நடிகர் கார்த்தி: "என் அனுபவத்தை சோதிக்கும் படமாக ‘சர்தார்’ அமைந்தது!"

நடிகர் கார்த்தி: "என் அனுபவத்தை சோதிக்கும் படமாக ‘சர்தார்’ அமைந்தது!"

என் அனுபவத்தை சோதிக்கும் படமாக ‘சர்தார்’ அமைந்தது என்று நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர்கள் கார்த்தி, ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘சர்தார்’. இந்த வருடம் தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் இந்தத் திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில், இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது.

தமிழில் லைலாவுக்கு இந்தப் படம் கம்பேக். அவர் நிகழ்வில் பேசியதாவது, ‘தமிழ் சினிமாவுக்கு மீண்டும் வருவது மகிழ்ச்சி.இதற்கு வாய்ப்பளித்த இயக்குநர் மித்ரனுக்கு நன்றி. கார்த்தியுடன் வேலை செய்தது மகிழ்ச்சி. இதன் மூலம் இவர்கள் குடும்பத்தில் அனைவருடனும் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தில் நடித்த ஒவ்வொரு நிமிடமும் நான் மகிழ்ச்சியாக இருந்தேன். உங்கள் அனைவரது விமர்சனத்தையும் எதிர்ப்பார்த்து காத்திருக்கிறேன்’ என்றார்.

ரஜிஷா விஜயன் பேசியதாவது, ”இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் மிக ஸ்பெஷலானது. அது ஏன் என்பதை நான் படம் வெளியானதும் அதிகம் பகிர்ந்து கொள்கிறேன். இயக்குநர் மித்ரன், நடிகர் கார்த்தி மற்றும் தொழில்நுட்பக் குழு அனைவருக்கும் நன்றி. லைலா மற்றும் ராஷி கண்ணாவுடன் எனக்கு இந்தப் படத்தில் காம்பினேஷன் காட்சிகள் இல்லை. ஆனால், அவர்களுடனும் நடிக்க விருப்பம் இருக்கிறது” என தெரிவித்தார்

ராஷிகண்ணா பேசியதாவது, “எங்கள் அனைவருக்குமான கதாபாத்திரத்தை இவ்வளவு அழகாக எழுதியதற்காக முதலில் மித்ரன் அவர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். மிகவும் திறமையான என்னுடைய சக நடிகராக இருந்த கார்த்திக்கு நன்றி. லைலாவுடன் எனக்கு சில காட்சிகள் உண்டு. படத்தின் தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும் நன்றி. ரஜிஷா மிகத் திறமையான நடிகை. அவரை வரும்காலத்தில் இன்னும் அதிக படங்களில் பார்க்க காத்திருக்கிறேன்” என்றார்.

இயக்குநர் மித்ரன் பேசியதாவது, “இந்தப் படத்தில் அதிக மெனக்கெடல்கள் இருந்தது. இதற்கான அத்தனை நம்பிக்கையையும் தயாரிப்புத் தரப்பு தான் கொடுத்தது. எல்லாரும் இரவு பகலாக வேலை செய்தோம். உடல் உழைப்பு அனைவருமே அதிகம் இதில் கொடுத்திருக்கிறோம். கார்த்தியை அதிகம் இந்தப் படத்தில் டார்ச்சர் செய்திருக்கிறேன். ஏனெனில் எல்லாம் விதவிதமான கதாபாத்திரங்கள். இதில் அவருடைய ஒத்துழைப்பும் மிகச்சரியாக இருந்தது. அவர் காட்டிய ஆர்வமும் என்னையும் இன்னும் சேர்ந்து உழைக்க வைத்தது.

ரஜிஷா இந்தப் படத்தின் மற்றொரு பலம். ராஷி கண்ணாவை முதலில் நான் பார்த்தபோது தமிழில் பேசி அசத்தினார். படத்தில் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். லைலாவுடன் பணிபுரிந்தது நல்ல அனுபவம். சின்ன வயதில் அவருடைய படங்களுக்கு நான் மிகப் பெரிய விசிறி. மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நடிகர்களுக்கும் நன்றி. 80களின் காலக்கட்டத்திலான போர்ஷனில் ஆடை வடிவமைப்பாளர், கலை இயக்குநர் உழைப்பு அபாரமானது. படத்திற்கு இசை வேலையில் ஜிவியுடன் வேலை செய்தது ஜாலியான அனுபவம். நிச்சயம் நல்லதொரு படமாக இது இருக்கும்” என்றார்.

கதையின் நாயகனான கார்த்தி, “’இரும்புத்திரை’ படம் பார்த்து முடித்ததும் ஏதேனும் ஒரு குறுஞ்செய்தி வந்தால் கூட கவனமாக இருப்பேன். அப்படி முக்கியமான நம்மைச் சுற்றி இருக்கும் விஷயங்களைக் கவனித்து படமாக்கி இருக்கிறார். அது நமக்கும் பெரிய விழிப்புணர்வாக இருந்தது. ‘ஹீரோ’ படத்திற்கு பிறகு லட்சுமணன் என்னை மித்ரனை சந்திக்க வைத்தார். 80களில் உளவாளிகளுக்காக ஒரு டீம் உருவாக்கிய போது மிலிட்டரியை சேர்ந்தவர்களை நடிக்க வைக்க முயற்சித்த போது அவர்களுக்கு நடிக்க வரவில்லை. ஏன் இவ்வளவு கஷ்டப்பட வேண்டும் என ஒரு நடிகரையே மிலிட்டரியாக மாற்றி விட்டோம் என சொன்னார். அந்த ஐடியா எனக்கு பிடித்திருந்தது. அதை டெவலப் செய்த போது டபுள் ஆக்‌ஷன் கதையாக மாறி இருந்தது.

கதை கேட்கும்போது ஸ்பை படம் என்பதால் நிறைய கெட்டப்பும் தேவைப்பட்டது. சிவாஜி, எம்.ஜி.ஆர். என ஒவ்வொரு நடிகரின் காலக்கட்டத்திலும் பல கெட்டப்புகள் போட்டு நடிக்கும்படியான கதை வரும். அந்த வரிசையில் எனக்கு இதில் அமைந்திருக்கிறது. என்னுடைய கரியரில் முக்கியமான படமாக இது அமையும். வயதான கெட்டப், ஆஃபிசர் என இத்தனை வருடம் என்னுடைய அனுபவத்தை சோதிக்கும் வகையில் ஒவ்வொரு கதாபாத்திரமும் அமைந்திருந்தது. ஜேம்ஸ் பாண்ட் போன்று இல்லாமல் எல்லாருக்கும் எளிமையான இந்தியன் ஸ்பை த்ரில்லர் கதை இது. லைலா மேம் கதைக்கு மிகப் பெரிய பலம். என்னுடைய கரியரில் மற்றுமொரு மிகப்பெரிய பட்ஜெட் படம். ஹீரோவை விட அதிகம் மெனக்கெட்டது வில்லனுக்குதான். நாட்டைப் பற்றி அதிகம் யோசிக்கும் உளவாளிகளும் நம்முடன் இருக்கிறார்கள். தீபாவளிக்கு வரும் படம் ‘சர்தார்’ எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். இந்தப் படம் வெற்றிப் பெறுவதற்கு தகுந்த உழைப்பைக் கொடுத்திருக்கிறோம். நடிகர் சிவாவின் ‘ப்ரின்ஸ்’ படமும் வெற்றிப் பெற வாழ்த்துகள்” என தெரிவித்தார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in