்னார்.

‘இதுல பானு நடிச்சாத்தான் நல்லாருக்கும். அவர் திரும்பவும் நடிக்க வரணும். ஒருவேளை அவர் நடிக்கமாட்டேன்னு சொல்லிட்டா, நான் இந்தப் படத்தையே ‘ட்ராப்’ பண்ணிருவேன்’ என்றார்.

பானுமதியும் ராமகிருஷ்ணாவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். ‘அவ்ளோ பெரிய மனுஷன் கேக்கறார். இந்த ஒரு படத்துல மட்டும் நடிச்சிரு’ என்றார் ராமகிருஷ்ணா. ’ஸ்வர்க்க சீமா’ எனும் அந்தப் படத்தில் திருமணத்துக்குப் பிறகு, ஒரு இடைவெளிக்குப் பின்னர் நடித்தார் பானுமதி. அவ்வளவுதான். அந்தப் படம் அடைந்த பிரம்மாண்ட வெற்றியால், அந்தத் தயாரிப்பு நிறுவனத்துக்குப் பெரும் லாபம் கிடைத்தது. லாபம் ஒருபக்கம் இருக்கட்டும்... பானுமதி எனும் திறமையான நடிகை திரையுலகுக்கு மீண்டும் கிடைத்தார்.

பிறகு, வாய்ப்புகள் வந்துகொண்டே இருந்தன. எதையும் தவிர்க்கவே முடியவில்லை. கணவனும் மனைவியும் பேசி ‘தொடர்ந்து நடிப்பது’ என முடிவு செய்யப்பட்டது. தமிழிலும் படங்கள் வரத்தொடங்கின. தெலுங்கைப் போலவே தமிழிலும் அவரின் படங்களுக்கு வரவேற்பு கிடைத்தது. பானுமதியின் நடையும் உச்சரிப்பும் அலட்சியம் கலந்த பார்வையும், புதுமாதிரியாக இருந்தது. எவர் சாயலுமில்லாமல் இருந்தது. ஆளுமைமிக்க கதாபாத்திரங்கள் நிறையவே கிடைத்தன. அந்த ஆளுமை பானுமதியின் இயல்பு. ஆகவே, நடிப்பில் அவர் இன்னும் இன்னும் முன்னேறினார்.

தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார்கள் என்று கொண்டாடப்படும் பி.யு.சின்னப்பா, தியாகராஜ பாகவதர் முதலானோருடன் நடித்தார். 1947-ல் கணவனும் மனைவியும் சேர்ந்து படம் தயாரித்தார்கள். ‘ரத்னமாலா’ எனும் அந்தப் படம் தெலுங்கிலும் தமிழிலும் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது. படத்தில் நடித்த ஏனைய நடிகர்கள், தயாரிப்புப் பணிகளை இவ்வளவு நுட்பமாக இவர்கள் கையாள்வது கண்டு ஆச்சரியப்பட்டார்கள். தொடர்ந்து படங்களை தயாரிப்பது என இருவரும் முடிவு செய்தார்கள்.

அந்தச் சமயத்தில், 1952-ம் ஆண்டில், ‘நாமே ஒரு ஸ்டுடியோவை அமைத்தால் என்ன’ என்று இருவருக்கும் தோன்றியது. ‘பரணி ஸ்டுடியோ’வை உருவாக்கினார்கள். ஒருபக்கம் நடிப்பு, இன்னொரு பக்கம் தயாரிப்பு, மற்றொரு பக்கம் ஸ்டுடியோ பராமரிப்பு என மும்முரமாக இருந்தார்கள்.

அந்தக் கால ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘நல்லதம்பி’, ’ரத்னகுமார்’ என தமிழில் வரிசையாக படங்கள் வந்து பானுமதியின் அசாத்தியமான நடிப்பைச் சொல்லின. அடுத்தகட்டமாக ‘சண்டிராணி’ படத்தைத் தானே தயாரித்து நடித்து இயக்கினார். இந்தப் படம், தமிழ், தெலுங்கு, இந்தி என மும்மொழிகளில் வந்து கலக்கியெடுத்தது. ‘எந்தத் துறைக்குள் நுழைந்தாலும் அதில் முழுமையாக அறிந்து, செயலாற்றுகிற ஜோடி’ என்று பானுமதியையும் ராமகிருஷ்ணாவையும் தமிழ், தெலுங்கு திரையுலகம் கொண்டாடியது.

எம்ஜிஆருக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த ‘மலைக்கள்ளன்’ படத்தில் பானுமதியின் நடிப்புக்கும் அட்டகாச வரவேற்பு கிடைத்தது. அதேபோல், தமிழின் முதல் கேவா கலர் படமான ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ படத்திலும் நடிப்பில் அசத்தியிருந்தார். ‘அழகான பொண்ணுதான் அதுக்கேத்த கண்ணுதான்’ என்ற பாட்டும் இவரின் ஆட்டமும் தனித்துவம் பெற்றன.

பானுமதி ஒரு கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறாரென்றாலே, அந்தப் படத்தில் நாயகனுக்கு வழங்கப்படுகிற சம அந்தஸ்து கதையில் கொடுக்கப்பட்டது.

‘ஒளிவுமறைவில்லாதவர், உள்ளொன்று வைத்து வெளியே வேறுவிதமாகப் பேசாதவர், எவருக்கும் எதற்கும் பயப்படாதவர்’ என்றெல்லாம் பானுமதியைச் சொல்லுவார்கள். ‘சின்னவர்’ என்று எல்லோராலும் மதிக்கப்பட்டவர் எம்ஜிஆர். அப்பேர்ப்பட்ட எம்ஜிஆரே, பானுமதியின் குணமறிந்து, அவருடன் பேசினார். தன் ‘நாடோடி மன்னன்’ படத்தில் அவரை ஒரு நாயகியாக்கினார். 'முதலாளியம்மா’ என்றுதான் பானுமதியை அழைப்பாராம் எம்ஜிஆர்.

‘ரங்கோன் ராதா’, ‘மக்களைப் பெற்ற மகராசி’, ’கள்வனின் காதலி’, ‘அம்பிகாபதி’ என பல படங்களில் சிவாஜியுடன் இணைந்து நடித்தார். ’அன்னை’ படத்தில் பானுமதியைத் தவிர வேறு எவரும் அந்தக் கதாபாத்திரத்தை இத்தனை மிடுக்காகவும் பாசத்துடனும் செய்திருக்கவே முடியாது.

அதேபோல், ’மணமகன் தேவை’ எனும் முழுநீள காமெடிப் படத்தில் பானுமதியின் நகைச்சுவை பெரிய அளவில் பேசப்பட்டது. சிவாஜியுடன் நடித்த ‘அறிவாளி’ படத்தில் பல இடங்களில் இருவரும் போட்டிபோட்டுக்கொண்டு நடித்தார்கள்.

தனக்குப் பிடிக்கவில்லையென்றால் எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் எத்தனை பெரிய கம்பெனியாக இருந்தாலும் ’நடிக்க முடியாது’ என்று உறுதியாகச் சொல்லிவிடுவார். படப்பிடிப்பு என்று வரச்சொல்லிவிட்டு காத்திருக்க வைத்தாலும் அவருக்குப் பிடிக்காது. ‘ஷூட்டிங்ல காக்க வைக்கிறது அந்தக் கேரக்டரோட நாம ஒன்றியிருக்கறதை ‘ஸ்பாயில்’ பண்ணும். அதை மன்னிக்கவே மாட்டேன்’ என்று பானுமதி வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார்.

’இப்படியும் ஒரு பெண்’, ’வாங்க சம்மந்தி வாங்க’ முதலான படங்களுக்கு இசையமைத்து பிரமிக்க வைத்தார். அவரது திரைவாழ்வில் மிக முக்கியமானதொரு படைப்பாக உருவானது ‘பக்த துருவ மார்க்கண்டேயா’. கதை, திரைக்கதை, வசனம், நடிப்பு, இசை, தயாரிப்பு, இயக்கம் என சகலமும் பானுமதிதான். தமிழிலும் தெலுங்கிலும் வெள்ளிவிழா கண்டது இந்தப் படம். தமிழகத்தில் இந்தப் படத்துக்கு வரிவிலக்கு கொடுக்கப்பட்டது. பள்ளி நிர்வாகமே மாணவர்களை ஒன்றுசேர்த்து அழைத்துச் சென்று, இந்தப் படத்தைக் காட்டியது.

இயக்குநர் ஆர்.கே.செல்வமணியின் வற்புறுத்தலின் பேரில், ‘செம்பருத்தி’ படத்தில் பாட்டி கதாபாத்திரத்தில் நடித்தார். அதிலும் பாடியிருந்தார்.

மாநில விருதுகளையும் தேசிய விருதுகளையும் பெற்ற நடிகை பானுமதிக்கு, தபால்தலை வெளிட்டு கெளரவித்தது அரசாங்கம்.

2005 டிசம்பர் 24-ம் தேதி காலமானார் பானுமதி. 1925 செப்டம்பர் 7-ம் தேதி பிறந்த பானுமதிக்கு இன்று 97-வது பிறந்தநாள்.

சகலகலாவல்லி பானுமதியைப் போற்றுவோம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in