ரோலக்ஸ் கேரக்டர் மேக்கப்; லோகேஷ் சொன்ன ஐடியா! - ஒப்பனைக் கலைஞர் செரினா டிக்ஸீரா

ரோலக்ஸ் கேரக்டர் மேக்கப்; லோகேஷ் சொன்ன ஐடியா! - ஒப்பனைக் கலைஞர் செரினா டிக்ஸீரா
சூர்யாவுடன் செரினா...

'விக்ரம்' படத்தில் சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டருக்கு மேக்கப் போட்ட ஒப்பனைக் கலைஞர் செரினா டிக்ஸீரா. ரோலக்ஸ் கேரக்டருக்கு மேக்கப் போட்டபோது சூர்யா கொடுத்த ஒத்துழைப்பு, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சொன்ன நுணுக்கமான விஷயங்கள் உள்ளிட்டவை குறித்து யூடியூப் தளம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் பகிர்ந்திருக்கிறார் செரினா.

அந்தப் பேட்டியில் செரினா பேசியிருப்பதாவது: "முதலில் ரோலக்ஸ் கேரக்டருக்கு எப்படியான ஒப்பனை வேண்டும் என எனக்கும் இயக்குநர் லோகேஷுக்கும் பெரிதாக கலந்துரையாடல் எதுவும் நடக்கவில்லை என்பதுதான் உண்மை. சூர்யாவின் கேரக்டர் என்ன அவர் என்ன செய்யப் போகிறார் என்பது சூர்யாவிற்கு நன்றாகவே தெரியும். அதற்கேற்றவாறு நான் அவருடைய தோற்றத்தை மாற்ற வேண்டும் என்று நினைத்தேன். அதற்கான முழு ஆதரவும் இயக்குநர் லோகேஷிடம் இருந்து எனக்குக் கிடைத்தது. ரோலக்ஸ் கேரக்டருக்கு ஏற்றவாறு அவரை கரடுமுரடான ஒரு ஆளாக மேக்கப்பில் மாற்றுவது சவாலான விஷயமாகவே இருந்தது.

சூர்யாவின் காஸ்ட்யூம் எங்களுக்கு அருமையாக அமைந்தது. அவருடைய சட்டையை மேல் பட்டன் போடாமல் நெஞ்சில் ரத்தக்கறை இருக்குமாறு காட்டினோம். மேலும், அவரை இன்னும் முரடனாகக் காட்டுவதற்கு நெஞ்சிலும் கழுத்திலும் ரத்தத்துடன் பல காயங்களையும் ஏற்படுத்தினோம். பொதுவாக படங்களில் இதுபோன்ற வில்லன் ஆசாமிகள் வரும் போது பெரும்பாலான படங்களில் டாட்டூ, லென்ஸ், தாடி போன்றவை வைத்திருத்திருக்க வேண்டும். அதையே தான் இதிலும் சூர்யாவுக்கும் செய்தோம். பலருக்கும் தலைவராக இருப்பவர் இருக்க விரும்புபவர் அப்படித்தான் இருப்பார்.

ரோலக்ஸ் கேரக்டரை இன்னும் மெருகூட்ட காதில் கடுக்கன், ப்ளூ கலர் லென்ஸ், தாடியில் கிரே கலர், கண்களில் மஸ்காரா என ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்தோம். இதெல்லாம் எதற்கு என சூர்யா மறுப்புத் தெரிவிக்கவே இல்லை. அவரும் பரிசோதனை முயற்சிகளை செய்துபார்க்க தயாராகவே இருந்தார்.

சூர்யாவுக்கு முகத்திலும் உடம்பிலும் ரத்தம் இருக்க வேண்டும் என்ற யோசனை லோகேஷ் கொடுத்தது. அந்த மேக்கப்பை எல்லாம் அவரே செய்தார். இதுவரை சூர்யாவை ஹீரோயிச கேரக்டர்களில் மட்டுமே பார்த்திருப்போம். ஆனால், இதில் சர்வதேச அளவிலான ஒரு வில்லன் கதாப்பாத்திர தோற்றம். படப்பிடிப்பு முடிந்து மேக்கப் கலைக்கவே இரண்டு மணி நேரம் ஆனது.

இவ்வாறு செரினா அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in