`இந்தப் படம் இந்தியாவை பெருமைப்படுத்தும்’: மாதவன் நம்பிக்கை

`இந்தப் படம் இந்தியாவை பெருமைப்படுத்தும்’: மாதவன் நம்பிக்கை

நடிகர் ஆர்.மாதவன் இயக்கியுள்ள ’ராக்கெட்ரி - தி நம்பி விளைவு’ திரைப்படம் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் பிரத்யேகமாக திரையிடப்படுகிறது

நடிகர் மாதவன், இயக்குநராக அறிமுகமாகும் படம், ‘ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்’. இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன், ராக்கெட் தொழில்நுட்பத்தை வெளிநாட்டுக்கு விற்றதாக கடந்த 1994-ம் ஆண்டு கேரள காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பின்னர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, தான் குற்றமற்றவர் என நம்பி நாராயணன் நிரூபித்தார். இந்த வழக்கில் நம்பி நாராயணன் நிரபராதி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன் பின்னணியில் உள்ள உண்மையை வெளிப்படுத்தும் கதையாக உருவாகியுள்ள படம், ’ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’. தமிழில் ’ராக்கெட்ரி - தி நம்பி விளைவு’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் இந்தி, தமிழ், ஆங்கில மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம், கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளிலும் வெளியாகிறது.

நடிகர் மாதவன், நம்பி நாராயணனாக நடித்துள்ளார். நடிகை சிம்ரன், பிலிஸ் லோகன், வின்சென்ட் ரியோட்டா, ரான் டொனைச்சே , ரஜித் கபூர், ரவி ராகவேந்திரா, மிஷா கோஷல், குல்ஷன் குரோவர், கார்த்திக் குமார் உட்பட பலர் நடித்துள்ளனர். ஜூலை 1-ம் தேதி இந்தப் படம் உலகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது.

இதற்கிடையே இந்த படம், மே 19-ம் தேதி கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக்கிறது. இந்த ஆண்டு கேன்ஸ் ஃபிலிம் மார்க்கெட்டில் இந்தியாவை அதிகாரபூர்வ நாடாகக் கொண்டாடுவதன் ஒரு பகுதியாக நடைபெறும் ‘பாலைஸ் டெஸ் ஃபெஸ்டிவல் பிரீமியர்’ பிரிவில் இப்படம் திரையிடப்படவுள்ளது. இந்தியாவின் கலாச்சார அமைச்சகம் அதிகாரபூர்வமாக இந்தப் படத்தை கேன்ஸ் விழாவின் ரெட் கார்பெட் பிரீமியருக்கு தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மாதவன், நம்பி நாராயணன்
மாதவன், நம்பி நாராயணன்

இதுபற்றி மாதவன் கூறும்போது, ``நான் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறேன். நான் நம்பி நாராயணனின் கதையை மட்டுமே சொல்ல விரும்பினேன். ஆனால் தற்போது நடப்பதை என்னால் நம்ப முடியவில்லை. கடவுளின் கிருபையுடன், நாங்கள் நீண்ட காலம் காத்திருந்தோம். படத்திற்கு நடக்கும் அனைத்து நல்ல விஷயங்களையும் பார்க்க நான் நன்றியுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கிறேன். இந்தப் படம் இந்தியாவை பெருமைப்படுத்தும் என்று நான் நம்புகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in