ஆர்ஆர்ஆர்: பிரம்மாண்டம் மட்டும் போதுமா?

ஆர்ஆர்ஆர்: பிரம்மாண்டம் மட்டும் போதுமா?

ஆங்கிலேய அரசுக்கு எதிராக வெவ்வேறு லட்சியங்களுடன் களமிறங்கும் இரண்டு மாவீரர்களுக்கிடையே உருவாகும் நட்பு, அவர்களுக்கு இடையிலான முரண்களையும் தாண்டி பொது எதிரியை வீழ்த்துவதே ‘ஆர்ஆர்ஆர்’ (‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’) திரைப்படத்தின் மையக்கரு.

உன்னதங்களின் மோதல்

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நிஜாம் ஆட்சிக்கு உட்பட்டிருந்த பகுதியில் வாழ்ந்துவந்த கோண்ட் பழங்குடிச் சிறுமி மல்லியை ஒரு ஆங்கிலேய அதிகாரியின் குடும்பம் அபகரித்துச் சென்று அடிமையாக அடைத்து வைத்திருக்கிறது. அந்தச் சிறுமியை மீட்பதற்காக டெல்லிக்கு வருகிறான் அந்த இனத்தைச் சேர்ந்த கொமாரம் பீம் (ஜூனியர் என்டிஆர்). டெல்லியில் தலைமறைவாக வாழ்ந்துகொண்டிருக்கும் பழங்குடி இளைஞனால் ஆங்கிலேய அரசுக்கு ஆபத்து என்று நிஜாமிடமிருந்து தகவல் அனுப்பப்படுகிறது. காவல் துறையில் பணியாற்றும் ராம், அந்த இளைஞனைத் தேடிக் கண்டுபிடித்து உயிருடன் சிறைபிடிக்கும் பொறுப்பை ஏற்கிறான் - பதவி உயர்வுக்காக!

ஆங்கிலேயருக்கு அடிபணிந்து காவல் துறையில் பணியாற்றும் ராமின் நடவடிக்கைகள் சுயநலம் சார்ந்தவை அல்ல. அடிப்படையில், ஆங்கிலேய ஆட்சியை வீழ்த்தும் உன்னதமான லட்சியத்தால் உந்தப்பட்டவை. இந்தச் சூழலில், ராமுக்கும் அல்தாஃப் எனும் பெயரில் இஸ்லாமிய அடையாளத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கும் பீமுக்கும் எதேச்சையாக ஏற்படும் நட்பும் அழுத்தமான சகோதரத்துவப் பிணைப்பாக உருவெடுக்கிறது. ஒரு கட்டத்துக்குப் பிறகு பீமின் உண்மையான அடையாளத்தையும் நோக்கத்தையும் தெரிந்துகொள்ளும் ராம், அவனைக் கைதுசெய்து சிறையில் அடைக்கிறான். ராம்-பீம் ஆகிய இருவரின் லட்சியங்கள், ஒன்றுக்கு இன்னொன்று தடையாக இருக்கும் சூழலில் இரண்டில் எது வெல்கிறது அல்லது இரண்டுமே வெல்கின்றனவா என்பதைச் சொல்கிறது மீதிப் படம்.

பிரம்மாண்டத்தின் உச்சம்

‘மகதீரா’, ‘பாகுபலி’, ‘பாகுபலி 2’ ஆகிய படங்களின் மூலம் இந்திய சினிமாவில் காட்சிகளின் பிரம்மாண்டத்தின் எல்லைகளைப் பல மடங்கு உயர்த்தி உலகத்தையே வியக்கவைத்த இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி இந்தப் படத்தில் மேலும் புதிய உயரங்களைத் தொட்டிருக்கிறார். அடர் காட்டில் ஒற்றையாளாகப் புலி ஒன்றைச் சிறைபிடிக்கும் பீம், லாலா லஜபதி ராயின் கைதுக்கு எதிரான சீக்கியர்களின் போராட்டத்தை தன் புஜபல பராக்கிரமத்தால் ஒற்றை ஆளாக அடக்கி ஒடுக்கும் ராம் என இரண்டு நாயகர்களின் அறிமுகக் காட்சியிலேயே காட்சியமைப்பின் வீச்சு, வீரியம் என அனைத்திலும் பிரம்மாண்டம் வாய்பிளக்கச் செய்கிறது. புலி உள்ளிட்ட வன விலங்குகளை வைத்து ஒரு எதிர்பாரா ட்விஸ்ட்டுடன் அமைக்கப்பட்டுள்ள இடைவேளைக் காட்சி இந்திய சினிமாவின் பிரம்மாண்டமான காட்சிகளை உருவாக்க விரும்புவோருக்கு புதிய சவால்களை விடுக்கிறது.

கோடிகளைக் கரைக்கும் பட்ஜெட்டையும் அதிநவீன உயர்தொழில்நுட்ப கிராஃபிக்ஸையும் மட்டும் வைத்துக்கொண்டு இத்தகைய பிரம்மாண்டத்தைத் திரையில் கொண்டுவந்துவிட முடியாது. பார்வையாளர்களை வியக்கவைக்கும் புதிய பரிமாணங்களை உள்ளடக்கத்திலும் உருவாக்கத்திலும் கொண்டுவரும் கற்பனைத் திறன் மிகவும் அவசியம். அத்தகைய கற்பனைத் திறனிலும் தன் கற்பனைக்கு அனைவரும் வியக்கும் வகையில் திரையில் உயிர்கொடுப்பதிலும் தான் நிகரற்ற ஜித்தன் என்பதை ராஜமவுலி மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார். குறிப்பாக, திரைப்படங்களுக்காக விலங்குகளை எந்த வகையிலும் துன்புறுத்தக்கூடாது எனும் சட்டரீதியான கட்டுப்பாடு இருக்கிறது. எனவே, விலங்குகள் வரும் காட்சிகள் அனைத்தையும் கிராஃபிக்ஸ் தொழில்நுட்பத்தின் துணைகொண்டு செயற்கையான விலங்குகளையே பயன்படுத்த வேண்டியிருக்கும்.

ஆனால், அந்த செயற்கைத்தன்மை துளியும் வெளிப்பட்டுவிடாமல் இவ்வளவு சிறப்பான காட்சி அனுபவத்தை ஆருயிர் நண்பர்களுக்கிடையிலான மோதலுக்குத் தேவையான உணர்வுபூர்வமான தருணங்களுடன் இணைத்து வழங்கியிருக்கிறார்கள். இதில் ராஜமவுலி மற்றும் படக்குழுவினர் ஒவ்வொருவரின் கடின உழைப்பும் பிரமிக்கவைக்கிறது. துப்பாக்கி தோட்டாக்களும், வெடிகுண்டுகளும் வில்லிலிருந்து எய்யப்படும் அம்புகளும் நிரம்பிய இறுதி யுத்தக் காட்சியும் இதேபோல் வியக்கவைக்கும் பிரம்மாண்டத் திரை அனுபவத்தைச் சாத்தியமாக்குகிறது.

திரைக்கதையில் சறுக்கல்

காட்சியமைப்புக்கு இணையான மெனக்கிடல் கதைக்கும், திரைக்கதைக்கும் சென்றிருப்பதாகத் தெரியவில்லை. கொமாரம் பீம், அல்லுடு சீதாராம ராஜு என தெலுங்கு மண்ணைச் சேர்ந்த இரண்டு சுதந்திரப் போராட்ட வீரர்களை அடிப்படையாகக் கொண்டு படத்தின் இரண்டு நாயகர்களும் உருவாக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களின் போராட்ட வாழ்க்கையை பெரிதும் கற்பனை கலந்தே பயன்படுத்தியிருக்கிறார் படத்தின் கதாசிரியரும் , இயக்குநரின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத்.

ஆங்கிலேய அரசுக்கு எதிரான வெவ்வேறு லட்சியங்களுக் கிடையிலான மோதலை மையமிட்டுக் கதை அமைத்திருப்பது ரசிக்கத் தகுந்த பார்வைக்கோணம். ராமின் லட்சியத்துக்கான முன்கதை ரசிக்கத்தக்கதாகவும் உணர்வெழுச்சி அளிக்கக்கூடியதாகவும் அமைந்துள்ளது. ஆனால், ராம் மற்றும் பீமின் லட்சியங்களுக்குத் தடையாக உருவெடுப்பது அவர்களின் ஆழமான நட்புதான் எனும்போது அந்த நட்பு அவ்வளவு ஆழமான பிணைப்பாக உருவெடுப்பதற்கு வலுவான காரணம் சொல்லப்படவில்லை.

ராமும், பீமும் முதல் சந்திப்பிலேயே நண்பர்களாகி விடுவது போலவும் அதற்குப் பிறகு இருவரும் சகோதரப் பாசத்தை வெளிப்படுத்துவது போலவும் அமைக்கப்பட்டுள்ள காட்சிகள் தன்னளவில் ரசிக்கும் வகையிலேயே அமைந்துள்ளன. ஆனால், இரண்டாம் பாதியில் அந்த நட்பும் பாசமும் எடுக்கும் பரிமாணங்களுக்கு நியாயம் செய்வதாக இல்லை.

பீமின் வீரமும் அர்பணிப்பும் மிக்க ஆளுமையால் கவரப்பட்டு ராம், தன்னுடைய லட்சியத்தையே கிட்டத்தட்ட காவுகொடுக்கும் நடவடிக்கைக்குத் தயாராவதற்கும் வலுவான காரணம் சொல்லப்படவில்லை. இறுதிக் காட்சிகள் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஆகிய நாயகர்களின் மிகைநாயக பிம்பத்துக்கு வலுசேர்க்கும் சண்டைக் காட்சிகளுடன் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவர்களுக்கு எதிராக ஆங்கிலேய அதிகாரிகள் மற்றும் ராணுவ வீரர்களின் முயற்சிகள் அனைத்தும் எளிதாக சோடைபோகின்றன. சினிமாவில் மட்டுமே சாத்தியமாகக்கூடிய இதுபோன்ற காட்சிகளால் படத்தின் ஒட்டுமொத்த தாக்கம் தொய்வடைகிறது.

சிறந்த நடிப்பு, தொழில்நுட்பம்

ராம் சரண், ஜூனியர் என்டிஆர் இருவரும் இந்தப் படத்தைத் தம் வலுவான புஜங்களில் சுமந்திருக்கிறார்கள். இருவருமே சண்டைக் காட்சிகளில் உயிரைக் கொடுத்து உழைத்திருக்கிறார்கள். மிகைநாயகத்தன்மை வாய்ந்த ஸ்டன்ட்களுக்கு தங்களின் இரும்புபோல் உறுதியான உடலமைப்பினால் சற்று நம்பகத்தன்மை சேர்த்திருக்கிறார்கள். ‘பாட்டன் கூத்து’ (தெலுங்கில் நாட்டு நாட்டு) பாடலில் இருவரும் சேர்ந்து ஆடும் அதிவேக நடனம் பார்வையாளர்களையும் ஆட்டம்போட வைக்கிறது. உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதிலும் இருவரும் குறைவைக்கவில்லை என்றாலும் இந்த விஷயத்தில் மட்டும் ராம்சரண் என்டிஆரைச் சற்று பின்னுக்குத் தள்ளிவிடுகிறார்.

இருவருமே சொந்தக் குரலில் தமிழ் பேசியிருப்பதற்கு சிறப்பு பாராட்டுகள். பிற நடிகர்களில், ஆங்கிலேயர்களுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்துக்கு தன் மக்களை தயார்படுத்துகிறவராக வரும் அஜய் தேவ்கன் மட்டுமே ரசிக்க வைக்கிறார். ஜூனியர் என்டிஆர் மீது காதல்கொண்டு அவருக்கு உதவும் ஆங்கிலேயப் பெண்ணாக ஒலிவியா மாரிஸ் தோற்றமும் நடிப்பும் கவனிக்க வைக்கின்றன. ராமின் காதலியாக ஆலியா பட், அம்மாவாக ஷ்ரியா சரண், மாமாவாக சமுத்திரக்கனி ஆகியோர் ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடிப்பதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

கீரவாணியின் இசையில் பாடல்கள் ரசிக்கவைக்கின்றன. பின்னணி இசையும் சிறப்பாக உள்ளது. கே.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவு ராஜமவுலியின் பிரம்மாண்ட கற்பனைக்கு அற்புதமாக ஒளிவடிவம் கொடுத்துள்ளது. சாபு சிரிலின் கலை இயக்கம் படத்தின் மற்றொரு பெரும் பலம். ஆங்கிலேய பிரபுவின் அரண்மனை ‘பாகுபலி’யின் மகிழ்மதி அரண்மனை அளவுக்கு வியக்க வைக்கிறது. ’யுத்தம் வந்தால் ஆயுதம் தானே வந்துசேரும்” என்பது உள்ளிட்ட மதன் கார்க்கியின் வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன.

பீரியட் திரைப்படங்களில் ‘ஆர்ஆர்ஆர்’ கொடுத்திருக்கும் காட்சி அனுபவம் இந்திய சினிமாவில் ஒரு புதிய மைல்கல். அதற்காக, கதை, திரைக்கதையில் இருக்கும் குறைகளை எந்த அளவுக்குப் பொறுத்துக்கொள்வது என்பது பார்வையாளர்களின் தெரிவு.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in