
’ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்துக்கு குவியும் சர்வதேச விருதுகளின் வரிசையில், ’ஹாலிவுட் கிரிட்டிக்ஸ் அசோசியேஷன் விருது’களும் தற்போது சேர்ந்திருக்கின்றன.
ராம் சரண் - ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோர் நடிப்பில், ராஜமௌலி இயக்கத்தில் வெளியான திரைப்படம் ’ஆர்ஆர்ஆர்’. திரையுலகில் பரவி வந்த ’பான் இந்தியா’ காய்ச்சலில் நாடு நெடுக வசூலில் வாரிக்குவித்த ஆர்ஆர்ஆர், ’பான் குளோபல்’ ரீதியில் தற்போது விருதுகளை குவித்து வருகிறது.
முன்னதாக ‘நாட்டு நாட்டு..’ பாடலுக்காக ’ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தின் இசையமைப்பாளர் கீரவாணிக்கு ’கோல்டன் குளோப்’ விருது கிடைத்தது. மேலும் ’கிரிட்டிக்ஸ் சாய்ஸ் விருது’ விழாவில், சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம், சிறந்த பாடல் ஆகியவற்றுக்கான விருதுகளை பெற்றது.
தற்போது ஹாலிவுட் கிரிட்டிக்ஸ் அசோசியேஷனின் 4 பிரிவிலான விருதுகளை ஆர்ஆர்ஆர் பெற்றுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸில் நடைபெற்ற விருது விழாவில், சிறந்த சர்வதேச திரைப்படம், சிறந்த ஆக்ஷன் திரைப்படம், சிறந்த சண்டைக் காட்சி மற்றும் சிறந்த பாடல் ஆகிய பிரிவுகளின் கீழ் விருதுகளை ’ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் வாங்கிக் குவித்துள்ளது.
மார்ச் 12 அன்று ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அதற்கான எதிர்பார்ப்புடன் ஆர்ஆர்ஆர் திரைப்படக் குழுவும், ரசிகர்களும் காத்துள்ளனர். கடந்தாண்டு மார்ச் 24 அன்று வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம், அதன் ஓராண்டு கொண்டாட்டத்தை ஏராளமான சர்வதேச விருதுகளுடன் எதிர்கொள்ளவிருப்பது மட்டும் நிச்சயமாகி இருக்கிறது.