
கறுப்பு வெள்ளை படமிருந்த காலத்திலேயே நடிக்க வந்தவர் விஜயகுமார். கதாநாயகனாக அறிமுகமாகி, இரண்டு கதாநாயகர்களில் முக்கியமான நாயகர்களில் முதலாவதாக இருந்தார். ‘மாங்குடி மைனர்’ மாதிரியான படங்களில் ரஜினிகாந்த் நடித்திருந்தாலும் விஜயகுமாரே பிரதான நாயகனாக நடித்துவந்தார்.
அப்போது சிவகுமாருடன் கமல் நடித்தார். சிவகுமார் முதல் நாயகன். சிவகுமாருடன் ரஜினி நடித்தார். ரஜினி இரண்டாவது நாயகன். இதேபோல், விஜயகுமார் கதையின் நாயகனாக பல படங்களில் நடித்தார். அதேபோல், ஆரம்பக் காலப் படங்களில் தன்னை எம்ஜிஆர் ரசிகன் என்று காட்டிக் கொண்டார். கையில் இரட்டை இலையைப் பச்சைக்குத்திக் கொண்டிருப்பது போலவும் எம்ஜிஆர் ‘உரிமைக்குரல்’ படத்தில் உடுத்திய வேஷ்டி ஸ்டைலின்படி அணிந்துகொண்டும், எம்ஜிஆரின் மேனரிஸங்களைச் செய்தும் மக்களின் மனங்களில் இடம்பிடித்தார்.
தொடர்ந்து வரிசையாக விஜயகுமாருக்குப் படங்கள் வந்தன. சுமாரான அல்லது மிகப்பெரிய வெற்றியையோ கொடுத்தன. முதலுக்கு மோசம் என்று விஜயகுமாரின் படங்கள் பேரெடுக்காமல், லாபத்தையே கொடுத்துவந்தன. விஜயகுமாரும் கவனிக்கத்தக்க ஹீரோவாக, நடிகராக வலம் வந்தார். அப்போது, விஜயகுமாருக்கு அடைமொழியுடன் டைட்டில் போட்டார்கள். ’மாங்குடி மைனர்’ படத்தில், அதிமுக பிரச்சாரப் பாடல் போலவே அமைக்கப்பட்டு, அந்தப் பாடலும் ஹிட்டடித்தது. விஜயகுமார்தான் எம்ஜிஆர் தொண்டனாக, அதிமுக விசுவாசியாக நடித்திருந்தார். கழுத்தில் எம்ஜிஆர் உருவம் பொறித்த டாலரெல்லாம் போட்டுக்கொண்டு நடித்தார்.
’மக்கள் திலகம்’ எம்ஜிஆர் போல், ‘புரட்சி நடிகர்’ எம்ஜிஆர் போல, ‘நடிகர்திலகம்’ சிவாஜி போல், ‘லட்சிய நடிகர்’ எஸ்எஸ்ஆர் போல், ‘மக்கள் கலைஞர்’ ஜெய்சங்கர் போல், அப்போது சிவகுமார், கமல், ரஜினி முதலானோருக்குக் கூட பட்டங்கள் சூட்டப்படவில்லை. ஆனால் விஜயகுமாருக்கு அடைமொழிப் பட்டம் சூட்டப்பட்டது. அந்தப் பட்டம்... ‘புரட்சிக்கலைஞர்’ என்கிற பட்டம்!
எழுபதுகளின் இறுதிகளில் வெளியான விஜயகுமாரின் படங்களில், விஜயகுமாருக்கு ‘புரட்சிக்கலைஞர்’ விஜயகுமார் என்று டைட்டில் போட்டார்கள். அந்த அளவுக்கு ரசிகர் கூட்டமும் அவருக்கு இருந்தது. ஆனால், எண்பதுகளின் ஆரம்பத்தில், கமலும் வளர்ந்துவிட்டிருந்தார். ரஜினியும் வளர்ந்திருந்தார். எம்ஜிஆர் - சிவாஜிக்குப் பிறகு, கமல் - ரஜினி என்று உறுதியாகிக் கொண்டிருந்த காலம் அது.
அந்த சமயத்தில்தான், விஜயகாந்த் அறிமுகமானார். ஆரம்பப் படங்கள் எதுவும் சரியாகப் போகவில்லைதான். ஆனால், எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ‘சட்டம் ஒரு இருட்டறை’ திரைப்படம், விஜயகாந்த் வாழ்வில் திருப்புமுனைப் படமாகவும் வெற்றிப் படமாகவும் அமைந்தது. ‘சாட்சி’, ‘வெற்றி’ என்று வரிசையாகப் படங்கள் வெளியாகி ஹிட்டடித்தன. விஜயகாந்துக்கு பி அண்ட் சி சென்டர்களில் ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள். ‘சிவப்புமல்லி’, ‘பார்வையின் மறுபக்கம்’ என்று படங்கள் அங்கே வசூலைக் குவித்தன.
‘ஊமைவிழிகள்’ வந்து விஜயகாந்தை இன்னொரு உயரத்துக்கு அழைத்துச் சென்றது. ‘வைதேகி காத்திருந்தாள்’ இன்னொரு விதமான விஜயகாந்தையும் அவரின் பண்பட்ட நடிப்பையும் காட்டியது. விஜயகாந்த், தன் படங்களில், தமிழைப் போற்றும் வசனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். இயல்பாகவே தமிழ் மீது தனக்கு இருந்த பற்றினை, தன் படங்களிலும் வெளிப்படுத்தினார். கண்களில் அனல் பறக்க, தெறிக்க விட்ட வசனங்களும், புரட்சிக்கருத்துகளும் விஜயகாந்துக்கு கரவொலிகளையும் விசில்களையும் பரிசாகக் கொடுத்துக் கொண்டே இருந்தன.
எண்பதுகளில், கொஞ்சம் கொஞ்சமாக விஜயகுமார் நாயகனாக நடிக்கும் படங்கள் குறைந்தன. வில்லனாக நடிக்கும் படங்கள் வரத்தொடங்கின. கமலுக்கும் ரஜினிக்கும் வில்லனாக நடித்தார் விஜயகுமார். பிறகு, வில்லனாகவும் குணச்சித்திரக் கேரக்டரிலும் வெளுத்துவாங்கினார். இந்த தருணங்களில் ‘இவர்களுடன் விஜயகுமார்’ என்று டைட்டிலில் போட்டு கெளரவப்படுத்தினார்கள்.
நாளடைவில் விஜயகுமாருக்கு கொடுத்த ‘புரட்சிக்கலைஞர்’ எனும் பட்டம் மறைந்தேபோனது. ‘விஜயகுமார்’ என்று மட்டும் டைட்டிலில் போடும் காலமும் வந்தது.
‘கிழக்குவாசல்’, ‘நாட்டாமை’, ‘சேரன் பாண்டியன்’, ‘பாரதிகண்ணம்மா’, ‘கிழக்குச்சீமையிலே’ என்று விஜயகுமார் தன் நடிப்பால் நம்மையெல்லாம் கவர்ந்த படங்கள் ஏராளம். இந்தக் காலகட்டத்தில், கமல் - ரஜினிக்கு அடுத்து மார்க்கெட் வேல்யூ உள்ள நடிகராகவும் வசூல் சக்கரவர்த்தியாகவும் விஜயகாந்தின் ஆக்ஷன் படங்கள் வரிசைகட்டி வந்துகொண்டே இருந்தன. ‘புலன் விசாரணை’, ‘செந்தூரப்பூவே’, ‘கேப்டன் பிரபாகரன்’, ‘சத்ரியன்’, ‘மாநகரக்காவல்’ என்று ஏராளமான படங்கள் வந்து மெகா வெற்றியைக் கொடுத்தன. அந்த நேரத்தில், விஜயகாந்துக்கு ‘புரட்சிக்கலைஞர்’ என்கிற பட்டம் டைட்டிலில் போடப்பட்டது.
ஒருகட்டத்தில், விஜயகுமாருக்கு ‘புரட்சிக்கலைஞர்’ என்று பட்டம் கொடுத்து டைட்டிலில் திரையிட்டதை ரசிகர்கள் மறந்தே போனார்கள். ‘புரட்சிக்கலைஞர்’ என்றாலே விஜயகாந்த் என்ற முடிவுக்கு விஜயகாந்தின் ரசிகர்களும் மக்களும் வந்தார்கள். அந்த அடைமொழிக்குப் பொருத்தமான கலைஞர், நடிகர் என்று மக்களும் கொண்டாடினார்கள்.
தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராகப் பணியாற்றிய காலத்தில், ‘புரட்சிக்கலைஞர்’ என்றும் அவரை அழைத்தார்கள். ‘கேப்டன்’ என்றும் புகழ்ந்தார்கள். பிறகு ‘கேப்டன்’ எனும் பெயரே நிலைத்தது. ’புரட்சி நடிகர்’, ‘மக்கள் திலகம்’, ‘பொன்மனச்செம்மல்’ என்கிற பெயர்களெல்லாம் இணைந்து சொல்லும்விதமாக எம்ஜிஆர், ‘புரட்சித்தலைவர்’ என்றானார். அதேபோல், ‘புரட்சிக்கலைஞர்’ என்று அழைத்தவர்கள், ‘கேப்டன்’ என்று இப்போதும் விஜயகாந்தை அழைத்து கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.
’காதல் இளவரசன்’ என்கிற டைட்டிலுக்கும் ‘உலகநாயகன்’ என்கிற டைட்டிலும் நடுவே பட போஸ்டர்களில், ‘நவரச நாயகன்’ என்று கமலுக்கு அடைமொழி கொடுத்தார்கள். ஆனால் தொடர்ந்து அப்படிப் போட்டுக்கொள்ளவில்லை கமல். கலைஞர் கருணாநிதி சூட்டிய ‘கலைஞானி’ பட்டம் சேர்ந்தது. பிறகு இந்த ‘நவரசநாயகன்’ என்கிற பட்டம் கார்த்திக் வசம் சென்றது. இன்றைக்கும் ‘நவரசநாயகன்’ என்றால் கார்த்திக் என்றும் ‘புரட்சிக்கலைஞர்’ என்றால் விஜயகாந்த் என்றும் மக்கள் மனதில் பச்சக்கென பதிந்துவிட்டது!