'உங்களுக்கு அப்பாவா நடிக்கணுமான்னு சில நடிகர்கள் ஆச்சரியமா கேட்டாங்க’: ஆர்.ஜே.பாலாஜி பேட்டி

'உங்களுக்கு அப்பாவா நடிக்கணுமான்னு சில நடிகர்கள் ஆச்சரியமா கேட்டாங்க’: ஆர்.ஜே.பாலாஜி பேட்டி

இந்தியில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற 'பதாய் ஹோ' படத்தை ’வீட்ல விசேஷம்’ என்ற பெயரில் ரீமேக் செய்திருக்கிறார், நடிகர் ஆர்.ஜே.பாலாஜி. என்.ஜே.சரவணனுடன் இணைந்து அவரே இயக்கியும் இருக்கிறார். அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, சத்யராஜ், மறைந்த கே.பி.ஏ.சி லலிதா உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படம் வரும் 17-ம் தேதி வெளியாக இருக்கிறது. படம் பற்றி ஆர்.ஜே.பாலாஜியிடம் பேசினோம்.

’’பதாய் ஹோ’ படத்தை எத்தனை பேர் பார்த்திருப்பாங்கன்னு தெரியாது. இந்தக் கதையை தமிழ் ரசிகர்களுக்குச் சொல்லணும்னு தோணுச்சு. அந்தப் படத்தை அப்படியே எடுக்காம, தமிழுக்கு ஏற்ப பண்ணலாம்னு முடிவு பண்ணினோம். ஸ்கிரிப்ட்டுக்கு மட்டும் 5 மாதம் செலவழிச்சிருக்கோம். இந்திப் படத்துல இருந்து கதையை மட்டும் எடுத்துக்கிட்டு திரைக்கதையை மொத்தமா தமிழுக்கு ஏற்ப மாத்தியிருக்கோம்’’

என்ன மாதிரியான மாற்றங்கள்?

கல்யாண வயசுல வீட்டுல பையன் இருக்கும்போது, அம்மா கர்ப்பமானா என்ன நடக்கும் அப்படிங்கறதுதான் கதை. அந்தக் கதையை மட்டும் எடுத்துக்கிட்டு திரைக்கதையை மொத்தமாக தமிழுக்கு ஏற்ப மாத்தியிருக்கோம். ஒரிஜினல் படத்துல, அம்மா ஏன் குழந்தைப் பெத்துப்பாங்கன்னா, அவங்களைப் பொறுத்தவரை அபார்ஷன்ங்கறது பாவச்செயல்னு சொல்வாங்க. ஆனா, நாங்க இதை மாற்றியிருக்கோம். நான் குழந்தைப் பெத்துப்பேன்னு ஓர் அம்மா சொல்றாங்கன்னா, ஏன் பெத்துப்பேன்னு கேட்கிற உரிமை யாருக்குமில்லை. அதே நேரத்துல அபார்ஷன் பாவச் செயல்னும் சொல்ல முடியாது. இப்படி கதையில சில மாற்றங்கள் இருக்கு. அதே மாதிரி மருத்துவமனையில ஒரு ஏழு நிமிட காட்சி இருக்கு. அது ஒரிஜினல்ல கிடையாது. படத்தோட கதையை கோவையில் நடக்கிற மாதிரி பண்ணியிருக்கோம்.

ஊர்வசி, சத்யராஜ்
ஊர்வசி, சத்யராஜ்

உங்களுக்கு அம்மாவா மீண்டும் ஊர்வசி நடிச்சிருக்காங்க...

அம்மான்னா, இவங்கதான்னு ஊர்வசியை நாங்க முதல்லயே முடிவு பண்ணிட்டோம். ஏன்னா, ’மூக்குத்தி அம்மன்’ படம் பண்ணும்போது அவங்களுக்கும் எனக்கும் ரொம்ப சவுகரியமா இருந்தது. அதோட இந்தக் கதைக்கு அவங்க சரியா பொருந்துவாங்கன்னும் தோணுச்சு.

அப்பா கேரக்டருக்கு சத்யராஜை எப்படி பிடிச்சீங்க?

அப்பா கேரக்டருக்கு நிறைய பேரை யோசிச்சோம். சில நடிகர்களிடம் கேட்டேன். ’உங்களுக்கு அப்பாவா நடிக்கணுமான்னு ஆச்சரியமாக கேட்டுட்டு மறுத்துட்டாங்க. சத்யராஜ் சாரை கேட்டதும், ’அந்தப் படத்தை இந்தியிலயே பார்த்துட்டேன். பண்ணிடலாம், நான் வேணா, இப்படி இருக்கலாமா, அப்படி இருக்கலாமா?’ன்னு ஆர்வத்தோட கேட்டார். அந்த ஆர்வம்தான் எங்க படக்குழு முழுவதும் பரவுச்சு. டப்பிங் முடிச்சுட்டு, சத்யராஜ் சார் , ‘நான் 40 வருஷமா நடிச்சுட்டு வர்றேன். என்னோட பெஸ்ட் 10 படங்கள்ல இதுவும் ஒன்னா இருக்கும்’னு சொன்னார். அது சந்தோஷமா இருந்துச்சு.

அபர்ணா பாலமுரளி, ஆர்.ஜே.பாலாஜி
அபர்ணா பாலமுரளி, ஆர்.ஜே.பாலாஜி

இந்த டைட்டிலை பாக்யராஜ் எப்படி கொடுத்தார்?

அவருக்கு நன்றி சொல்லணும். ஒரு குடும்ப படம் எடுத்துட்டு வேற டைட்டில் வச்சா நல்லா இருக்காது. சில படங்களுக்கு டைட்டில் முக்கியம். அதனால அவருக்கு நிலைமையைச் சொன்னோம். வேற ஒண்ணும் அவர் கேட்கலை. சரின்னு கொடுத்துட்டார். இந்த டைட்டில் இந்தப் படத்துக்கு ரொம்ப பொருத்தமா அமைஞ்சிருக்கு.

ஹீரோயின் பற்றி?

இதுல நாயகின்னா அது ஊர்வசிதான். அவங்களைச் சுற்றி நடக்கிற கதைதான் இது. அதாவது அப்பா, அம்மாவின் காதல் கதை. இந்தப் படத்துக்குத் தமிழ் தெரிஞ்ச ஹீரோயின்தான் வேணும்னு முடிவு பண்ணினோம். என் எல்லா படங்கள்லயும் அப்படித்தான் பண்றேன். ஏன்னா, தமிழ் தெரிஞ்ச நடிகை இருந்தா, ஷூட்டிங்ல 2 நாள் மிச்சமாகும். இல்லைன்னா, கஷ்டமா இருக்கும். இதுல அபர்ணா பாலமுரளி நடிச்சிருக்காங்க. ’சூரரைப் போற்று’ படத்துல பிரமாதமாக நடிச்சிருப்பாங்க. இதுல கோவையில் நடக்கும் கதைங்கறதால, அவங்களைத் தேர்வு பண்ணினோம். பிரமாதமாக நடிச்சிருக்காங்க.

’மூக்குத்தின் அம்மன்’ மாதிரி சொந்த கதையையே படமா பண்ணியிருக்கலாமே, ஏன் திடீர்னு ரீமேக்?

’மூக்குத்தி அம்மன்’ படம் முடிஞ்சதும் எங்க டீம் ஒரு கதை பண்ணினோம். ஒரு குடும்ப படம் பண்ண நினைச்சோம். அதாவது அதுல இருந்த அம்மனை எடுத்துட்டு, குடும்பத்தை மட்டும் வச்சு படம் பண்ணலாம்னு நினைச்சோம். முதல் தங்கச்சிக்கு கல்யாணம் நடக்குது. விட்டுப் போன அப்பா திரும்ப வந்திடுறாரு. திடீர்னு அம்மா மயங்கி விழறாங்க. அம்மாவை மருத்துவமனைக்கு கூட்டிட்டுப் போனா, அம்மா கர்ப்பம்னு தெரியுது. அவங்களுக்கு அது 5-வது குழந்தை. இதுதான் நான் வச்சிருந்த ஐடியா. இது எப்படின்னா, நான் காலேஜ் படிக்கும்போது எனக்கு தங்கச்சி பிறந்தாங்க. இதை வச்சு ஒரு படம் பண்ணலாம்னு நினைக்கும்போது, இதே போல ஒரு இந்தி படம் வெளியாகி, அதோட ரைட்ஸ் வச்சிருக்கிற தயாரிப்பாளர் படம் பண்றீங்களான்னு கேட்கும்போது ஏன் பண்ணக் கூடாதுன்னு தோணுச்சு. அப்படி உருவானதுதான் இந்தப் படம். மற்றபடி சொந்தக் கதையைதான் அடுத்தடுத்து பண்ணப் போறேன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in