
பிடிஎஸ் அங்கத்தினரான ஜங்குக் புகழாரம் சேர்த்ததில், தென்கொரியாவில் ஆர்ஆர்ஆர் திரைப்படத்துக்கு அமோக வரவேற்பு சேர்ந்திருக்கிறது.
பான் இந்தியா என்பதையும் தாண்டி, சர்வதேச அளவில் வரவேற்பு பெற்று வருகிறது ஆர்ஆர்ஆர் திரைப்படம். ராம் சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோர் நடிப்பில் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய இந்த தெலுங்கு திரைப்படம், பல்வேறு இந்திய மொழிகளிலும் வெளியாகி வசூலில் வாரிக் குவித்தது. அடுத்தபடியாக சர்வதேச அளவில் திரையரங்கு மற்றும் ஓடிடியில் வரவேற்பு பெற்று வருகிறது.
கோல்டன் க்ளோப் விருது முதல் ஆஸ்கருக்கான எதிர்பார்ப்பு வரை ஆர்ஆர்ஆர் திரைப்படத்துக்கான சர்வதேச கவனம் எகிறி வருகிறது. இதற்கிடையே, தென்கொரியாவை பின்புலமாக கொண்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலும் ரசிகர்களை வென்றிருக்கும் பிடிஎஸ் குழுவினராலும் ஆர்ஆர்ஆர் சிலாகிக்கப்பட்டது. பிடிஎஸ் அங்கத்தினர்களில் ஒருவரான பாடகர் ஜங்குக், லைவ் நிகழ்ச்சி ஒன்றில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் குறித்தும், அதன் ’நாட்டு... நாட்டு’ பாடல் குறித்தும் புகழ்ந்தார்.
பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் வாயிலாக ஆர்ஆர்ஆர் திரைப்படம் காணக்கிடைப்பதால், அது முதல் தென்கொரியாவின் நெட்ஃபிளிக்ஸ் டாப் திரைப்படங்களின் வரிசையில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் அதிரடியாக இரண்டாம் இடம் பிடித்திருக்கிறது. இது தொடர்பான தகவலை பொதுவெளியில் பகிர்ந்திருக்கும் ஆர்ஆர்ஆர் படக்குழு, ஜங்குக் வசம் தனியாக நன்றியும் தெரிவித்திருக்கிறது.