உங்களைவிட தேவ் அழகாய் இருக்கிறார்!

சமந்தாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்
உங்களைவிட தேவ் அழகாய் இருக்கிறார்!

புகழ்பெற்ற காவிய கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு எல்லா கதாநாயகிகளுக்கு அமைந்துவிடுவதில்லை. அப்படியொரு அரிய வாய்ப்பு ‘தென்னிந்தியாவின் டார்லிங்’ என்று புகழப்படும் சமந்தாவின் மடியில் வந்துவிழ, அதைத் தன்னுடைய அழகாலும் திறமையான நடிப்பாலும் வருடிக் கொடுத்திருக்கிறார் சமந்தா. அதுதான் தெலுங்கில் தயாராகி, தமிழ் உள்ளிட்ட இந்தியாவின் பல மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகும் ‘ஷாகுந்தலம்’.

உலகப்புகழ் பெற்ற மகாகவி காளிதாஸர் சமஸ்கிருத மொழியில் எழுதிய மாபெரும் காதல் காவிய நாடகம் 'அபிஞான ஷாகுந்தலம்'. அதைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள படமே 'ஷாகுந்தலம்'. யார் இந்த ஷாகுந்தலம்?

மகாபாரதத்தில் வரும் ஒரு கிளைக் கதைதான் இந்த ‘ஷாகுந்தலம்’. சகுந்தலை - ராஜா துஷ்யந்தன் ஆகியோரின் காதலானது புராணத் தன்மை கொண்டதாக இருந்தாலும் இந்தியர்கள் மனதில் மொழி கடந்து நிலம் கடந்து பதிந்துபோன கதை.

Ganesh

அதை முதன் முதலில் ‘சகுந்தலை’ என்கிற பெயரில் தமிழில் படமாக்கியவர் எல்லீஸ் ஆர்.டங்கன். அந்தப் படத்தில் கோகில காண இசைவாணி, இந்தியாவின் இசைக்குயில் என்று புகழப்பெறும் எம்.எஸ். சுப்புலட்சுமி சகுந்தலையாக கதாநாயகி வேடத்தில் அற்புதமான பாடல்களைப் பாடி நடித்தார். எம்.எஸின் தோற்றமும் குரலின் இனிமையும் எளிய நடிப்பும் அந்தப் படத்தை வெற்றிப் படமாக்கின. அதில் துஷ்யந்தனாக மற்றொரு இசை மேதையான ஜி.ஆர். பாலசுப்ரமணியம் நடித்திருந்தார்.

இதன் பின்னர் 20 ஆண்டுகள் கழித்து 1961-ல் புபேன் ஹஸரிகா என்கிற அசாமிய இயக்குநர் அசாமிய மொழியில் ‘சகுந்தலா’ என்கிற தலைப்பில் இயக்கி வெளியிட்டார். இப்படம் குடியரசுத் தலைவரின் வெள்ளிப் பதக்கம் வென்றது. 1965-ல் குஞ்சாக்கோ இயக்கத்தில் ‘சகுந்தலா’ என்கிற தலைப்பிலேயே மலையாளத்திலும் திரைப்படமாக வெளிவந்தது. அதில் கே.ஆர்.விஜயாவும் பிரேம் நசீரும் சகுந்தலாவாகவும் துஷ்யந்தனாகவும் நடித்திருந்தனர்.

தற்போது எம்.எஸ்.சுப்புலட்சுமிக்குப் பிறகு ‘சகுந்தலை’ கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் தமிழ்ப் பெண் சமந்தாதான். ‘ஷாகுந்தலம்’ படத்தில் தேவ் மோகன், ராஜா துஷ்யந்தனாக நடித்துள்ளார். சமந்தாவுக்கு இணையான அழகுடன் தேவ் மோகன் வசீகரிக்கிறார். “உங்களைவிடவும் தேவ் அழகாக இருக்கிறார்” என்று சமந்தாவை இணையத்தில் கலாய்த்து வருகிறார்கள் நெட்டிசன்கள். “சமீபத்தில் வெளியான ஷாகுந்தலம் படத்தின் நாயகன் - நாயகி இணை தோற்றம் எங்களை மெய்சிலிர்க்க வைக்கிறது” என்று கூறியிருக்கிறார்கள்.

தமிழ் ரசிகர்களையும் கிடுகிடுக்க வைத்த ‘ஒக்கடு’, ‘ருத்ரம்மா தேவி’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ள குணசேகர்தான் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். ராஜா துஷ்யந்தனின் 'புரு' வம்சத்தை, மிக அழகாக மற்றும் பிரம்மாண்டமாக காட்சியமைக்க, காஷ்மீரில் உள்ள கஷ்யப்பா கணுமாலுவில் படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறாராம் இயக்குநர்.

அழகிய கதைக்களம் என்பதைத் தாண்டி, இந்த படத்தில் திறமைமிகு நட்சத்திர பட்டாளமும் இணைந்திருக்கிறது. பாலிவுட்டின் சச்சின் கேடேகர், கபீர் பேதி, டாக்டர் எம்.மோகன் பாபு, பிரகாஷ்ராஜ், மதுபாலா, கௌதமி, அதிதீ பாலன், அனன்யா நாகலா மற்றும் ஜிஷு சென்குப்தா போன்ற பன்மொழி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதால் இதை துணிந்து ஒரு ‘பான் இந்திய’ திரைப்படமாக வெளியிடவிருக்கிறார்கள். இந்தப் படத்தின் கூடுதல் ஈர்ப்பாக, நடிகர் அல்லு அர்ஜுனின் மகள் 'அல்லு அர்ஹா' இளவரசர் பரதன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதையும் இயக்குநர் உறுதிப்படுத்தியிருக்கிறார். வரும் நவம்பர் 4-ம் தேதி சமந்தாவை நீங்கள் சகுந்தலையாக திரையில் கண்டு சிலிர்க்கலாம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in