‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்': ஷிவாங்கி கதாபாத்திரம் என்ன?

‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்': ஷிவாங்கி கதாபாத்திரம் என்ன?

சில ஆண்டுகால இடைவேளைக்குப் பிறகு நடிகர் வடிவேலு மீண்டும் திரையில் தோன்ற இருக்கும் திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்'. சுராஜ் இயக்கும் இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன் தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் வடிவேலுவுடன் ரெடின்ஸ் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், ஷிவானி நாராயணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சென்னை, மைசூரு உள்ளிட்ட பல இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.

சமீபத்தில், 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' பட வேலைகளுக்காகச் செல்வதாக நடிகர் ரெடின் கிங்ஸ்லி, யூடியூபர் பிரஷாந்த் உள்ளிட்டோருடன் செல்ஃபி எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியிருந்தார் ஷிவாங்கி. கூடவே இந்தப் படத்தில் ஷிவாங்கி ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் குறித்த சுவாரசியமான தகவல் வெளியாகியிருக்கிறது.

'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சியின் மூலம் பாடகியாக அறிமுகமாகி, 'குக் வித் கோமாளி' சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஷிவாங்கி, நடிகர் சிவகார்த்திகேயனின் 'டான்' திரைப்படம் மூலம் நடிகையாகவும் அடியெடுத்து வைத்தார். 'டான்' படத்தில் அவரது கதாபாத்திரமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இவரது கைவசம் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்', 'காசேதான் கடவுளடா' உள்ளிட்ட படங்கள் உள்ளன.

இந்நிலையில், 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தில் வடிவேலுவின் மகளாக ஷிவாங்கி நடிப்பதாகச் செய்தி வெளியாகியிருக்கிறது. முழுக்க முழுக்க நகைச்சுவையை மையப்படுத்தி இந்தப் படத்தை எடுத்துவருவதாக இயக்குநர் சுராஜ் தெரிவித்திருந்தார். ஷிவாங்கியும் நகைச்சுவையில் வல்லவர் என்பதால் வடிவேலு - ஷிவாங்கி காம்பினேஷன் திரையில் எப்படி இருக்கும் எனும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது.

இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் அமைத்திருக்கிறார் பிரபுதேவா. இதன் மூலம் கிட்டத்தட்ட 13 வருடங்களுக்குப் பிறகு பிரபுதேவாவும் வடிவேலுவும் இணைந்துள்ளனர். இருவரும் படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகின. ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' தவிர மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் ‘மாமன்னன்', பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'சந்திரமுகி 2' உள்ளிட்ட படங்கள் வடிவவேலுவின் கைவசம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in