திரை விமர்சனம்: ‘சாணிக் காயிதம்’

திரை விமர்சனம்: 

‘சாணிக் காயிதம்’

ஒரு அப்பாவிப் பெண்ணும், ஆணும் இணைந்து சாதி ஆணவத்தால் தம் வாழ்வைச் சின்னாபின்னமாக்கிய கயவர்களை வஞ்சம் தீர்ப்பதற்காக ரத்தவெறிபிடித்த கொலைகாரர்களாக விஸ்வரூபம் எடுப்பதே ‘சாணிக் காயிதம்’.

ஒரு கிராமத்தில் காவலர் பணியில் இருக்கிறாள் பொன்னி (கீர்த்தி சுரேஷ்). பொன்னியின் கணவன் மாரி (கண்ணா ரவி) ஒரு அரிசி மில்லில் வேலை பார்க்கிறான். இவர்களின் ஒரே மகள் தனத்திடம் மிகவும் அன்பாய் இருக்கிறான் அந்த ஊரில் சமையல் எரிவாயு சிலிண்டர் போடும் தொழிலாளியான சங்கையா (செல்வராகவன்). மாரி பணியாற்றும் மில்லின் முதலாளி மணியும் அவனுடைய கூட்டாளிகள் வாசு, அன்பு , பெருமாள் ஆகியோரும் சாதி ஆணவத்தின் காரணமாக மாரியை அவமதிக்கிறார்கள். இதை எதிர்த்தற்காக மாரியைப் பழிவாங்கும் வெறியுடன் பொன்னியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்வதோடு மாரியையும் அவர்களின் மகள் தனத்தையும் அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும் குடிசையிலேயே எரித்துக்கொல்கிறார்கள்.

தன் கணவனையும், மகளையும் கொன்ற கயவர்களைப் பழி தீர்க்க கிளம்பும் பொன்னிக்கு துணையாகச் சேர்ந்துகொள்கிறான் சங்கையா. அவனும் தன் மனைவியையும், மகனையும் சாதி ஆணவெறிக்குப் பலிகொடுத்தவன். பொன்னியின் வாழ்வைச் சீரழித்தவர்களையும் அவர்களுக்குத் துணைபோனவர்களையும் பொன்னியும், சங்கையாவும் எப்படிப் பழிதீர்க்கிறார்கள் என்பதே மீதிக் கதை.

இயக்குநர் அருண் மாதேஸ்வரனின் முந்தைய படமான ‘ராக்கி’ வன்முறையின் அழகியலை சமரசமின்றி திரையில் பிரதிபலித்ததற்காக கொண்டாடப்பட்டது. இந்தப் படமும் மிகக் கொடூரமான வன்முறையை அதன் பல்வேறு வடிவங்களையும், பரிமாணங்களையும் எந்தத் தயக்கமின்றி திரையில் ரத்தம் தெறிக்க தெறிக்க காட்சிப்படுத்தியிருக்கிறது.

தங்கள் துணையையும், குழந்தையையும் பறிகொடுத்த இரண்டு அப்பாவி மனிதர்களின் சினமும் ஆற்றாமையும் வலியும் வேதனையும் இந்தப் பழிவாங்கலுக்கு நியாயம் சேர்த்தாலும் இந்தப் படம் பழிக்குப் பழி, ரத்தத்துக்கு ரத்தம் என்னும் ஆதிகாலப் பார்வையை நியாயப்படுத்துகிறது. அது மட்டுமல்லாமல் கத்தியால் பல முறை குத்துவது. ஆப்பிள் தோலைச் சீவுவதுபோல் அரிவாளைக் கொண்டு கழுத்தைச் சீவுவது, பிறப்புறுப்பில் ஆசிட்டை நிறுத்தி நிதானமாக ஊற்றுவது. தீயிட்டு எரிப்பது, ஒரு மனிதக்கூட்டத்தின் மீது வேனை விட்டு ஏற்றி பலரைக் கொல்வது என பழிவாங்கும் மனநிலையும் அதன் வெளிப்பாடான அதிதீவிர வன்முறையும் வன்முறையைக் கொண்டாடும் அவலத்தைச் செய்கிறது. “பழி தீர்ப்பது என்றால் கொலை செய்தவனை பதிலுக்கு கொலை செய்ய வேண்டும். ஜெயிலுக்கு அனுப்புவது எப்படி அவனைப் பழிதீர்த்ததாக ஆகும்” என்னும் பொருளில் பொன்னி பேசும் வசனம் பழிவாங்குதலையும் வன்முறையையும் கொண்டாடும் மனநிலை இயக்குநருக்கு இருப்பதை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கிறது.

படத்தில், பாதிக்கப்பட்டு பழிவாங்குகிறவர்கள் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள், சாதிக் கொடுமைக்குள்ளானவர்கள் என்று காண்பித்திருப்பதன் மூலம் அந்த வன்முறைக்கு ஒரு நியாயத்தைக் கற்பிக்க முயன்றிக்கிறார் இயக்குநர். ஆனால் அது வன்முறையை இவ்வளவு தீவிரமாகவும் விஸ்தாரமாகவும் காட்சிப்படுத்தியதற்கான எந்த நியாயத்தையும் வழங்கிவிடவில்லை. சாதிக் கொடுமைகளுக்கும் சட்டரீதியான தீர்வுகளை முன்வைப்பதே சமூகப் பொறுப்புமிக்க பார்வையாக இருக்க முடியும்.

வன்முறையின் சித்தரிப்பு தொடர்பான பிரச்சினையைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் ‘சாணிக் காயிதம்’ படத்தின் முதல் பாதியில் பாராட்டுக்குரிய அம்சங்கள் உள்ளன. பழிவாங்கலுக்கு காரணமாக அமையும் குற்றங்கள், அவை நிகழ்ந்த சூழல் ஆகியவற்றைச் சொல்லும் காட்சிகள் மனதைத் தொடும் உணர்வுபூர்வமான தருணங்களால் நிரம்பியிருக்கின்றன. இந்தத் தருணங்கள் வழக்கமான சென்டிமென்ட் காட்சிகளாக இல்லாமல் மிக யதார்த்தமாக புதுமையான திரைமொழியுடன் திரையில் விரிவது, புதுமையான காட்சியனுபவத்தையும் உணர்வுபூர்வமான ஈர்ப்பையும் ஏற்படுத்துகிறது.

மாரி எதிர்கொள்ளும் சாதிக் கொடுமையின் வலியும் கொடுமையிழைப்பவர்களின் ஆணவ மனமும் அழுத்தமான வசனங்களின் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றன. பொன்னிக்கும் சங்கையாவுக்கும் இருக்கும் உறவு, அதன் முன்கதை, இந்தப் பழிவாங்கும் பயணத்தில் அந்த உறவு அடையும் பரிணாமங்கள் ஆகியவற்றை ரசிக்க முடிகிறது. ரத்தம் தெறிக்கும் வன்முறைக் காட்சிகளினிடையே சாமான்ய மனிதர்களின் அன்பையும், பாசத்தையும் அற உணர்வையும் பெருமைப்படுத்தும் காட்சிகள் மனதுக்கு சற்று ஆசுவாசம் அளிக்கின்றன.

பொன்னியின் சந்தேகத்துக்கும் சங்கையாவின் அன்புக்கும் பாத்திரமான பார்வையற்ற சிறுவன் சுடலை கதாபாத்திரத்தின் மர்மமும் அது கடைசியில் அவிழ்க்கப்பட்ட விதமும் படத்தின் பாராட்டத்தக்க அம்சங்களில் ஒன்று. உள்ளடக்க ரீதியாக மட்டுமல்லாமல் உருவாக்க ரீதியிலும் புதுமையான திரைமொழியுடன் திரைப்படக் கலையின் சாத்தியங்களை விரிவுபடுத்த முயன்றிருக்கிறார்கள். முன்கதைக்கும் கற்பனைக் காட்சிகளுக்கும் கறுப்பு வெள்ளையைப் பயன்படுத்தியிருப்பது பழமையான உத்திதான் என்றாலும் அந்தக் காட்சிகளில் கேமரா கோணங்கள் புதுமையான அனுபவத்தைத் தருகின்றன.

ஆனால், பொன்னியும் சங்கையாவும் அவர்களின் திட்டப்படி எல்லோரையும் கொலை செய்துவிடுவதே இரண்டாம் பாதியின் ஆகப் பெரும் பகுதி. அவர்கள் அந்தக் கொலைகளைச் செய்வதில் எந்தச் சவாலும் இல்லை அல்லது எதிர்ப்படும் சவால்களை மிக எளிதாக கடந்துவிடுகிறார்கள். சங்கையாவுக்கு துப்பாக்கி உள்பட பல ஆயுதங்கள் கிடைக்கின்றன. சாமனிய மனிதனான சங்கையா, திரைக்கதைக்குத் தேவைப்படும்போது அனைவரையும் அடித்துத் துவைக்கும் மிகை நாயகராகி விடுகிறான். பொன்னி காவல் பணியில் இருக்கிறாள் என்பதைத் தவிர காவல்துறைக்கு படத்தில் வேறெந்த வேலையும் இல்லை.

இப்படி எந்த தர்க்கமும் இல்லாமல் எதிர்பாராத திருப்பமும் இல்லாமல் கொலை, மீண்டும் கொலை, மீண்டும் மீண்டும் கொலை என்று உப்புச்சப்பில்லாமல் நகர்கிறது இரண்டாம் பாதி. படத்தில் காண்பிக்கப்படும் கொடூர வன்முறைகூட ஒரு கட்டத்துக்கு மேல் எந்தத் தாக்கமும் ஏற்படுத்தாமல் சாதாரணமாக கடந்துவிடும் அளவுக்கு சலிப்பு ஏற்பட்டுவிடுகிறது. அதோடு, தேவையில்லாமல் பல காட்சிகளை மிகவும் நிதானமாகக் காண்பித்திருப்பதும் பொறுமையைச் சோதிக்கிறது.

முதன்மைக் கதாபாத்திரங்களை ஏற்றிருக்கும் கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் ஆகிய இருவரின் நடிப்பு இந்தப் படத்தை பெருமளவில் கரைசேர்க்க உதவுகிறது. நினைத்துப் பார்க்கவே குலைநடுங்கும் கொடுமையை எதிர்கொண்ட பெண்ணின் வேதனையையும் வெறியையும் கண்களிலும் உடல்மொழியிலும் கச்சிதமாகக் கொண்டுவந்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். உணர்ச்சிவயப்பட்டு நடிக்கும் காட்சிகளில் மட்டும் சில இடங்களில் மிகைத்தன்மை எட்டிப்பார்த்தாலும் ஒட்டுமொத்தமாக கீர்த்தியை சிறந்த நடிகைகளில் ஒருவராக மீண்டும் நிலைநிறுத்தியிருக்கிறது இந்தப் படம்.

தன் அன்புக்குரிய குழந்தை கண்ணுக்கு முன் தீயில் கருகுவதைப் பார்த்து கதறி அழுவதாகட்டும், பாதிக்கப்பட்ட தாய்க்கு துணை நிற்பதில் காண்பிக்கும் அர்பணிப்பாகட்டும் அலட்டிக் கொள்ளாமல் வன்முறையை நிகழ்த்துவதாகட்டும் அனைத்து வகையிலும் அதகளம் செய்திருக்கிறார் செல்வராகவன். பிற துணை நடிகர்களும் தமது பங்கைச் சரியாகத் தந்துள்ளனர்.

சாம்.சி.எஸ்சின் பின்னணி இசை படத்துக்கு பலம் சேர்க்கிறது. எங்கு இசை தேவை எங்கு தேவையில்லை என்பது குறித்த அபாரமான தெளிவு இசையமைப்பாளருக்கும், இயக்குநருக்கும் இருக்கிறது. யாமினி யக்ஞ மூர்த்தியின் ஒளிப்பதிவு மாறுபட்ட கேமரா கோணங்கள், ஃபேரேம்கள், நிறங்கள் ஆகியவற்றின் கலவையைக் கொண்டு படத்தை ஒரு மேம்பட்ட காட்சியனுபவமாக்கியுள்ளது. வன்முறைக் காட்சிகளில் ரத்தம் வழிவதையும், திரையில் தெறிப்பதையும் கேமராவின் கண்கள் வழியாக பார்வையாளருக்குக் கடத்தப்பட்டுக்கொண்டே இருப்பது துன்புறுத்தல் .

மொத்தத்தில் மேம்பட்ட காட்சியனுபவம், பிரமாதமான நடிப்பு, சில உணர்வுபூர்வமான தருணங்கள் இருந்தாலும் வன்முறையைக் கொண்டாடும் மனநிலைக்கு தீனிபோடுவதாகவே அமைந்திருக்கும் ‘சாணிக் காயித’த்தை பிரச்சினைக்குரிய படமாகவே அடையாளப்படுத்த வேண்டியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in