திருமண சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த எஸ்.ஜே.சூர்யா!

திருமண சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த எஸ்.ஜே.சூர்யா!

நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே. சூர்யாவுக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது என்று பரவிய செய்தியை அவர் மறுத்துள்ளார். ’ஆசை’, ‘குஷி’, ’நியூ’ என பல வெற்றி படங்களை இயக்கியவர் எஸ்.ஜே. சூர்யா. இயக்குநராக மட்டுமல்லாது, நடிகராகவும் தன்னை நிரூபிக்கும் வகையில் பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான ‘மாநாடு’, ‘டான்’ ஆகிய படங்கள் வெற்றி பெற்றது. 54 வயதாகும் எஸ்.ஜே. சூர்யா இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

சினிமாவில் தனக்கு மிக பெரிய லட்சியம் இருப்பதாகவும், அதற்காக அந்த வெற்றி, தோல்வி தன்னை சார்ந்தவர்களையும் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் தான் இத்தனை வருடங்கள் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதாக முன்பு தன்னுடைய பல பேட்டிகளில் குறிப்பிட்டு இருக்கிறார் எஸ்.ஜே. சூர்யா.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு எஸ்.ஜே.சூர்யா திருமணத்திற்கு சம்மதித்து விட்டார் எனவும் தங்களுடைய உறவுக்குள்ளேயே பெண் பார்க்க சொன்னதாகவும் இதனால் அவரது குடும்பத்தினர் தீவிரமாக பெண் பார்த்து வருவதாகவும் செய்திகள் வெளியானது. இதனையடுத்து ரசிகர்கள் பலரும் இந்த செய்தியை சமூக வலைதளங்களில் பகிர்ந்து அவருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர்.

இந்த செய்தி குறித்து எஸ்.ஜே.சூர்யா தற்போது மனம் திறந்துள்ளார். “திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் எனக்கு எப்போதும் இல்லை. இந்த செய்திகள் பொய்யானது. எனது அடுத்தடுத்த வேலைகளில் நான் கவனம் செலுத்த உள்ளேன். எனவே எனது திருமணம் தொடர்பாக வெளியான செய்திகள் வதந்தியே” என மறுத்துள்ளார் எஸ்.ஜே. சூர்யா.

அண்மையில், எஸ்.ஜே.சூர்யாவின் ‘கடமையை செய்’ திரைப்படம் வெளியானது. இது மட்டுமல்லாது, நடிகர் விஜய்யுடன் ‘வாரிசு’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் எஸ்.ஜே. சூர்யா.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in