இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் காயங்கள் ஏற்பட்டுள்ளன: ஆர்.கே.செல்வமணி

இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் காயங்கள் ஏற்பட்டுள்ளன: ஆர்.கே.செல்வமணி

`இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் சின்னச் சின்ன காயங்கள் ஏற்பட்டிருக்கிறது' என்று தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆர்.கே.செல்வமணி கூறினார்.

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில், தலைவர் பதவிக்கு கே.பாக்யராஜும், ஆர்.கே.செல்வமணியும் போட்டியிட்டனர். பாக்யராஜ் அணி சார்பில், பார்த்திபன் செயலாளர் பதவிக்கும் வெங்கட் பிரபு பொருளாளர் பதவிக்கும் போட்டியிட்டனர். ஆர்.கே.செல்வமணி அணியில் ஆர்.வி.உதயகுமார் செயலாளர் பதவிக்கும், பொருளாளர் பதவிக்கு பேரரசும் போட்டியிட்டனர். இந்த அணியின் இணைச் செயலாளர் பதவிக்கு சுந்தர்.சி, முருகதாஸ், லிங்குசாமி ஆகியோர் போட்டியிட்டனர்.

பாக்யராஜ் அணியை சேர்ந்த மாதேஷ், எழில் ஆகியோர் துணைத் தலைவர்களாகப் போட்டியின்றி ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுவிட்டனர். மற்ற நிர்வாகிகளை தேர்வு செய்ய, நேற்று காலை ஓட்டுப்பதிவு தொடங்கி மாலையில் முடிந்தது. பின்னர் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. இதில் ஆர்.கே.செல்வமணி 955 ஓட்டுகள் பெற்று மீண்டும் தலைவராக வெற்றி பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட பாக்யராஜ் 566 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

செயலாளராக ஆர்.வி. உதயகுமார், பொருளாளராக பேரரசு, இணைச் செயலாளர்களாக ஏகம்பவாணன், லிங்குசாமி, ஏ.ஆர்.முருகதாஸ், சுந்தர்.சி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். சரண், ஏ.வெங்கடேஷ், ரமேஷ் கண்ணா உட்பட 12 பேர் செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

வெற்றிக்குப் பின் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி கூறும்போது, `முதன்முறையாக இது கடுமையான தேர்தலாக இருந்தது. ஏனென்றால் எல்லோரும் பிரபலங்கள். அதனால், இது முக்கியமான தேர்தல். இதில் வெற்றி அடைந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. தேர்தல் வரைதான் தனி அணிகளாக இருந்தோம். அது முடிந்த பிறகு நாங்கள் இயக்குநர்கள் சங்க அணிதான். எங்களுக்குள் எந்த வேறுபாடும் இருக்காது. சின்ன சின்ன காயங்கள் எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. அதற்கு மருந்து போடுவதுதான் முதல் வேலை. தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் இயல்பாகவே நிறைவேறும்’ என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in