ஆக்‌ஷன் ஓர் உலகளாவிய மொழி: 'ஆர்ஆர்ஆர்' படத்தைப் பார்த்த ரூசோ சகோதரர்கள் ராஜமவுலிக்குப் பாராட்டு!

ஆக்‌ஷன் ஓர் உலகளாவிய மொழி:  'ஆர்ஆர்ஆர்' படத்தைப் பார்த்த ரூசோ சகோதரர்கள் ராஜமவுலிக்குப் பாராட்டு!

இயக்குநர் ராஜமவுலியையும், அவருடைய 'ஆர்ஆர்ஆர்' படத்தையும் பிரபல ஹாலிவுட் இயக்குநர்களான ரூசோ சகோதரர்கள் பாராட்டியுள்ளனர்.

பிரபல ஹாலிவுட் இயக்குநர்கள் அந்தோணி ரூசோ, ஜோசப் ரூசோ. ரூசோ சகோதரர்கள் என்று அழைக்கப்படும் இவர்கள், 'கேப்டன் அமெரிக்கா: தி வின்டர் சோல்ஜர்', 'கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்', 'அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார்', 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்', 'எக்ஸ்ட்ராக்‌ஷன்' உட்பட சில படங்களை இயக்கியுள்ளனர். இவர்கள் இயக்கி சமீபத்தில் வெளியான படம், 'தி கிரே மேன்'. இதில் ஹாலிவுட் நடிகர்களுடன், தனுஷும் நடித்திருந்தார். இந்தப் படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது.

இந்நிலையில், ரூசோ சகோதரர்களும் 'ஆர்ஆர்ஆர்' இயக்குநர் ராஜமவுலியும் சினிமா பற்றி உரையாடும் நிகழ்ச்சிக்கு நெட்பிளிக்ஸ் ஏற்பாடு செய்திருந்தது.

நெட்பிளிக்ஸ் தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட இந்திய திரைப்படம் 'ஆர்ஆர்ஆர்' என்பது குறிப்பிடத்தக்கது. சப் டைட்டிலுடன் 15 மொழிகளில் நெட்பிளிக்ஸில் இந்தப் படம் வெளியாகி இருக்கிறது.

இணையவழியில் நடந்த இந்தச் சந்திப்பில் உலகம் முழுவதும் ரசிகர்கள் எந்த மாதிரியான படங்களை விரும்புகிறார்கள் என்பது பற்றி இவர்கள் விவாதித்தனர். பின்னர், ராஜமவுலியை சந்தித்ததில் பெருமைப்படுகிறோம் என்று ட்விட்டரில் ரூசோ சகோதரர்கள் தெரிவித்தனர். அதற்குப் பதிலளித்த ராஜமவுலி, ’’பெருமையும் மகிழ்ச்சியும் எனக்குத்தான். உங்களுடன் நடந்த உரையாடல் சிறப்பாக இருந்தது. நேரில் சந்திக்கவும் உங்கள் திறமையில் கொஞ்சம் கற்றுக்கொள்ளவும் காத்திருக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்

’’மேற்கத்திய நாடுகள் ’ஆர்ஆர்ஆர்’ படத்தை ஏற்றுக்கொண்டதை நினைத்து ஆச்சரியப்பட்டேன். எல்லோரும் நல்ல கதையை ரசிக்கிறார்கள். ஆனால் மேற்கத்திய ரசிகர்களும் ஏற்கும்படியான ஒரு படத்தை உருவாக்குவேன் என நினைக்கவில்லை’’ என்று ராஜமவுலி மேலும் தெரிவித்தார்.

ரூசோ சகோதரர்கள் கூறும்போது, ’’ 'ஆர்ஆர்ஆர்' படம் நெட்பிளிக்ஸில் வெளியானதும் பார்வையாளர்கள் நல்ல படம் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டனர். அந்த வார்த்தைகள் பரவத் தொடங்கியபோது பாசிட்டிவான விமர்சனங்கள் வெளிவரத் தொடங்கின. அதே நேரம் ஆக்‌ஷன், ஓர் உலகளாவிய மொழி. வசனங்கள் இல்லாமல் அதை ரசிக்க முடியும். உலகில் உள்ள அனைவருக்கும் பிடித்த ஜானர் அது’’ என்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in