
’ப்ளான் பண்ணி பண்ணனும்’ படத்திற்குப் பிறகு நடிகர் ரியோ ராஜ் தற்போது ‘ஜோ’ பட வெளியீட்டிற்குத் தயாராகியுள்ளார்.
நடிகர் ரியோ ராஜ் படம் குறித்து பேசும்போது, “’ 'ஜோ’ திரைப்படம் எங்கள் நண்பர்கள் குழுவால் உருவாக்கப்பட்ட எங்கள் ஒட்டுமொத்த அணியின் அடையாளம் மற்றும் முகவரி. மிகுந்த ஈடுபாட்டுடனும் ஆர்வத்துடனும் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம். கதாநாயகனான ‘ஜோ’வின் பள்ளிக் காலத்தில் இருந்து அவனது திருமணத்திற்குப் பிந்தைய நாட்கள் வரையிலான காதல் பயணத்தை மையமாக வைத்து இந்தத் திரைப்படம் உருவாகிறது. படத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதிக்காக நான் நீண்ட முடி மற்றும் தாடியுடன் வித்தியாசமான தோற்றத்தில் இருப்பேன். இதன் காரணமாகவே, வேறு எந்த புராஜெக்ட்டிலும் கடந்த இரண்டு வருடங்களாக நான் ஈடுபட முடியாமல் இருக்கிறேன். 18-28 வயது வரையிலான காலக்கட்டம் என கிட்டத்தட்ட ஐந்து விதமான தோற்றத்தில் நான் வருவேன்” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “மொத்த படப்பிடிப்பும் வெறும் 37 நாட்களில் முடிவடைந்துள்ளது. இதற்கு தயாரிப்பாளரின் ஒத்துழைப்புதான் முழுமுதற் காரணம்.
சென்னை, ராமேஸ்வரம், ராம்நாடு, பொள்ளாச்சி, பாலக்காடு மற்றும் திண்டுக்கல் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. முதலாமடை ரயில் நிலையத்திலும் படமாக்கப்பட்டுள்ளது என்பது இதில் உள்ள சுவாரஸ்யமான உண்மை. நடிகர் கமல்ஹாசனின் ‘அன்பே சிவம்’ படத்திற்கு அடுத்து பல வருடங்கள் கழித்து ‘ஜோ’ திரைப்படம் மட்டும் தான் இந்த லொகேஷனில் படமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ’ஜோ’ 100 சதவீத பார்வையாளர்களுக்கு ஒரு ஃபீல் குட் லவ் ஸ்டோரியாக இருக்கும். படத்தின் டீசர் அந்த உணர்வை நிச்சயம் கடத்தும்” என்றார்.