ஆர்.எஸ்.மனோகர் : சினிமாவில் கொடூர வில்லன்; நாடகத்துறைக்கே காவலன்!

- நினைவு நாள் சிறப்புப் பகிர்வு
ஆர்.எஸ்.மனோகர் : சினிமாவில் கொடூர வில்லன்; நாடகத்துறைக்கே காவலன்!

வி.சி.கணேசன் என்று ஒருகாலத்தில் அழைக்கப்பட்ட சிவாஜி கணேசனை இப்போது நடிகர்திலகம் என்று மட்டும் சொல்லியே அழைத்துப் பெருமைப்பட்டுக்கொண்டிருக்கிறோம். ‘சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம்’ எனும் நாடகத்தில் வீரசிவாஜியாக நடித்தார். இந்த நாடகத்துக்கு வந்த தந்தை பெரியார், ’‘இனி இவர் வி.சி.கணேசன் இல்லை; சிவாஜி கணேசன்’’ என்று சொல்லிப் பாராட்ட, பிறகு சிவாஜிகணேசன் என்பதே நிலைத்தது.

இன்றைக்கு நடிகர் திலகம் என்று சொன்னாலே உலகமே அறிந்துகொள்கிறது. இப்படித்தான் ராசிபுரம் பள்ளியில் லட்சுமி நரசிம்மன் எனும் சிறுவன், அரை நிஜார் பருவத்தில் இருக்கும்போது, பள்ளிவிழாவில், ‘மனோகரா’ நாடகத்தில் நடித்தான். அன்று சிறுவனின் நடிப்பைப் பார்த்துவிட்டு ஆசிரியர்களும் மக்களும் சக மாணவர்களும் ‘மனோகரா மனோகரா’ என்றே அழைத்தார்கள். லட்சுமி நரசிம்மன் என்று சொன்னால் யாருக்கும் தெரியாது. ஆர்.எஸ்.மனோகர் என்று சொன்னல்தான் அந்த கம்பீர முகம் நம் கண்ணெதிரே நிழலாடும்!

ராசிபுரம் சுப்ரமணிய ஐயர் மகன் லட்சுமி நரசிம்மன், ஆர்.எஸ்.மனோகர் என்று பள்ளிப்பருவத்திலேயே அடையாளம் காணப்பட்டார். சிறுவயதில் இருந்தே நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். அப்படி நடிக்கும்போது, பிற்காலத்தில் நாம் சினிமாவில் சேரப்போகிறோம், வில்லனாகக் கலக்கப் போகிறோம், நாடக உலகில் மிகப்பெரிய ஜாம்பவானாகத் திகழப் போகிறோம் என்பதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை; எந்தத் திட்டமிடலும் இல்லை!

1925-ம் ஆண்டு, ஜூன் 25-ம் தேதி பிறந்த மனோகர், 1953-ம் ஆண்டு ’லட்சுமி’ என்கிற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் இவரின் திறமையை வெகுவாகப் பயன்படுத்திக் கொண்டது. 1959-ல் வெளிவந்த ‘வண்ணக்கிளி’யையும் ‘சித்தாடை கட்டிக்கிட்டு சிங்காரம் பண்ணிக்கிட்டு மத்தாப்பு சுந்தரி ஒருத்தி மயிலாக வந்தாளாம்’ பாடலையும் அதில் மனோகரின் அட்டகாசமான நடிப்பையும் இன்றைக்கும் மறக்கவில்லை ரசிகர்கள்.

அதேபோல், ‘கைதி கண்ணாயிரம்’ படத்தின் நாயகனும் இவர்தான். நடிப்பில் உருகவைத்திருப்பார். மாடர்ன் தியேட்டர்ஸில், அப்போதே ஒரு புதுமையைச் செய்தார்கள். அசோகனை நல்லவனாகவும் மனோகரை போலீஸ் அதிகாரியாகவும் ஜெமினி கணேசனை வில்லனாகவும் மாற்றி, ‘வல்லவனுக்கு வல்லவன்’ என்ற படத்தைக் கொடுத்தார்கள். மூவரின் நடிப்புமே அசத்தல்ரகம்தான் என்றாலும் இந்தப் படத்தில் மனோகரின் நடிப்பை வெகுவாகக் கொண்டாடின பத்திரிகைகள்.

எம்ஜிஆர், சிவாஜி காலம் செழிக்கத்தொடங்கி உச்சத்தில் இருந்த காலம். நம்பியார் வில்லனாக உருவெடுத்தார். அசோகனும் வில்லனாக மிரட்டினார். அதேசமயத்தில் வில்லன்களின் ராஜாங்கத்தில் மனோகரும் இடம்பிடித்தார். நம்பியாரின் வில்லத்தனமும் இல்லாமல், அசோகனின் மேனரிஸமும் இல்லாமல், அதுவரை நடிப்பில் வில்லன் செய்யாத மேனரிஸங்களையெல்லாம் தன் கதாபாத்திரங்களுக்குள் நுழைத்து மிரட்டினார் மனோகர்.

எம்ஜிஆருக்கு வில்லன் என்றால் இந்த மூவரில் ஒருவர் நிச்சயம் இருப்பார். இந்த மூவரில் ஒருவர் இருந்தால்தான் எம்ஜிஆரின் சாகசம் வெளிப்படும் என்று நம்பினார்கள் இயக்குநர்கள். சில படங்களில், மூன்றுபேருமே இருந்தார்கள். ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் மனோகரின் நடிப்பு தனித்து வெளிப்பட்டது.

அதேபோல் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்திலும் அட்டகாசமாக மிரட்டினார் மனோகர். சிவாஜிக்கும் வில்லனாக பல படங்களில் நடித்தார். ‘சொர்க்கம்’ படத்தில் இரண்டு மனோகர்கள். இதில் இருவருக்கும் உடல்மொழியில் தனி ஸ்டைலே உருவாக்கிக் கலக்கியிருப்பார்.

அப்போதெல்லாம், நம்பியாரின் வில்லத்தனத்தையும் மனோகரின் வில்லத்தனத்தையும் பார்த்து சாபம் கொடுத்து ஆவேசப்படாத பெண்களே இல்லை. ‘’இந்த செளகார்ஜானகி பாவம். மனோகர் பாவி அவளை எதுவும் பண்ணாம இருக்கணுமே...’’ என்று வேண்டிக்கொண்டதெல்லாம் நடந்திருக்கிறது. அந்த அளவுக்கு கதாபாத்திரத்துக்கு வலிமை சேர்க்கும் மகாவில்லன் அவர்.

அதேசமயம், சினிமாவில்தான் மனோகர் வில்லன். நாடகத்துறையில் பழைமையைக் கொண்டு பறைசாற்றிய நவீன நாயகன். ஒய்.ஜி.பார்த்தசாரதி, டி.கே.சண்முகம் அண்ணாச்சி, மெளலி, பாலசந்தர், சோ என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக் கலக்கிக் கொண்டிருக்க, பிரம்மாண்டமான புராணக்கதைகளை எடுத்துக்கொண்டு, அதை இன்னும் பிரம்மாண்டமாகக் கொடுத்து பிரமிக்கச் செய்தார் மனோகர்.

நாடகத்தில் கதை என்ன, வசனங்கள் என்ன என்கிற எதிர்பார்ப்புகளையெல்லாம் கடந்து, மேடைக்கு யானையை எப்படி வரச்செய்கிறார், மழையை எப்படிப் பொழியச் செய்கிறார் என்று கரவொலி எழுப்பி மலைத்துப் போனது ரசிகக் கூட்டம். காட்சிக்குக் காட்சி இவர் போடுகிற செட்டுகள், அத்தனை தத்ரூபமானவை. மலைக்கவைப்பவை.

மலையைக் கொண்டுவருவார். மழையைக்கொண்டுதருவார். வானமே இறங்கி வந்து நிற்கும். மேகக்கூட்டங்கள் அலையும். இடிச்சத்தத்துடன் மின்னல் வெட்டும். கையில் குடை வைத்திருக்கிறோம், கவலை இல்லை எனும் முடிவுக்கு ரசிகர்கள் வருவார்கள். அரங்கத்தையே ஒவ்வொரு இடமாக, வனமாக, கோயிலாக, கோயில் வாசலாக, அரண்மனையாக, அந்தப்புரமாக, கடலாக, நதியாக, நாணலாடும் கரையாக மாற்றுகிற ஜித்துவேலைகள், அதுவரை நாடக உலகில் எவரும் செய்யாத தனித்ததான சாதனை!

’சாணக்கிய சபதம்’ நாடகத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. ‘நரகாசுரன்’ நாடகத்தையும் அந்தக் காட்சிகளையும் கண்டு திரும்பத் திரும்பப் பார்த்தவர்கள் உண்டு. ’சூரபத்மன்’, ’சிசுபாலன்’ என அத்தனை நாடகங்களும் ஒவ்வொரு ஊரிலும் நடத்தப்பட்டு ஏகப்பட்ட வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றன.

என்னுடைய நண்பர் ஒருவர், சென்னைக்கு வந்தால், பீச், மியூஸியம் என்றெல்லாம் பார்க்கிறாரோ இல்லையோ, ஆர்.எஸ்.மனோகர் நாடகம் எங்கே போடுகிறார்கள் என்று தெரிந்துவைத்துக்கொண்டு வந்துவிடுவார். நாடகம் தொடங்குவதற்கு ஒருமணி நேரம் முன்னதாகவே வந்து, நாடகக் குழுவில் உள்ளவர்களிடம் பேசிக்கொண்டே இருப்பார். நாடகம் முடிந்து கூட்டம் போயிருக்கும். ஆனால் நாடகக் குழுவினர்களுடன் வண்டியில் பொருட்களை ஏற்றி உதவுவார். பத்தடியில் தள்ளி நிற்கிற ஆர்.எஸ்.மனோகரை, பிரமிப்பாக ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டேஇருப்பார். பிறகு ஊருக்கு வந்து, நாடகத்தின் கதையைச் சொல்லுவார். கதையை பத்து நிமிடத்தில் சொல்லிவிட்டு, காட்சிகள் ஒவ்வொன்றையும் அந்த ஒவ்வொரு காட்சிகளிலும் மனோகர் செய்த ஜாலங்களையும் மூன்று மணி நேரம் போவதே தெரியாமல் கண்கள் விரியச்சொல்லிக்கொண்டே இருப்பார்.

சினிமா பற்றியும் நாடகங்கள் பற்றியும் பேசுகிற போதெல்லாம் மனோகரைப் பற்றித்தான் அதிகம் பேசுவார். இப்படி என் நண்பரைப் போல் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். இன்றைக்கும் மனோகர் நாடகங்களை வியந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். நாடகத்துறையின் ஜாம்பவான்கள் கூட அவரை போற்றிக்கொண்டே இருக்கிறார்கள். ‘நாடகக் காவலர்’ என்று கொண்டாடிக்கொண்டே இருக்கிறார்கள்.

1925-ம் ஆண்டு பிறந்த ஆர்.எஸ்.மனோகர், 2006-ம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி மறைந்தார். அவர்தான் மறைந்தார். நாடக உலகில் தனி ராஜபாட்டை நடத்தி, ‘நாடகக் காவலர்’ என்று எல்லோராலும் போற்றப்படுகிற மனோகர், கலை உள்ளவரையும் வாழ்ந்துகொண்டே இருப்பார்... வில்லனாக அல்ல... நாயகனாக! நாடக உலகின் நாயகனாக..!

இன்னும் மூன்று ஆண்டுகளில்... 2025-ம் ஆண்டில் மனோகருக்கு வருகிறது நூற்றாண்டு. தமிழக அரசும் நாடகம் மற்றும் திரைத்துறையினரும் கைகோத்து, அந்த மகா கலைஞனுக்கு கெளரவம் செய்யவேண்டும். அடுத்தடுத்த தலைமுறைக்கும் நாடகம் எனும் கலை சென்றுசேரச் செய்கிற கடமையும் அதுதானே!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in