ராக் ஸ்டார் ரமணி அம்மாள் குரல் விடைபெற்றது; சாதனைக்கு வயது ஒரு பொருட்டில்லை என நிரூபித்தவர்!

ரமணி அம்மாள்
ரமணி அம்மாள்

சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை ரசிகர்களை வசீகரித்த, ’ராக் ஸ்டார்’ ரமணியம்மாள் காலமானார். தனித்துவ குரலுடன் பின்னணி பாடகியாக வலம் வந்த அவருக்கு வயது 63.

சிறுபிராயம் தொட்டே சினிமா பாடல்களில் தீவிர ஈடுபாடு கொண்டவர் ரமணி அம்மாள். முறையான பயிற்சி ஏதுமின்றி, கேள்வி ஞானம் மூலமே தன்னை வளர்த்துக்கொண்ட அவருக்கு மத்திம வயதுக்குப் பின்னரே வாய்ப்புகள் வரத் தொடங்கின. வீட்டுப் பணியாளராக எளிய வாழ்க்கையிலிருந்தவர், தனது இசை ஆர்வத்தின் மூலமாக சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை ரசிகர்களை கட்டிப்போட்டவர். உடல்நலக்குறைவு காரணமாக இன்று (ஏப்.4) உலகை விட்டு விடைபெற்றிருக்கிறார்.

காதல் திரைப்படத்தில் வெளியான 'தண்டட்டி கருப்பாயி' பாடல் மூலமாக வெள்ளித்திரையில் காலடி வைத்தவர் ரமணி அம்மாள். காத்தவராயன் படத்தில் 'காத்தவராய சாமி’, ஹரிதாஸ் படத்தில் 'வெள்ளைக்குதிரை', ஜூங்கா படத்தில் 'ரைஸ் ஆஃப் ஜூங்கா’, சண்டக்கோழி 2 படத்தின் 'செங்கரட்டான் பாறையில', காப்பான் திரைப்படத்தின் 'சிறுக்கி’.. என ரமணி அம்மாள் பல்வேறு பாடல்களை பாடியிருக்கிறார். ஆனால் அதற்கு முன்னதான அவரது வாழ்க்கை மிகவும் நெருக்கடியானது. அவற்றின் மத்தியிலும் தனது பாடல் பாடும் ஆர்வத்தை அணையாது பாதுகாத்து வந்தார்.

சிறுவயதில் சிவாஜி, எம்ஜிஆர் காலத்து பாட்டுப் புத்தகங்களே ரமணி அம்மாளின் படிக்கட்டுகள். டெண்ட் கொட்டாய் ஒலிபெருக்கிகள், வானொலிகள் மூலமாக தனது கேள்வி ஞானத்தை வளர்த்துக்கொண்டவர், ஆளரவமற்ற இடங்கள் அமர்ந்து சத்தமாக பாடி தனக்கு தெரிந்ததை சாதகம் செய்ய ஆரம்பித்து விடுவார். அப்போதுதான் இட்டுக்கட்டி சுயமாகவும், சுலபமாகவும் சொந்த வரிகளில் பாடவும் கற்றுக்கொண்டார்.

அதனை அடுத்து வானொலி நிலையங்கள், மேடை நிகழ்ச்சிகள் என பல இடங்களில் வாய்ப்பு கேட்டு அணுகியிருக்கிறார். ஏற இறங்க பார்த்தவர்கள், பதில் சொல்லாது விலகி இருக்கின்றனர். பாத்திரம் துலக்கும் பணியாளராக ஒரு வீட்டில் பணியாற்றியபோது, அங்கிருந்தவர்கள் ஆதரவில் தொலைக்காட்சி இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்க முயற்சித்தார். அப்படித்தான் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியில் தங்க நாணயம் பரிசு பெற்றார். அப்படியே கங்கை அமரன் வாழ்த்தும் பெற்றார். ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சரிகமப சீனியர்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவருக்கு இரண்டாம் பரிசு கிடைத்து.

பக்தி மற்றும் கட்சி பிரச்சாரங்களுக்கான கேசட்டுகளில் ரமணி அம்மாள் குரல் எதிரொலிக்க ஆரம்பித்தது. ‘தண்டட்டி கருப்பாயி… தாழையுத்து மருதாயி…’ என்று குரலெடுத்து ரமணி அம்மாள் பாடிய காதல் பட பாடல் பரவலான அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது. அதன் பிறகு கணிசமான திரைப்படங்களில் தொடர்ந்து பாட ஆரம்பித்தார். அவரது அரை நூற்றாண்டு கால கனவு அறுபது வயதில் அரங்கேறியது.

அதுவரைக்கும் மனம் தளராது, தனது கனவு ஒரு நாள் ஈடேறும் என்று பொறுமையுடன் காத்திருந்தார் ரமணி அம்மாள். அதுபோலவே வயது என்பதும் வெறும் எண் மட்டுமே, சாதனைக்கு வயது ஒரு பொருட்டில்லை என்பதற்கும் ரமணி அம்மாள் உதாரணமாகி இருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in